திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி, எடிசன், நியூ ஜெர்சி
திருவள்ளுவர் தமிழ் பள்ளி என்பது அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம், மிடில்செக்ஸ் கவுண்டி, எடிசன் நகரியத்தில், "சேர்ந்து வளர்ப்போம் செந்தமிழ்ப் பயிரை" என்ற குறிக்கோளுடன், இலாப நோக்கற்ற இலாப நோக்கற்ற தமிழ்க் கல்விக்கான தொண்டு நிறுவனமாகும். (non-profit organization). [1] [2] நியூ ஜெர்சி மாநிலத்தில் தமிழ் மொழி கற்கும் குழந்தைகள், பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களுக்கு இரண்டாம் மொழிக் கற்றலுக்கான மதிப்பீட்டுப் புள்ளிகளைப் பெறுதல் (accreditation) என்ற தொலை நோக்குத் திட்டத்துடனும், அமெரிக்க சூழ்நிலைக்கேற்ற எளிமையான முறையில் பொதுப் பாடத்திட்டத்துடன் (common structure syllabus) கூடிய தமிழ்க் கல்வியை அளித்தல் என்ற உடனடித் திட்டத்துடனும் எடிசன் நகரில் நடத்தப்படுகின்றது. [1]
அமெரிக்காவில் தமிழ் மொழிக் கல்வி வரலாறு
தொகுஅமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் குழந்தைகளுகான தமிழ் மொழிக் கல்வி வளர்ச்சி
தொகுஅமெரிக்காவின் பல மாநிலங்களில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வசித்த போதிலும் நியூ ஜெர்ஸி, நியூ யார்க், கலிபோர்னியா, டெக்ஸாஸ், ஜார்ஜியா, இலியனாய்சு, ஃப்ளோரிடா, வாசிங்டன் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் வசிக்கிறார்கள். 1995 ஆம் ஆண்டிற்கு முன் புலம்பெயர்ந்த தமிழக குடும்பங்களின் குழந்தைகளுக்கு தமிழ்க் கல்வி வீட்டிலேயே புகட்டப்பட்டது. அப்போது முறையாகக் கட்டமைக்கப்பட்ட தமிழ்ப் பள்ளிகளோ, தமிழ் மொழி பாடத்திட்டங்களோ இல்லை. கணிப்பொறி தொழில்நுட்பத் துறையில் வேலை செய்வதற்கு பெரும் எண்ணிக்கையில் தமிழக் குடும்பங்கள் அமெரிக்காவில் குடியேறினர். தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் மொழி கற்றுத்தருவதன் மூலம் தங்கள் மொழி மற்றும் மரபின் வேர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று இவர்கள் நம்பினர். எனவே இக்குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்க வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டது. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் பல மாநிலங்களில் தமிழ்ச் சங்கங்களும் தமிழ்ப் பள்ளிகளும் தொடங்கப்பட்டன. கோவில்கள், சமூக மையங்கள், தனியார் வீட்டின் நிலவறைகள் போன்றவற்றில் தன்னார்வலர்களால் தமிழ் மொழி வகுப்புகள் நடத்தப்பட்டன. முறைப்படுத்தப்பட்ட பாட திட்டங்களோ, பாடபுத்தகங்களோ இல்லை.[3]
அமெரிக்கப் பொதுப் பள்ளிகளில் இரண்டாம் மொழிக் கல்வி
தொகுபுலம்பெயர்ந்த தமிழ்க் குழந்தைகள் படித்த அமெரிக்கப் பொதுப் பள்ளிகளில் முதனமை மொழியாக ஆங்கிலம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் மொழி என்பது நடுநிலைப் பள்ளிகளில் விருப்பப் பாடமாகவும் மேல்நிலையில் கட்டாயப் பாடமாகவும் இருக்கிறது. பல பள்ளி மாவட்டங்கள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள உயர்நிலைப்பள்ளிகளில் வெளிநாட்டு மொழி ஒன்றினை கற்பிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளன. பெரும்பாலும் ஸ்பானிஷ், பிரஞ்சு, ஜெர்மன், லத்தீன், ரஷ்ய மற்றும் இத்தாலிய மொழிகள் அமெரிக்க உயர்நிலைப் பள்ளிகளில் வெளிநாட்டு மொழிகளாகக் கற்பிக்கப்படுகின்றன, சில பள்ளி மாவட்டங்கள் மண்டாரின், அரபி, பெர்சியன், சமசுகிருதம், இந்தி, தமிழ் ஆகிய வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்ளவும் அனுமதிக்கின்றன.[3]
அமெரிக்கப் பொதுப் பள்ளிகளில் தமிழ் மொழிக் கல்வி: சிக்கல்கள்
தொகுதமிழ் என்னும் ஒரு வெளிநாட்டு மொழியை இரண்டாம் மொழியாகக் கற்பது முற்றிலும் பள்ளி மாணவர்களின் தனிப்பட்ட விருப்பம் ஆகும். தமிழை இரண்டாவது மொழியாகப் பயிற்றுவிக்கும் வசதியோ, தமழ் மொழி பயிற்றுவிக்கும் ஆசியர்களோ அமெரிக்கப் பள்ளிகளில் இல்லை.
