தியூலா மக்கள்

தியூலா மக்கள், மாலி, ஐவரி கோஸ்ட், கானா, புர்க்கினா பாசோ, கினி-பிசாவு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு மேற்காப்பிரிக்க நாடுகளில் வாழும் ஒரு இனக்குழு. இது பெரிய இனக்குழுவான மாண்டே இனக்குழுவின் ஒரு பகுதி. வெற்றிகரமான வணிகச் சாதியினரான தியூலா, 14ம் நூற்றாண்டில் இப்பகுதியில் பல வணிகச் சமுதாயங்களை நிறுவினர். வணிகம் பெரும்பாலும் முசுலிம்கள் அல்லாத ஆட்சியாளர்களின் கீழ் நடைபெற்றதால், முசுலிம் சிறுபான்மையினருக்கான இறையியல் கொள்கை ஒன்றை தியூலாக்கள் முசுலிம்கள் அல்லாத சமூகங்களில் வாழும் முசுலிம்களுக்காக உருவாக்கினர். தொலைதூர வணிகம், இசுலாமியப் புலமை, மதச் சகிப்புத்தன்மை போன்ற விடயங்களில் தியூலாக்களின் தனித்துவமான பங்களிப்புக்கள் மேற்கு ஆப்பிரிக்காவில் இசுலாத்தின் அமைதியான விரிவாக்கத்துக்கு வழிவகுத்தது.[1]

தியூலா
மொத்த மக்கள்தொகை
(Unknown)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மேற்கு ஆப்பிரிக்கா
மொழி(கள்)
மாண்டிங் மொழிகள்
சமயங்கள்
முதன்மையாக சுன்னி இசுலாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
மாண்டின்கா, பம்பாரா, மாலின்கே, சக்கான்கே

வரலாற்றுப் பின்னணி

தொகு
 
ஒரு தியூலா மனிதன், 1900

வட ஆப்பிரிக்க வணிகர்களுடனும், சோனின்கே மக்களுடனும் ஏற்பட்ட தொடர்புகளின் காரணமாக 13ம் நூற்றாண்டில் மாண்டேக்கள் இசுலாத்தைத் தழுவினர். 14ம் நூற்றாண்டளவில் உச்ச நிலையில் இருந்த மாலிப் பேரரசு (கிபி 1230 - 1600), அதன் ஆட்சியாளரின் இசுலாமியச் செயற்பாடுகளுக்காகவும், மக்கா யாத்திரை மேற்கொண்ட முதல் கருப்பு இளவரசரான லாகிலாத்துல் கலாபியின் மரபைப் பின்பற்றி அதன் பல பேரரசர்கள் மேற்கொண்ட மக்கா யாத்திரைகளுக்காகவும், பெயர் பெற்றிருந்தது. இக்காலத்திலேயே மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்த தங்க வயல்களுக்கு அண்மையில் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு உள்ளூர் வணிகர்களுக்கு மாலிப் பேரரசு ஊக்கமளித்தது. இந்தப் புலம்பெயர் வணிகர்கள் மாண்டின்கா மொழியில் "வணிகர்" என்னும் பொருள்படும் "தியூலா" என்னும் பெயரால் அழைக்கப்பட்டனர்.[2]

செனகம்பியாவின் அத்திலாந்தியக் கரையில் இருந்து நைகர் வரையிலும், சகாராவின் தென் விளிம்பில் இருந்து தெற்கிலுள்ள காட்டுப் பகுதிகள் வரையும் உள்ள முன்னைய மாண்டேப் பண்பாட்டுப் பகுதிகள் முழுதும் தியூலாக்கள் பரவினர். இவர்கள் முசுலிம் அல்லாத குடியேற்ரங்களில் பரவலாக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய நகரங்களை அமைத்தனர். இந்நகரங்கள் பரந்த வணிக வலைப்பின்னலில் இணைக்கப்பட்டிருந்தன. தவிக்கமுடியாத வணிகத் தேவைகளின் காரணமாக பல்வேறு உள்ளூர் ஆட்சியாளர்களின் பகுதிகளில் குடியேற்றங்களை அமைத்தனர். இக்குடியேற்றங்கள் பெரும்பாலும் தன்னாட்சி உரிமை கொண்டனவாக இருந்தன. தியூலா வணிகக் குழுக்களின் அமைப்பு, "லூ" எனப்படும் குலக்குழு-குடும்ப அமைப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இக்குழு தந்தை, அவர் மகன்கள், பிற ஆண்கள் ஆகியோரை உள்ளடக்கியிருந்தது. இக்குழுக்களின் உறுப்பினர்கள் புல்வெளிப் பகுதிகளில் இருந்து காட்டுப் பகுதிகளுக்குச் சென்று பொருட்களை வாங்கி வணிகத்தில் ஈடுபட்டனர்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Joshua Project. "Jula, Dyula in Cote d'Ivoire". joshuaproject.net.
  2. Shullington, Kevin (18 November 2004). Encyclopedia of African History (1 ed.). Routledge. p. 724. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57958-245-6.
  3. Kevin Shullington, Encyclopedia of African History Routledge; 1 edition (18 Nov 2004) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57958-245-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியூலா_மக்கள்&oldid=2697318" இலிருந்து மீள்விக்கப்பட்டது