திருக்கடித்தானம்
திருக்கடித்தானம் அல்லது திருக்கொடித்தானம் (Thrikodithanam Mahavishnu Temple) என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடப்பெற்ற இத்தலம் கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் சாலையில் அமைந்துள்ளது
திருக்கடித்தானம் மகாவிஷ்ணு கோயில் | |
---|---|
கேரளத்தில் அமைவிடம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளம் |
மாவட்டம்: | கோட்டயம் |
அமைவு: | கேரளம், இந்தியா |
ஆள்கூறுகள்: | 9°26′17″N 76°33′43″E / 9.438092°N 76.561998°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரளக் கட்டடக்கலை |
இணையதளம்: | http://www.thrikodithanamtemple.com/ |
பெயர்க்காரணம்
தொகுகடி என்ற சொல் கடிகை என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். 108 வைணவத் திருத்தலங்களில் கடி என்ற சொல்லைக்கொண்டு மூன்று தலங்கள் விளங்குகின்றன. அவைகள் திருக்கடிகை என்ற சோளிங்கபுரம், வடநாட்டுப் பகுதிகளுள் ஒன்றான கண்டமென்னும் கடிநகர், திருக்கடித்தானம் ஆகியன. கடிகை பொழுதில், ஒரு நாழிகையில் (நாழிகை என்பது 24 நிமிடம்) தூய்மையான கடுந்தவம் இந்தத் தலங்களில் மேற்கொண்டால் காரிய சித்தியும் வீடுபேறும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.[1]
தலவரலாறு
தொகுருக்மாங்கதன் என்ற சூர்ய வம்சத்து மன்னன் ஆட்சி செய்த இடமென்றும் இவனது நந்த வனத்தில் பூத்திருந்த மிக அழகான புஷ்பங்களை யாருக்கும் தெரியாமல் தேவர்கள் வந்து பறித்துச் சென்று எம்பெருமானுக்கு சூட்டி மகிழ்ந்தனர் என்றும், இவ்வாறு மலர்கள் மறைவதை அறிய முற்பட்ட மன்னன் தன் தபோவலிமையால் தேவர்களையும் தேவ மகளிர்களையும் மலர்கொய்ய வந்த விடத்து பிடித்துக்கொள்ள, தேவர்கள் விண்ணுலகம் (தேவருலகம்) செல்ல இயலாத நிலை ஏற்பட இதற்குப் மாற்று கோரி நிற்க, ருக்மாங்கதன் வருடந்தவறாமல் ஏகாதசி விரதம் இருந்து பெரும் பேற்றை பெற்றுள்ளதால், அதன் பயனை தேவர்கட்குக் கொடுத்தால்தான் அவர்கள் மீண்டும் தேவருலகம் செல்ல முடியுமென்று அசரீரி ஒலித்தது. அதுபோலவே ருக்மாங்கத மன்னன் தேவர்களை அழைத்து வந்து இத்தலத்து எம்பெருமான் முன்னே நிறுத்தி தனது ஏகாதசி விரதத்தின் பலனை அவர்கட்கு கொடுக்கவே அவர்கள் தேவருலகெய்தினார். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு கடிகை நேரத்தில் இத்தானத்தில் (தலத்தில்) நடந்ததால் இத்தலத்திற்குத் திருக்கடித்தானம் என்ற பெயர் உண்டாயிற்று.ஆனால் ருக்மாங்கதன் வடநாட்டு மன்னன் ஆவான் ஆயின் தென்னாடு பெற்ற மலை நாட்டின் பதிகளுள் திருக்கடித்தானத்திற்கு இக்கதை தொடர்பு படுத்திக் கூறப்படுகிறது என்பது ஆராய்ச்சிக்குரியதாகும்.[1]
இறைவன், இறைவி
தொகுஇத்தலத்தின் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அற்புத நாராயணன் பெயருடன் விளங்குகிறார்.இறைவியின் பெயர் கற்பகவல்லி என்பதாகும் இதலத் தீர்த்தம் பூமி தீர்த்தம். இதன் விமானம் புண்யகோடி விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது.
சிறப்புகள்
தொகுஇத்தலத்தில் அமைந்துள்ள நரசிம்மன், கிருஷ்ணன், சந்திரன் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகளும் அமைந்துள்ளன.பஞ்ச பாண்டவர்களுள் சகாதேவனால் இத்தலம் புதுப்பிக்கப்பட்டது. இங்குள்ள கிருஷ்ணன் சன்னதியை சகாதேவனே கட்டி முடித்தான். எனவே இந்தத் தலம் சகாதேவன் கட்டிய தலம் என்றே இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலின் மதில் சுவற்றில் காணப்படும் கல்வெட்டு ஒன்று வட்டெழுத்தில் உள்ளது. நம் தமிழ்மொழி வட்டெழுத்து நிலையில் இருந்த காலத்திலேயே இத்தலம் இருந்ததென்று அறியலாம். நினைத்த மாத்திரத்தில் முக்தி தரத்தக்க திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். காஷ்மீரத்து மொழியில் எழுதப்பட்ட நூலொன்றில் இந்தியாவிலேயே தலைசிறந்த 15 கிருஷ்ண சேத்திரங்களில் மூன்று ஷேத்திரங்கள் உடனடியாக முக்தியளிக்க வல்லதென்றும் அதில் இத்தலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தென்றும் கூறப்பட்டுள்ளது. நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களில் இத்தலம் பாடல்பெற்றுள்ளது. இங்கு ஒரு காலத்தில் எம்பெருமானுக்கு நடைபெற்ற திருவிழாக்களில் ஒன்றில் பெண்கள் குடைபிடித்து நடனமிடும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இடம் பெற்றிருந்தது. இக்கோவிலைச் சுற்றி சிதலமடைந்த மண்டபம், மற்றும் வெளிப்புற வாயிற் கதவருகேயுள்ள சுவர்ச் சிற்பங்களில் பெண்கள் குடைபிடித்து நடன மிடுதல் போல உள்ள காட்சிகளும் ஆய்வுக்குரியதாகும்.[1]