முதன்மை மொழியான ஆங்கிலத்துடன் ஒப்பிடுகையில், தமிழ் மொழி கற்றுக்கொள்வதைச் சிக்கல் மிக்கதாகத் தமிழ்க் குழந்தைகள் உணர்ந்தனர். அதிக அளவிலான தமிழ் எழுத்துக்கள், சற்று கடினமான தமிழ் இலக்கணம், எழுத்து மொழிக்கும் பேச்சு மொழிக்கும் இடையேயான வேறுபாடு போன்ற காரணிகள் தமிழ்க் குழந்தைகளுக்கு மனச்சோர்வினைத் தோற்றுவித்தன. இது போன்ற மொழிக் கல்விச் சிக்கல்களை எல்லாம் எதிர்கொண்டு சில மாணவர்கள் முறைமைப் படுத்தப்படாத தமிழ்க் கல்வியைப் எட்டு ஆண்டுகளாகப் பயின்று வந்தனர். இவ்வாறு தமிழ் படித்த மாணவர்கள் அமெரிக்க நாட்டுக் கல்லூரிகளில் சேர்ந்து உயர் கல்வி கற்ற போது, பிற வெளிநாட்டு மொழிகளை இரண்டாம் மொழியாகத் தேர்வு செய்து கற்றவர்களைப் போல போதிய சலுகைகள் கிடைக்கவில்லை. வேலை வாய்ப்பிலும் எவ்வித முன்னுரிமை கிடைக்காத நிலையே தொடர்ந்தது நீடித்தது.[3]
தமிழ் மொழிக் கல்வியை தரநிலைப் படுத்திய கல்விக் கழகங்கள்
தொகுஇந்தச் சிக்கல்களையெல்லாம் சரி செய்ய பல்வேறு முயற்சிகள் பல்வேறு தமிழ்ப் பள்ளிகளிகளின் தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்கக் கல்விச் சூழலில் கல்வி பயிலும் தமிழக குழந்தைகளின் தேவைகளுக்கேற்ப பாடத்திட்டங்களும், பாடநூல்களும், பயிற்று கருவிகள் (Teaching Equipment) போன்றவை உருவாக்கப்பட்டன. குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத்தர தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது தரப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்களை கட்டமைத்து பல்வேறு தமிழ்ப் பள்ளிகளைத் தங்களுடன் இணைத்துக்கொண்டு (Affiliation) தமிழ் மொழிக் கல்வியினை வழங்கும் அமைப்புகள் இரண்டு:
- 1. அமெரிக்க தமிழ் அகாடமி (American Tamil Academy (ATA), முகவரி: 8611 கான்கார்ட் மில்ஸ் பொலிவர்டு. #440, கான்கார்ட் NC 28027-5400. தோற்றம்: 2010. உறுப்புப் பள்ளிகள்: 100 க்கும் மேல்.[4]
- 2. உலகத் தமிழ்க் கல்விக் கழகம் (International Tamil Academy (ITA), (பழைய பெயர்: கலிபோர்னியா தமிழ் அகாடமி California Tamil Academy (CTA), முகவரி: 14435 சி பிக் பேசின் வழி #179 சரடோகா, CA 95070-6091. கிளைகள்: 8, உறுப்புப் பள்ளிகள் 81[5]
இவை தவிர சிங்கப்பூர் கல்வி அமைச்சின் தமிழ்ப் பாடத் திட்ட வரைவுப் பிரிவு உருவாக்கிய தமிழ்மொழி பாடத்திட்டம், [6] தமிழ்நாட்டின் சமச்சீர் கல்வி பாடத்திட்டம், தமிழ் இணையக் கல்விக் கழகம் (TVA) பாடத்திட்டம்[7], மினிசோட்டா தமிழ்ப் பள்ளி பாடத்திட்டம்[8] மற்றும் பொள்ளாச்சி நசனின் 32 அட்டையுடன் தமிழ் பயிற்றுவிக்கும் முறை, [9][10] பிற உள்நாட்டுப் பாடத்திட்டங்களின் பல்வேறு பாடத்திட்டங்களை சில தமிழ்ப் பள்ளிகள் பயன்படுத்துகின்றன. [3]
