தீபங்குடி தீபநாயகசுவாமி ஜினாலயம்
தீபங்குடி தீபநாயகசுவாமி ஜினாலயம் அல்லது தீபநாயகசுவாமி ஜைன ஆலயம்[1] திருவாரூர் மாவட்டத்தில் கும்பகோணம்-திருவாரூர் சாலையில், அரசவனங்காடு என்னுமிடத்திற்கு மேற்கே அமைந்துள்ளது. சோழ நாட்டில் கரந்தட்டாங்குடி, கும்பகோணம், மன்னார்குடி ஆகிய இடங்களில் சமணர் கோயில்கள் உள்ளன.[2][3]
கோயில் அமைப்பு
தொகுஇராஜகோபுரம், கருவறை, விமானம், அர்த்தமண்டபம், முகமண்டபம், மகாமண்டபம், கொடி மரம் ஆகிய அங்கங்களை இக்கோயில் கொண்டுள்ளது. மூன்றுநிலைகளைக் கொண்டுள்ள இராஜகோபுரத்தில் தீர்த்தங்கரர்களின் சுதைச்சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. விமானத்தின் அதிட்டானத்தில் உபபீடம், பீடம், குமுதம், பட்டிகை, உள்ளிட்ட அங்கங்கள் இடம்பெற்றுள்ளன. அர்த்தமண்டப நுழைவாயிலில் வாயிற்காப்போர் சிற்பங்கள் உள்ளன. அவர்களின் அருகே தீர்த்தங்கரரின் நின்ற கோலத்திலான செப்புத்திருமேனி உள்ளது. மகாமண்டப நுழைவாயிலிலும் இரு வாயிற்காப்போர் சிற்பங்கள் உள்ளன. மண்டபத்தின் வலப்புறம் ஸ்ருதஸ்கந்தம், சாசனதேவர், சாசனதேவி, சேத்திரபாலர், தீர்த்தங்கரர் ஆகியோரை வணங்கலாம். தர்மதேவி, ஆதிநாதர், ஜ்வாலாமாலினி, பிரம்மதேவர், சேத்திரபாலர் ஆகியிருக்க தனி சன்னதிகள் உள்ளன. இராஜகோபுரத்தின் அருகே மடம் உள்ளது.[4]
மூலவர்
தொகுஇந்த கோயிலின் மூலவர், சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரரான ஸ்ரீ ரிஷபநாதர் ஆவார். அவர் தீபநாயகசுவாமி அல்லது தீபநாதர் என்ற பெயரிலும் வணங்கப்படுகிறார். பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் உள்ள தீபநாதர் சிலை 11ஆம் நூற்றாண்டுக்கும் முந்தையதாகும்.[4]
கல்வெட்டு
தொகுகோவிலில் ஒரு பழைய கல்வெட்டு உள்ளது, கோயில் எவ்வாறு கட்டப்பட்டது என்பது பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவிலின் வரலாறு
தொகுஉள்ளூர் புராணங்களின்படி, ஸ்ரீ ராமரின் இரண்டு மகன்கள், இலவன் மற்றும் குசன் ஆகியோர், ஸ்ரீ ரிஷபநாதரிடம், அயோத்தி செல்லும் வழியில் பிரார்த்தனை செய்து ஒரு விளக்கு ஏற்றி வைத்தனர். இயற்கை பேரழிவுகள் காரணமாக, கோயில் அழிக்கப்பட்ட பின்னரும் இந்த விளக்கு எரிந்து கொண்டிருந்ததாம். அப்போதிருந்து ஸ்ரீ ரிஷாபாதேவர் இங்கு தீபநாதராக வணங்கப்படுகிறார், கிராமத்தின் பெயர் தீபங்குடி என்றும் மாறியது. இந்த கிராமம் ஒரு காலத்தில் ஏராளமான புனித இலக்கியங்களை எழுதிய கவிஞர்களைக் கொண்டிருந்தது என்று கூறப்படுகிறது. அத்தகைய புகழ்பெற்ற கவிஞர்களுள் ஓருவர் ஜெயம்கொண்டர் ஆவார். அவர் தீபங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் முதலாம் குலோத்துங்க சோழர் மேற்கொண்ட கலிங்கத்துப் போர் குறித்து எழுதிய கலிங்கத்து பரணி மிகவும் புகழ்பெற்றது. இந்த கோயில் சோழர் கட்டிடக்கலை பின்பற்றிக் கட்டப்பட்டுள்ளது.
கோவிலின் தற்போதைய நிலை
தொகுசுதந்திரத்திற்குப் பிறகு, இந்த கோயில் இந்து மத மற்றும் அறக்கட்டளைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது, கோயிலை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு நல்கும் ஆதரவு மிகக் குறைவு. கோயிலுடன் இணைந்திருந்த நிலங்கள் அனைத்தும் இப்போது அரசாங்கத்திடம் உள்ளன, அரசு வழங்கும் நிதி கோவிலை நடத்தப் போதுமானதாக இல்லை.
கிராமத்தில் உள்ள உள்ளூர் சமணர்கள் ஸ்ரீ தீபநாயகசுவாமி சேத்ரா சேவா சங்கம் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கியுள்ளனர். யாத்ரீகர்களிடமிருந்து நன்கொடைகள் மற்றும் அவர்களது சொந்தமாக, கோவில் செலவுகள் மற்றும் பிராந்தியத்தில் எந்தவொரு சமூக நடவடிக்கைகளையும் நிர்வகிக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.
இக்கோவில் 2014 ஆம் புதுப்பிக்கப்பட்டது
கோவில் வளாகத்திற்கு அருகில் விருந்தினர் விடுதிகள் இல்லை. இங்கு வரும் யாத்ரீகர்கள் உள்ளூர் சமணர்களால், தங்கள் வீடுகளில் தங்குவதற்கு வரவேற்கப்படுகிறார்கள். எதிர்காலத்தில் விருந்தினர் மாளிகை கட்டவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
வழிபாடு
தொகுஜினாலயத்தில் பருவ விழாக்கள், பண்டிகைகள் என அனைத்தும் நடைபெறுவதோடு கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழக சமணர்கள் ஒன்றுகூடி 1008 தீபங்கள் ஏற்றி ஞான தீபத்திருவிழா கொண்டாடுகின்றனர்.[5]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ F.R.Hemingway, Tanjore District Gazetteer, Government Press, Madras, 1906, p.237
- ↑ http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=12
- ↑ மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிட், சென்னை, மூன்றாம் பதிப்பு 2000
- ↑ 4.0 4.1 G.Thillai Govindarajan, Jainism in Thanjavur District Tamil Nadu, Nehru Trust for the Indian Collections at the Victoria & Albert Museum, New Delhi, 110 001, May 2010
- ↑ சமணத் திருத்தலங்கள் (சோழ மண்டலம்), ஆதிபகவன் சமணர் சங்கம், 53/22, ஜவுளிசெட்டித்தெரு, தஞ்சாவூர் 613 009, 2009