திரைப்படத் திறனாய்வு

திரைப்படத் திறனாய்வு என்பது திரைப்படங்களைத் தனித்தனியாகவும், ஒன்றாகவும் பகுத்தாய்ந்து மதிப்பிடுவதைக் குறிக்கும். பொதுவாகத் திரைப்படத் திறனாய்வை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று ஊடகத் திறனாய்வு. இது செய்தித் தாள்கள், பிற மக்கள் ஊடகங்களில் ஒழுங்காக இடம்பெறுபவை. மற்றது துறைசார் அறிஞர்களால் திரைப்படக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப் படும் கல்விசார் திறனாய்வுகள். இது பெரும்பாலும் கல்விசார் ஆய்விதழ்களில் வெளிவருகின்றன.

ஊடகத் திறனாய்வு

தொகு

செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், ஒலிபரப்பு மற்றும் ஒளிபரப்பு ஊடகங்கள், இணைய வெளியீடுகள் போன்றவற்றைச் சார்ந்த திரைப்படத் திறனாய்வாளர்கள் பெரும்பாலும் புதிய வெளியீடுகளையே திறனாய்வு செய்கின்றனர். செல்வாக்குள்ள ஊடகங்களில் வெளியாகும் திறனாய்வுகள் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதா இல்லையா என மக்கள் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இதன் காரணமாக இவ்வகைத் திறனாய்வுகள் ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்விகளை முடிவு செய்ய வல்லவையாக இருக்கின்றன.

கல்விசார் திறனாய்வு

தொகு

திரைப்படங்கள் தொடர்பான கல்விசார் திறனாய்வுகள் திரைப்படக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகின்றன. இவ்வகைத் திறனாய்வுகள் ஒரு திரைப்படம் ஏன் சரியாக வருகிறது, எப்படிச் சரியாக வருகிறது, அது குறிக்கும் பொருள், அது மக்கள்மீது கொண்டிருக்கும் தாக்கம் போன்ற விடயங்களைப் புரிந்துகொள்ள முயல்கின்றன. இவ்வாறான திறனாய்வுகள் பொதுவாக மக்கள் ஊடகங்களில் இடம்பெறுவது இல்லை. இவை கல்விசார் ஆய்விதழ்களில் அல்லது புலமைசார் கலை இலக்கிய வாசகர்களைக் கொண்ட இதழ்களில் வெளியாகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரைப்படத்_திறனாய்வு&oldid=1545187" இலிருந்து மீள்விக்கப்பட்டது