தும்புத் தடி

குச்சி
(தும்புத்தடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தும்புத் தடி என்பது ஏறத்தாழ ஐந்து அடி நீளமான தடியின் (குச்சி) ஒரு நுனியில் தும்பினால் ஆன கட்டைப் பொருத்தி உருவாக்கும் ஒரு வகைத் துடைப்பம் ஆகும். இதைத் தும்புக்கட்டு என்றும் குறிப்பிடுவர். இது நின்ற நிலையில் ஒரு இடத்தைப் பெருக்குவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இலங்கை, இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. தும்புத் தடி தயாரிப்பது ஒரு கைத்தொழில் ஆகும்.

தும்புத்தடி

அமைப்பு தொகு

தும்புத் தடியை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். இவை, பெருக்கும்போது பிடிப்பதற்குப் பயன்படும் "தடி", "குச்சி" அல்லது "தண்டு", பெருக்கும்போது நிலத்துடன் தொட்டுக்கொண்டிருக்கும் தும்புப்பகுதி, தும்புப் பகுதியைத் தடியுடன் இணைக்கும் அமைப்பு என்பவை.

தடி பெருக்குபவர் நிமிர்ந்து நின்றபடி பெருக்குவதற்கு வசதியான நீளத்தைக் கொண்டது. பிடிப்பதற்கு வசதியாக இது ஏறத்தாழ ஒரு அங்குல (24.5 மிமீ) விட்டம் கொண்ட உருளை வடிவில் இருக்கும். தொடக்க காலங்களில் இது மரத்தினால் ஆக்கப்பட்டுச் சீரான வட்ட வெட்டுமுகம் கொண்டதாகச் செப்பம் செய்யப்பட்டிருக்கும். பிற்காலத்தில், நேரத்தைச் சேமித்துச் செலவைக் குறைப்பதற்காக விளிம்புகள் மழுக்கப்பட்ட சதுர வெட்டுமுகம் கொண்டவையாக உருவாக்கப்பட்டதும் உண்டு. மரத்தின் விலை அதிகரித்ததால், அண்மைக் காலங்களில் இது நெகிழிப் பூச்சுடன் கூடிய மெல்லிய சுவர் கொண்ட இரும்புக் குழாய்களால் உருவாக்கப்படுகிறது.

பெருக்குவதற்கான தும்புப்பகுதி பொருத்துப் பகுதிக்குக் கீழே ஏறத்தாழ 6 ஆங்குல நீளமானது. நுனிப்பகுதி ஒரு அடிவரை இருக்கும் வகையில் இது விசிறி வடிவில் அமைந்திருக்கும். தொடக்கத்தில் இதற்குத் தென்னந் தும்பே பயன்பட்டது. தென்னை ஓலையின் அடிமட்டையை அல்லது தேங்காய் மட்டையை ஊறவைத்து, பின்னர் அதை அடித்து அதில் இருந்து தும்பு பிரித்தெடுக்கப்பட்டது. தற்காலத்தில், இயற்கைத் தும்புக்குப் பதிலாக நெகிழியினால் ஆன நார்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தும்புப் பகுதியைத் தண்டுடன் பொருத்தும் பகுதி, தும்புப் பகுதியை விசிறி வடிவில் அமைப்பதற்கு ஏதுவாக முக்கோண வடிவில் அமைந்திருக்கும். முன்னர், தும்புப் பொருட்களாலேயே இப்பகுதி உருவாக்கப்பட்டிருந்தது. தும்புப் பகுதியை பல பகுதிகளாகப் பிரித்து தும்புக் கயிறுகளால் சுற்றிப் பின்னர் அவற்றை ஒன்றாகப் பிணைத்து இப்பகுதி உருவாக்கப்பட்டிருந்தது. பின்னர் இரும்புத் தகடுகளையும், இரும்பு ஆணிகளையும் பயன்படுத்தி இப்பகுதி அமைந்தது. தற்காலத்தில் இது அச்சில் வார்க்கப்பட்ட நெகிழியால் ஆக்கப்படுகிறது.

பயன்பாடு தொகு

தும்புத் தடி பொதுவாக கட்டிடங்களின் உட்புறத்தில் அமைந்த இறுக்கமானதும், மட்டமானதுமானதுமான தரைகளைப் பெருக்கவே பயன்படுகிறது. குனிந்து பெருக்குவதற்குப் பயன்படும் பிற வகைத் துடைப்பங்களால் பெருக்கும்போது அவற்றின் கூந்தலின் பக்கவாட்டுப் பகுதியே தரையில் தொடுகையில் இருந்து குப்பைகளைத் தள்ளுகிறது. ஆனால், தும்புத் தடியில் தும்புப் பகுதியின் நுனியே தரையில் படுகிறது. இதனால், தும்புப் பகுதி கூடிய நீளத்துக்கு நிலத்தைல் படுவதை உறுதிசெய்ய அது விசிறி வடிவில் அமைக்கப்படுகிறது.

குனிந்து தரையைப் பெருக்குவதற்குப் பயன்படும் துடைப்பங்களைப் போலன்றி தும்புத் தடியால் பெருக்கும்போது இரண்டு கைகளும் பயன்படுத்தப்படுகின்றன. பெருக்குபவர் தும்புத் தடி ஏறத்தாழ நிலைக்குத்தாக இருக்கும்படி வைத்துத் தடியின் மேல் நுனியை இடது கையால் நிலையாகப் பிடித்தபடி, வலது கையால் தடியின் ந்டுப்பகுதியைப் பிடித்து அசைத்துப் பெருக்குவார். இது மூன்றாம் வகை நெம்புகோல் பொறிமுறை ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தும்புத்_தடி&oldid=2466645" இலிருந்து மீள்விக்கப்பட்டது