தமிழ் மொழிக் கல்வி கற்கும் குழந்தைகளுக்குச் சாதகமாக சில நல்ல மாற்றங்கள் தொடங்கியுள்ளதை இங்கு குறிப்பிடலாம். இரண்டாம் மொழி படிப்பவர்களுக்கு வழங்கப்படும் புள்ளிகளில் (கிரெடிட்) ஒரு பகுதியை தமிழ் படிப்பவர்களுக்கு வழங்க சில மாநிலங்களும் அவற்றின் கல்வி மாவட்டங்களும் முன்வந்துள்ளன. உலகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் உயர்நிலைப் பள்ளி புள்ளித் திட்டம் (High School Credit Program (HSCP) என்பது அமெரிக்கப் பள்ளிகளின் இரண்டாம் மொழிக் கல்வித் தேவைகளை நிறைவேற்றுவதற்காக தமிழ் மொழி வகுப்புகளை நடத்துவதாகும். ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்ச் மொழிகளைப் போன்றே நான்கு நிலைகள் கொண்ட தமிழ் வகுப்பினை இக்கழகம் நடத்தி வருகிறது.[11]
வெளிநாட்டு மொழியை கற்பிப்பதற்கான அமெரிக்க கவுன்சில் நிறுவனம் (American Council for Teaching Foreign Language (ACTFL) மொழித்திறனைச் சோதிப்பதற்கான மதிப்பீட்டுக் கோட்பாடுகளை வகுத்துள்ளது. இதன்படி தகுதிமிக்க ஆசியர்களால் மாணவர்களின் மொழி அறிவினைச் சோதிக்கவும், சோதனையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இருமொழி முத்திரை (Seal Of Bi-literacy) என்னும் அங்கீகாரத்தை வழங்கும் திட்டத்திற்கு இருமொழி முத்திரை வழங்கும் திட்டம் என்று பெயர். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அவர்களது மாநிலக் கல்வித்துறை வழங்கும் முத்திரை இருமொழி முத்திரை ஆகும். மேல்நிலைப் பள்ளியின் இறுதி வகுப்பில் ஆங்கில மொழி தவிர இரு மொழிக்கான தேர்வில் தேர்ச்சியடையும் மாணவர்களுக்கான ‘இருமொழிக் கல்வி முத்திரையினை’ வழங்க கலிபோர்னியா மாநிலம் முன்வந்துள்ளது. இம்மாநிலத்தின் இரு மொழிகளுக்கான விருப்பத் தேர்வுப் பட்டியலில் தமிழ் இடம்பெற்றுள்ளதை குறிப்பிடலாம்.[12][13]
திருவள்ளுவர் தமிழிப் பள்ளியில் தமிழ் மொழிக் கல்வி
தொகுபுலம்பெயர்ந்து வாழும் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் இப்பள்ளியில் தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், தங்கள் வழக்கமான பள்ளி நேரங்களைத் தவிர, விடுமுறை நாட்களில், வேடிக்கையான செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுகள் மூலம் மொழியைப் படிக்கவும், எழுதவும், உரையாடவும் கற்றுக்கொள்கிறார்கள். தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வது மட்டுமின்றி, இசை, பாட்டு, நடனம், நாடகம், போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் தமிழ் மரபினை விளங்கிக்கொள்ளவும் முடிகிறது.
