துகளறுபோதம்

துகளறு போதம் என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிற்றம்பல நாடிகள் என்பவரால் எழுதப்பட்டது.

மெய்கண்ட சாத்திரம் 14 எனத் தொகுத்துக்காட்டும் ‘உந்தி களிறு’ என்னும் வெண்பாவில் இந்நூல் காட்டப்படவில்லை. எனினும் நாகப்பட்டினம் வேதாசலம் பிள்ளை, 1938-ல் வெளியிட்ட நூல்களில் ஒன்றில், இந்நூலை மெய்கண்ட சாத்திரம் 14-ல் ஒன்றாக இணைத்துக் காட்டியுள்ளார். மதுரைச் சிவப்பிரகாசர், திராவிட மாபாடியம் பாடிய சிவஞான சுவாமிகள் போன்றோர் இந்நூலின் பாடல்களை எடுத்தாண்டுள்ளமை இந்நூலின் சிறப்புகளில் ஒன்று.

இந்த நூல் கற்பக விநாயகர் காப்புச் செய்யுளும் 100 வெண்பாக்களும் கொண்டது. இந்த நூலின் நூற்பொருளைக் கூறும் பிற்கால வெண்பாக்கள் இரண்டும் இதில் உள்ளன. இந்நூலின் 100ஆவது பாடல் உமாபதியார் இயற்றிய கொடிக்கவி என்னும் நூலின் இரண்டாம் பாடலாக உள்ளது. ஆசிரியப்பாவாலான இந்நூலின் சிறப்புப் பாயிரம் நூலாசிரியரைக் கங்கைகொண்டாரின் மாணாக்கர் எனக் குறிப்பிடுகிறது.

முத்தி பெறுவதற்கு உரிய நெறி என சைவம் காட்டும் நெறி தசகாரியம். சில நூல்கள் தசகாரியங்களை 30 நிலைகளாகக் [1] காட்டுகின்றன. இவ்வாறு சிவபெருமானின் 30 நிலைகளைக் காட்டும் முதல் நூல் இந்தத் துகளறுபோதம். இந்த நூல் ஞானம், சரியை, கிரியை வழிகளைக் காட்டுகிறது. குருவே சிவம் என்பது இந்நூலின் கோட்பாடு. இதனால் பிற்காலத்து மதுரைச் சிவப்பிரகாசர் இந்த நூலை “திருவருளைப் பெற்று அனுபவித்த அடிகளார் வாக்கு” எனப் போற்றுகிறார்.

இந்த நூல் அவ்வப்போது பதிப்பிக்கப்பட்டு வெளிவந்துள்ளது.

  • நாகப்பட்டினம் வேதாசலம்பிள்ளை மேற்பார்வையில் வெளிவந்த பால்வண்ண முதலியார் பதிப்பு, 1898
  • சண்முகம்பிள்ளை பதிப்பு 1904
  • சமாஜ சித்தாந்த சாத்திரம் முதற்பதிப்பு 1934
  • ஈசான சிவன் புத்துரையுடன் யாழ்ப்பாணப் பதிப்பு 1950
  • திருவாவடுதுறை ஆதீனப் பதிப்பு 1952

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. 30 அவதாரங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=துகளறுபோதம்&oldid=2298481" இலிருந்து மீள்விக்கப்பட்டது