தீ எச்சரிக்கை அமைப்பு

தீ எச்சரிக்கை அமைப்பு (fire alarm system) எனப்படுவது வணிக, அலுவலகக் குடியிருப்பு, தொழிற்சாலைகள் ஆகியவற்றில் ஏற்படும் தீ விபத்துகளைக் கணித்து எச்சரிக்கை செய்ய உதவும் ஒரு தானியங்கி மின்னணு அமைப்பு ஆகும். தீ எச்சரிக்கை அமைப்புகள் பொருத்தப்பட்டிருக்கும் இடங்களில் தீ விபத்துகள் ஏற்படும்பொழுது இவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒலிப்பான்கள் அதிக அழுத்த ஒலியை எழுப்பி மக்களை எச்சரிக்கை செய்கின்றன. பெரும்பாலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொருத்தப்படும் இவை, தானியங்கி, மனித தூண்டல் என்பனவற்றின் மூலம் இயங்கவல்லன. மையக்கட்டுப்பாட்டு அமைப்பு, கணிப்பான் அமைப்பு, எச்சரிக்கை அமைப்பு ஆகிய மூன்று அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு இவை செயற்படுகின்றன.மக்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் அந்த நிகழ்வு அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் சென்றோடையும் அளவிற்கு இன்று அறிவியல் வளர்ந்து இருக்கிறது

தீ எச்சரிக்கை அமைப்பு எச்சரிக்கை அலறி

அமைப்பு

தொகு
 
மாதிரி மையக்கட்டுப்பாட்டு அமைப்பு

இதில் கணிப்பு, எச்சரிக்கை அமைப்புக் கருவிகள் ஒருங்கே ஒரு வளைசுற்றின் (loop) மூலமாக மையக்கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும். இதே போல பல வளைசுற்றுகள் ஒரே மையக்கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும். மேலும் இதில் இணைக்கப்படும் ஒரு வளைசுற்றானது ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாகப் பத்து மாடிகள் கொண்ட ஒரு கட்டடத்திற்கு மாடிக்கு ஒன்றாகப் பத்து வளைசுற்றுகள் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தீ விபத்து ஏற்படும்பொழுது, அந்தக் குறிப்பிட்ட பகுதியை மட்டும் எச்சரிக்கை செய்வது இலகுவாகிறது.

வேலை செய்யும் விதம்

தொகு

கட்டடத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தீ விபத்து ஏற்படும்போது, அதன் அருகே இணைக்கப்பட்டிருக்கும் கணிப்பானானது தனது உணரியின் மூலம் விபத்தைக் கணித்து மையக்கட்டுப்பாட்டு அமைப்புக்குக் குறிகாட்டல்களை அனுப்புகின்றது. இந்தக் குறிகாட்டல்களை அலசிய பின்பு மையக்கட்டுப்பாட்டு அமைப்பானது குறிப்பிட்ட அந்தப் பகுதிகளில் உள்ள எச்சரிக்கை அலறிகளை உயிர்ப்பிக்கின்றது. இதன் மூலம் அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர். தீ கணிப்பான் மட்டுமல்லாது ஆளியக்க அழைப்பான் தூண்டல் மூலமும் எச்சரிக்கை அலறிகளைத் தூண்டி மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.

உட்கூறுகள்

தொகு

இதில் மையக்கட்டுப்பாட்டு அமைப்பு, தீ கணிப்பான், ஆளியக்க அழைப்பான், எச்சரிக்கை அலறி ஆகியன மிக முக்கியமான உட்கூறு கருவிகள் ஆகும்.

தீ கணிப்பான்

தொகு
 
தீ கணிப்பான்

இது கட்டடங்களின் அனைத்துப் பகுதிகளிலும் மிக நெருக்கமாக இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கணிப்பானின் கணிப்புத்திறனை அடிப்படையாகக் கொண்டு இது இரண்டு மீட்டர் வரையான இடைவெளியில் பொருத்தப்படுகின்றது. இதன் உள்ளே இருக்கும் உணரி அதன் கணிப்புக்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் தீ, புகை ஆகியவற்றைக் கணித்து, மையக்கட்டுப்பாட்டு அமைப்புக்கு எச்சரிக்கைக் குறிகாட்டல்களை அனுப்புகின்றன. இவை ஒவ்வொன்றிற்கும் அவை பொருத்தப்பட்டிருக்கும் இடத்தைக் குறிப்பிடும் வகையில் தனித்தனிப் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இவை உணரிகளை அடிப்படையாகக் கொண்டு புகை கணிப்பான், வெப்பக் கணிப்பான், பன்முகக் கணிப்பான் எனப் பல வகைகளில் பிரிக்கப்படுகின்றன. அதிக வெப்பத்தாக்கம் உள்ள பகுதிகளான சமையல் அறை, மின்னியற்றி அறை போன்ற பகுதிகளில் வெப்பக் கணிப்பானும் மற்றப் பகுதிகளில் புகை, பன்முகக் கணிப்பான்களும் பயன்படுத்தப்படுகின்றன.

