திருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 477-799
திருச்சபை வரலாற்றின் கால கட்டங்கள்
தொகுகத்தோலிக்க திருச்சபையின் வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான கால கட்டத்தை உள்ளடக்கியது. அதன் வரலாற்றுக் காலங்களைப் பின்வருமாறு பிரிக்கலாம்:
- திருச்சபை உருவாதல்: கிறிஸ்து பிறப்பு முதல் கி.பி. 33 வரை
- திருச்சபையின் தொடக்க காலம்: கி.பி. 34-312
- திருச்சபையின் தொடக்க காலம்: கி.பி. 313-476
- திருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 477-799
- திருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 800-1453
- திருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 1454-1600
- திருச்சபை வரலாற்றின் நவீன காலம்: கி.பி. 1600-1800
- திருச்சபை வரலாற்றின் நவீன காலம்: கி.பி. 19ஆம் நூற்றாண்டு
- திருச்சபை வரலாற்றின் தற்காலம்: கி.பி. 20ஆம் நூற்றாண்டு
- திருச்சபை வரலாற்றின் தற்காலம்: கி.பி. 21ஆம் நூற்றாண்டு
கி.பி. 477ஆம் ஆண்டு முதல் கி.பி. 799ஆம் ஆண்டு வரையிலான நிகழ்வுகள்
தொகு
- கி.பி. 480ஆம் ஆண்டு: மரபுப்படி, இந்த ஆண்டில் புனித ஆசிர்வாதப்பர் என்று அழைக்கப்படும் பெனதிக்து (St. Benedict) [1] பிறந்தார். இவர் மேற்கு கிறித்தவ வரலாற்றில் துறவியர் இல்லங்கள் உருவாக அடித்தளம் இட்டார். துறவியர் வாழ்க்கைமுறை [2] ஒழுங்குகள் வகுத்தார்.
- கி.பி. 496ஆம் ஆண்டு: ஃபிராங்கு இனத்தவராகிய முதலாம் குளோவிசு மன்னர் (Clovis I) [3] தம் மரபு சமயத்தை விட்டு, கத்தோலிக்க கிறித்தவ சமயத்தைத் தழுவுகிறார்.
- கி.பி. 502ஆம் ஆண்டு: போப்பாண்டவர் பதவிக்கு வாக்களிப்பதில் குருமார் அல்லாத பொதுநிலையினர் பங்கேற்கலாகாது என்றும், உயர்நிலைக் குருமார் மட்டுமே அந்த உரிமை கொண்டவர்கள் என்றும் சிம்மாக்கசு என்னும் போப்பாண்டவர் (Pope Symmachus) [4] சட்டம் இயற்றுகிறார்.
- கி.பி. 522: கோஸ்மாஸ் இண்டிக்கோப்ளூஸ்டெஸ் (Cosmas Indicopleustes) [பொருள்: "இந்தியப் பயணம் மேற்கொண்ட கோஸ்மாஸ்") என்னும் அலெக்சாந்திரிய நகர் துறவி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைப் பற்றி பல விவரங்கள் தருகின்றார்[5].
- கி.பி. 529ஆம் ஆண்டு: மன்னர் யுஸ்தீனியன் [6] தலைமையில் சட்டத் தொகுப்பு உருவாக்கப்படுகிறது. குடிமைச் சட்டத் தொகுப்பின் (Corpus Iuris Civilis) முதல் பகுதி வெளியிடப்படுகிறது. அதுவரை சிதறிக்கிடந்த சட்டங்களை ஒன்றிணைத்துத் திறமையாகத் தொகுத்தது வரலாற்றுச் சிறப்பான நிகழ்வு. அச்சட்டத் தொகுப்பு இன்றைய சட்டத் தொகுப்புகளுக்கு அடிப்படையாக உள்ளது.
- கி.பி. 533, சனவரி 2: மெர்க்கூரியசு என்பவர் போப்பாண்டவர் இரண்டாம் ஜான் (Pope John II) [7] என்னும் பெயரேற்று ஆளத் தொடங்குகிறார். இவரே வரலாற்றில் முதல்முறையாக ஆட்சிப் பெயர் ஏற்ற போப்பாண்டவர் ஆவார். பிசான்சிய மன்னர் யுஸ்தீனியன் போப்பாண்டவருக்குப் பரிசுகள் அளித்ததோடு, கிறித்தவ நம்பிக்கையில் நிலைத்திருப்பதாக உறுதியும் அளிக்கிறார்.
- கி.பி. 533ஆம் ஆண்டு: மன்னர் யுஸ்தீனியனின் குடிமைச் சட்டத் தொகுப்பின் இரண்டாம் பகுதி வெளியிடப்படுகிறது. மூன்றாம் பகுதி நடைமுறைக்கு வருகிறது.