திருவள்ளுவர் தமிழ் பள்ளி உலகத் தமிழ்க் கல்விக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்டமைக்கப்பட்ட முறைமை (Structured Methodology) மற்றும் பாடநூல்கள், பயிற்சி ஏடுகள், செய்பணித்தாள்கள் (Worksheets), போன்றவை இங்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு முன் வரையறுக்கப்பட்ட பாடப் பாடத்திட்டத்தைப் பின்பற்றி நியூஜெர்சி மாநிலத்தில் தரப்படுத்தப்பட்ட முதல் தமிழ்ப் பள்ளி திருவள்ளுவர் தமிழ் பள்ளியாகும். [14]
வரலாறு
தொகுபத்தாண்டுகளுக்கு முன்னர், எடிசன் பகுதியில் பிறமொழியினர், குறிப்பாக சீனர்கள், ஒரு பள்ளிக்கட்டிடத்தையே வாடகைக்கு எடுத்துக்கொண்டு மொழி வகுப்புகளை நடத்தியுள்ளார்கள். எடிசன் பகுதியில் பல புலம்பெயர்ந்த தமிழ் குடும்பங்கள் வசித்த போதிலும், தங்களுக்கென்று தமிழ் மொழி பயிற்றுவிக்கும் பள்ளியின் தேவையை உணர்ந்தனர். ஆர்வமுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டின் நிலவறைகளிலும், உணவருந்தும் அறைகளிலும் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் வகுப்புகள் நடத்தினர்..ஒரு கூட்டு வழிபாட்டின்போது இது பற்றி விரவாகப் பேசப்பட்டது. மற்ற தமிழ் அமைப்புகளுடன் இணைந்து தமிழ் பள்ளியைத் தொடங்காமல் தனி அமைப்பாகவே ஒரு தமிழ் பள்ளி தொடங்கும் முடிவு எட்டப்பட்டது. திருமதி. கார்த்திகா சிவகுமார் இப்பள்ளிக்கு இட வசதி தேவையான ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த இடத்தில் வகுப்புகள் தொடங்கப்பட்டன.[15]
2010 ஆம் ஆண்டு 65 குழந்தைகள் மற்றும் 12 தன்னார்வலர்களுடன் திருவள்ளுவர் தமிழ் பள்ளியில், பள்ளிக்குப் பின் தமிழ் கல்வி கற்பித்தல் என்ற அடிப்படையில், தமிழ் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இப்பள்ளியினை திறம்பட நடத்துவதற்கு பல தன்னார்வலர்கள் முழு ஒத்துழைப்பு நல்கினர்.[15]
2020 ஆம் ஆண்டில் 700 மாணவர்கள் தமிழ் பள்ளி வகுப்புகளில் சேர்ந்து கற்று வருவதாக வலைத்தளத்தில் உள்ள புள்ளி விபரம் குறிப்பிட்டுள்ளது. 100 ஆசிரியர்கள், 10 - 15 மாற்று ஆசிரியர்கள், 10 நிர்வாகிகள் என்று மொத்தம் 125 தன்னார்வலர்கள் தமிழக கல்விப் பணியில் ஈடுபட்டுள்ளனர். [15]
பள்ளி பற்றிய முக்கிய தகவல்கள்
தொகு- தாமஸ் ஜெபர்சன் நடுநிலைப் பள்ளியில் , (முகவரி: 450 பிரிவு செயின்ட், எடிசன், NJ 08817) வகுப்பறைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு, பாதுகாப்பான சூழலில், தமிழ் வகுப்புகள், வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 03.30 மணி முதல் 04.30 வரை நடைபெறுகின்றன. [16]
- சாந்தி தங்கராஜ் பள்ளி முதல்வராகவும்,. லட்சுமி சுந்தரராஜன் துணை முதல்வராகவும், செந்தில்நாதன் முத்துசாமி பர்ஸாராகவும் பணியாற்றி வருகின்றனர். [17] சாந்தி தங்கராஜ், செந்தில்நாதன் முத்துசாமி , கார்த்திகா என் பழனிசாமி, சதாசிவம் ஜெயராமன், ஆனந்த் நடராஜன் ஆகிய ஐவர் அறங்காவலர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். [18]
- வருடந்தோறும் 4 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் வெவ்வேறு தர நிலைகளில் இப்பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். கல்வியாண்டின் செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் இப்பள்ளி தொடங்கப்பட்டு ஜூன் மாதம் இரண்டாம் வாரம் வரை இப்பள்ளி நடைபெறுகிறது. [16]
