திருநாவுக்கரசுதேவர் திரு ஏகாதசமாலை

திருநாவுக்கரசுதேவர் திருவேகாதசமாலை என்பது ஒரு சைவ நூல். இது பதினோராம் திருமுறைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒன்று.

பட்டணத்துப் பிள்ளையார் திருவொற்றியூர் ஒருபா ஒருபது என்னும் நூலைப் பாடியுள்ளார். அந்த ‘ஒருபா ஒருபது’ என்னும் சிற்றிலக்கியமே இவரது நூலில் ‘ஏகதசமாலை’ என்னும் வடசொல் ஆக்கப்பெயர் பூண்டு வருகிறது.

திருநாவுக்கரசுதேவர் திருவேகாதசமாலை நூலின் ஆசிரியர் நம்பியாண்டார் நம்பி. இவர் வடமொழியிலும் புலமை மிக்கவர் என்பதை இவரது நூல்களில் காணலாம்.

காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பாதி. இராசராச சோழன் காலம்.

திருநாவுக்கரசுதேவர் என்பவர் திருநாவுக்கரசு நாயனார். நம்பியாண்டார் நம்பி இயற்றிய 10 நூல்களில் 6 நூல்கள் திருஞானசம்பந்தரின் புகழைப் பாடுபவை. இந்த நூல் அப்பர் புகழைப் பாடுகிறது.

இந்த நூலிலுள்ள வரலாறு சேக்கிழார் பெரியபுராணம் செய்ய உதவியது.

நூல் அமைதி

இந்த நூலில் 10 விருத்தப் பாடல்கள் உள்ளன. 11ஆம் பாடலாக உள்ள ஒரு விருத்தம் இணைப்பும் பாடல் போல உள்ளது. பத்துப் பாடல்கள் அந்தாதியாகத் தொடுக்கப்பட்டுள்ளன. பத்தாம் பாடல் முடிவை முதல் பாடல் முதலோடு அந்தாதியாக முடியப்பட்டுள்ளதால் இதற்கு மாலை என்னும் பெயர் ஆகுபெயராகச் சூட்டப்பட்டுள்ளது.

பாடல் பாங்கு
பதிகமே எழுநூறு பகருமா கவியோகி பகருநா வரசான பரமகா ரணவீசன்
அதிகைமா நகர்மேவி அருளினால் அமண்மூடர் அவர்செய்வா தைகள்தீரும் அனகன்வார் கழல்சூடின்
நிதியரா குவர்சீர்மை உடையரா குவர்வாய்மை நெறியரா குவர்பாதம் வெறியரா குவர்சால
மதியரா குவரீசன் அடியரா குவர்வானம் உடையரா குவர்பாரின் மனிதரா குவர்தாமே.

நாவரசு 700 பதிகம் பாடியவர். சமணர் செய்த வாதைகள் (வதக்கும் செயல்கள்) எல்லாவற்றையும் திருவதிகைச் சிவனருளால் தீர்த்துக்கொண்டவர். இவரது திருவடிகளை வணங்கியவர் நிதியர் ஆகுவர், சீர்மை-உடையர் ஆகுவர், வாய்மை-நெறியர் ஆகுவர், பாதவெறியர் ஆகுவர், சாலவும் மதியர் ஆகுவர், ஈசன் அடியர் ஆகுவர், வானம் உடையர் ஆகுவர், பாரின் மனிதராகுவர்

காலம் கணித்த கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005

அடிக்குறிப்பு

தொகு