- கி.பி. 536ஆம் ஆண்டு: மன்னர் யுஸ்தீனியனுக்குப் படைத் தளபதியாய் இருந்த பெலிசாரியுசு (Belisarius) என்பவர் உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதியை மீண்டும் கைப்பற்ற பெரும் துணை செய்கிறார் [8]. உரோமைப் பேரரசின் கீழைப் பகுதியாகிய பிசான்சியத்தின் முதன்மையான தளபதிகளுள் ஒருவர் பெலிசாரியுசு.
- கி.பி. 553ஆம் ஆண்டு: இரண்டாம் கான்ஸ்தாந்திநோப்புள் பொதுச்சங்கம் கூடுகிறது [9]. இச்சங்கம் அலெக்சாந்திரியா நகர் ஓரிஜன் (Origen of Alexandria)[10] என்னும் கிறித்தவ அறிஞரின் தவறான போதனைகளைக் கண்டனம் செய்கிறது. இதுவரை நடந்த நான்கு பொதுச்சங்கங்களின் போதனையை (நிசேயா [325]; முதலாம் கான்ஸ்தாந்திநோப்புள் [381]; எபேசு [431]; கால்செதோன் [451]) இச்சங்கம் உறுதிப்படுத்தியது.
- கி.பி. 590ஆம் ஆண்டு: போப்பாண்டவர் முதலாம் (பெரிய) கிரகோரி (Pope Gregory the Great) [11] பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். திருச்சபை அமைப்பு, நடைமுறை ஆகிவற்றில் சீர்திருத்தம் கொணர்கிறார். கிரகோரிய இசை (Gregorian Chant) [12] என்னும் இராக முறை இசையைப் பரவலாக்குகிறார்.
- கி.பி. 596ஆம் ஆண்டு: போப்பாண்டவர் பெரிய கிரகோரி இங்கிலாந்து நாட்டில் கிறித்தவ மறையைப் பரப்புவதற்காகக் கண்டர்பரி அகுஸ்தீன் [13] என்னும் பெனதிக்து சபைத் துறவியை அனுப்புகிறார். அவரோடு சில துறவியர் உட்பட இன்னும் 40 பேர் செல்கிறார்கள்.
- கி.பி. 638ஆம் ஆண்டு: இசுலாமியர் [14] கிறித்தவ எருசலேம் நகரையும் சிரியாவையும் கைப்பற்றுகிறார்கள்.
- கி.பி. 642ஆம் ஆண்டு: எகிப்து இசுலாமியர் கைவசம் ஆகிறது. தொடர்ந்து அவர்கள் வடக்கு ஆப்பிரிக்காவில் பரவுகிறார்கள்.
- கி.பி. 664ஆம் ஆண்டு: இங்கிலாந்திலுள்ள கெல்ட்டிக் திருச்சபை [15] கத்தோலிக்க சபையோடு இணைய விட்பி மன்றம் வழிவகுக்கிறது.
- கி.பி. 680ஆம் ஆண்டு: இயேசு கிறிஸ்துவிடம் இறை உளம் உண்டே ஒழிய மனித உளம் இல்லை[16] என்னும் தவறான கொள்கையை 3ஆம் காண்ஸ்தாந்திநோப்புள் பொதுச் சங்கம் கண்டிக்கிறது.
- கி.பி. 685ஆம் ஆண்டு: மரோனித்தர்[17] என்று அழைக்கப்படும் குழுவிலிருந்து யோவான் மரோன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தியோக்கியா நகருக்கும் கீழ்த்திசை சபைகள் அனைத்திற்கும் முதுபெரும் தந்தையாக நியமிக்கப்படுகிறார். அவர் முதலாம் செர்ஜியுசு என்னும் போப்பாண்டரின் ஒப்புதலைப் பெறுகிறார்.
- கி.பி. 698ஆம் ஆண்டு: முதலாம் செர்ஜியுசு என்னும் போப்பாண்டவர் வில்லிபுரோர்து[18] என்பவரை ஓலாந்து நாட்டு ஃபிரிசியர்களுக்கு ஆயராக நியமிக்கிறார். வில்லிபுரோர்து உட்ரெக்ட் நகரில் ஒரு கோவில் எழுப்புகிறார்.
- கி.பி. 711ஆம் ஆண்டு: இசுலாமியப் போர்ப்படைகள் எசுப்பானியா நாட்டின் மீது தாக்குதல் நிகழ்த்துகிறார்கள்[19].
- கி.பி. 718ஆம் ஆண்டு: இங்கிலாந்து நாட்டவரான புனித போனிஃபாசு[20] என்பவரை இரண்டாம் கிரகரி என்னும் போப்பாண்டவர் செருமனிக்கு அனுப்பி, அங்குக் கிறித்தவ மதம் பரவிட வழிவகுக்கிறார்.