- மாணவர்கள் ஊடாடும் விளையாட்டுகள், கதைகள், பாடல்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் வேடிக்கையான முறையில் தமிழ் கற்றுக்கொள்கிறார்கள். சனிக்கிழமை தோறும் மாலை 03:00 மணி முதல் 04:30 மணி வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. வாரத்திற்கு 1 1/2 மணி நேர வகுப்புகள் வீதம் வருடத்திற்கு சுமார் 30-32 வகுப்புகள் நடைபெறுகின்றன. [16]
- முன் அறிவு, வயது மற்றும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் கீழ்க்கண்டவாறு நான்கு குழுக்களாகப் பகுக்கப்பட்டுள்ளனர்:
- பாலர் 1 & 2 (வயது 3 & 4) - கழிப்பறை பயிற்சி பெற்றிருக்க வேண்டும்
- அடிப்படை 1 & 2 (வயது 5 மற்றும் அதற்கு மேல்)
- மேம்பட்ட அடிப்படை (வயது 7 மற்றும் அதற்கு மேல் - புதியவர்)
- தரம் 1 முதல் 7 வரை (வயது 7 மற்றும் அதற்கு மேல்) [14]
- 5:1 முதல் 7:1 வரையிலான மாணவர்/ஆசிரியர் விகிதம் கொண்ட வகுப்பறை முறைமை. ஒரு வகுப்பறையில் அதிகபட்சம் 15 மாணவர்கள். பாலர் பள்ளி இவ்விகிதம் 5:1 ஆக இருக்கும். [14]
- இவர்களிடமிருந்து ஆண்டிற்கு $225 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உலகத் தமிழ் கல்விக் கழகத்தின் (கலிபோர்னியா) பாடநூல்கள் மற்றும் DVD ஆகியன இப்பள்ளி மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. [16] மேம்பட்ட நிலை மாணவர்கள் 2 வது பாடநூல் தொகுப்பிற்கு (2nd of set of books) கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. [14]
- தங்கள் குழந்தைகளின் முன்னேற்றம் மற்றும் அறிக்கைகளைக் கண்காணிக்க இணைய அடிப்படையிலான வலைத்தளக் கட்டுப்பாட்டகத்தை (Web based Dashboard) பெற்றோர்கள் அணுகலாம். [14]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Home Thiruvalluvar Tamil School
- ↑ "சேர்ந்து வளர்ப்போம் செந்தமிழ்ப் பயிரை".. எடிசன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் கோலாகல ஆண்டு விழா Sutha One India. June 8, 2018
- ↑ 3.0 3.1 3.2 3.3 தலைமுறை தாண்டி அமெரிக்காவில் தமிழ்மொழிக்கல்வி Dinamalar மே 02,2022
- ↑ ATA – Member Schools American Tamil Academy
- ↑ Schools உலகத் தமிழ்க் கல்விக் கழகம்
- ↑ Language education in Singapore Wikipedia
- ↑ Course Details தமிழ் இணையக் கல்விக் கழகம்
- ↑ MNTS Syllabus
- ↑ 30 நாள்களில் தமிழ் தமிழம்
- ↑ Tech’ing Tamil tuitions The New Indian Express March 11, 2021
- ↑ High School Credit Program (HSCP) உலகத் தமிழ்க்கல்விக் கழகம்
- ↑ அமெரிக்காவில் தமிழ்: கடமை தவறிய தமிழகம் இந்து தமிழ் திசை Aug 23, 2018
- ↑ அமெரிக்காவில் இருமொழிக் கொள்கையில் தமிழுக்கு அங்கீகாரம் தினமலர் ஜூன் 29, 2016
- ↑ 14.0 14.1 14.2 14.3 14.4 About Us
- ↑ 15.0 15.1 15.2 Thiruvalluvar Tamil School, Edison, NJ - Graduation 2020 Thiruvalluvar Tamilschool YouTube
- ↑ 16.0 16.1 16.2 16.3 Thiruvalluvar Tamil School, Edison, New Jersey பரணிடப்பட்டது 2022-07-31 at the வந்தவழி இயந்திரம்Google Site
- ↑ Our Volunteers Thiruvalluvar Tamil School
- ↑ Thiruvalluvar Tamil School Inc Intellispect Co
வெளி இணைப்புகள்
தொகு- Thiruvalluvar Tamil School, Edison, NJ - Graduation 2020 Thiruvalluvar Tamilschool YouTube
- American Tamil Academy Press Meet Volume 1 American Tamil Academy YouTube
- American Tamil Academy Press Meet Volume 2 American Tamil Academy YouTube