மையக்கட்டுப்பாட்டு அமைப்பு

தொகு

இது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் (குறிப்பாக வரவு முகப்பிடம்) இணைக்கப்படுகின்றது. இதன் வழியாகவே மற்ற அனைத்துக் கருவிகளும் இணைக்கப்படுகின்றன. இது தீ கணிப்பான் மற்றும் ஆளியக்க அழைப்பான் ஆகியவற்றில் இருந்து உள்ளீட்டுக் குறிகைகளைப் (சமிக்ஞைகளைப்) பெற்று அதற்குத் தகுந்தாற்போல் எச்சரிக்கை அலறிகளை இயக்குகின்றன. அதே நேரம் தூண்டப்பட்ட தீ கணிப்பானின் பெயரையும் இதில் உள்ள காட்சித்திரையில் அறிவிக்கின்றது. இதன் மூலம் தொடர்புபட்ட நபர்கள் குறிப்பிட்ட தீ நிகழ்வுப் (விபத்துப்) பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைக்க இலகுவாகின்றது. இவை தீ நேர்வுக்கு (விபத்து) மட்டும் அன்றி மொத்த அமைப்பில் ஏற்படும் பிழைகளையும் சுட்டிக்காட்டுகின்றன.

ஆளியக்க அழைப்பான்

தொகு
 
ஆளியக்க அழைப்பான்

இது மனிதத்தூண்டல் மூலம் தீ கட்டுப்பாட்டு அமைப்பை உயிர்ப்பிக்கும் ஒரு கருவி. சாதாரண தொடுப்பி (ஆளி, Switch) போல இயங்கும். இது புகைக் கணிப்பான் செயலிழந்த நிலையிலும் மற்ற பிற அவசர காலங்களிலும் தீக் கட்டுப்பாட்டு அமைப்பைத் தூண்ட உதவுகின்றது. இவை பெரும்பாலும் வெளியேறும் வாயில், அவசரகால வாயில்கள் ஆகியவற்றின் அருகில் பொருத்தப்படுகின்றன. இவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளை உடைப்பதன் மூலமோ விசைகளை இழுப்பதன் மூலமோ இவை இயக்கப்படுகின்றன.

எச்சரிக்கை அலறிகள்

தொகு

இவை கட்டடத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொருத்தப்படுகின்றன. இவற்றின் ஒலியானது கட்டடத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கேட்கும்படி பொருத்தப்படுவது அவசியமாகும். சில இடங்களில் ஒலிப்பானோடு சேர்த்து பளிச்சொளி விளக்குகளும் (Flash Light) பொருத்தப்படுகின்றன. இவற்றின் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவானது (டெசிபல்) ஒவ்வொரு இடங்களுக்கும் வேறுபடும். இவை இந்தியாவில் இந்திய அரசால் வரையறுக்கப்படுகின்றன.

தரம் நிறுவுதல்

தொகு

இந்திய அரசின் தரம் நிறுவு அமைப்பு (BIS), தீக் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை அலறிகளின் அதிகவெல்லையான ஒலி-டெசிபல் அளவை பின்வருமாறு தீர்வு செய்துள்ளது[1].

இடம் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவு
(டெசிபலில்)
அலுவலகங்கள் 55
கல்விக்கூடங்கள் 45
தொழிற்சாலைகள் 80
பயிற்சியகங்கள் 50
வணிக வளாகம் 40
இயந்திர அறை 85
நீர் சூழ்ந்த கட்டுமானங்கள் 40
மக்கள் மன்றங்கள் 55
குடியிருப்பு பகுதிகள் 35
சேமிப்புக் கிடங்குகள் 30
பொது, அதிக அடர்த்தி உள்ள நகர்ப்பகுதி 7
பொது, குறைந்த அடர்த்தி உள்ள நகர்ப்பகுதி 55
பொது, ஊராட்சி, புறநகர்ப் பகுதி 40
கோபுர அமைப்புகள் 35
கீழ்த்தரைத்தள, மூடிய கட்டடங்கள் 40
ஊர்திகள், கலன்கள் 50
கலந்தாய்வுக் கூடங்கள் 40-45
கண்காட்சிக் கூடங்கள் 63-73
உணவு விடுதிகள் 65-75
கொதிகலன் கூடங்கள் 75-85
குளிர்விக்கப்பட்ட பகுதிகள் 85-90
சிற்றுண்டிச்சாலை 68-78
தொடர்வண்டி நிலையங்கள் 75-85
விற்பனை வளாகங்கள் 70-75
விளையாட்டு அரங்கங்கள் 70-80

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. தரம் நிறுவு அமைப்பு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீ_எச்சரிக்கை_அமைப்பு&oldid=3998342" இலிருந்து மீள்விக்கப்பட்டது