- கி.பி. 726ஆம் ஆண்டு: உரோமைப் பேரரசின் கீழைப் பகுதியில் கிறித்தவப் புனிதர்களின் உருவச் சின்னங்களை அழிக்கும் செயல் தொடங்குகிறது [21]. இது கி.பி. 843 வரை நிகழ்கிறது.
- கி.பி. 732ஆம் ஆண்டு: இசுலாமியர் மேற்கு ஐரோப்பாவின்மீது ஆக்கிரமிப்பு நிகழ்த்துகிறார்கள். சார்லஸ் மர்த்தேல் என்னும் அரசன் இசுலாமிய ஆக்கிரமிப்பைப் ஃபிரான்சு நாட்டுப் புவாத்தியே நகர் அருகே தடுத்துநிறுத்துகிறார் [22].
- கி.பி. 751ஆம் ஆண்டு: பிசான்சிய பேரரசின் வெளி ஆட்சித் தளமாகிய ரவேன்னா நகரை லொம்பார்தியர் கைப்பற்றுகிறார்கள். இதனால் மத்திய இத்தாலியாவிலும் உரோமையிலும் பிசான்சியத்தின் ஆட்சி முடிவுக்கு வருகிறது.
- கி.பி. 756ஆம் ஆண்டு: போப்பாண்டவரை நாட்டுத் தலைவராகக் கொண்டு ஆளப்படுகின்ற போப்பாண்டவர் நாடு (Papal States) [23] உருவாகத் தொடங்குகிறது.
- கி.பி. 787ஆம் ஆண்டு: பெப்பினின் கொடை [24] என்னுன் செயல்பாடு வழியாக ஃபிராங்கு இனத் தலைவன் பெப்பின் போப்பாண்டவர்கள் தன்னாட்சி உரிமையோடு ஆளலாம் என்னும் சலுகையை அளிக்கின்றான்.
- கி.பி. 787ஆம் ஆண்டு: கிறித்தவ சமய உண்மைகளையும் புனிதர்களையும் ஓவியம், சிலை, படிம உருவம் ஆகிய ஊடகங்களில் சித்தரித்து மக்கள் வணக்கம் செலுத்துவது தவறல்ல எனவும், கடவுளுக்கு மட்டுமே முழுமுதல் ஆராதனை செலுத்தப்படுகிறது, சிலைகளுக்கு ஆராதனை வழங்கப்படுவதில்லை எனவும் இரண்டாம் நீசேயா பொதுச்சங்கம் தீர்மானம் நிறைவேற்றிகிறது.
- கி.பி. 793ஆம் ஆண்டு: விக்கிங்கி இனத்தார் கிறித்தவ ஐரோப்பாவைத் தாக்கத் தொடங்குகின்றனர். இங்கிலாந்துக்கு அருகிலுள்ள லிண்டிஸ்ஃபார்னே[25] தீவில் அமைந்த முக்கிய துறவியர் இல்லத்தை அழிக்கின்றனர்.
(தொடர்ச்சி): திருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 800-1453
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ புனித பெனதிக்து
- ↑ துறவியர் வாழ்க்கைமுறை
- ↑ முதலாம் குளோவிசு
- ↑ போப்பாண்டவர் சிம்மாக்கசு
- ↑ கோஸ்மாஸ் இண்டிக்கோப்ளூஸ்டெஸ்
- ↑ யுஸ்தீனியன் சட்டத் தொகுப்பு
- ↑ போப்பாண்டவர் இரண்டாம் ஜான்
- ↑ பெலிசாரியுசு
- ↑ இரண்டாம் கான்ஸ்தாந்திநோப்புள் பொதுச்சங்கம்
- ↑ அலெக்சாந்திரியா நகர் ஓரிஜன்
- ↑ போப்பாண்டவர் முதலாம் கிரகோரி
- ↑ கிரகோரிய இசை
- ↑ புனித கண்டர்பரி அகுஸ்தீன்
- ↑ இசுலாமியர்
- ↑ கெல்ட்டிக் திருச்சபை
- ↑ இயேசுவின் மனித இயல்பு
- ↑ மரோனித்தர் சபை
- ↑ வில்லிப்ரோர்து
- ↑ இசுலாமியர் தாக்குதல்
- ↑ புனித போனிஃபாசு
- ↑ உருவச் சின்னம் உடைப்பு
- ↑ சார்லஸ் மர்த்தேல்
- ↑ போப்பாண்டவர் நாடு
- ↑ பெப்பினின் கொடை
- ↑ லிண்டிஸ்ஃபார்னே துறவியர் இல்லம்