தெகுசா செயல்முறை
தெகுசா செயல்முறை (Degussa process) என்பது பிளாட்டினம் வினையூக்கி முன்னிலையில் மீத்தேன் மற்றும் அமோனியாவைப் பயன்படுத்தி ஐதரசன் சயனைடு தயாரிக்கும் ஒரு செயல்முறையாகும். இவ்வேதிச் செயல்முறையை தெகுசா [1] என்ற செருமன் நிறுவனம் உருவாக்கியது. அக்ரைலோநைட்ரைல், மெத்தில்மெத்தக்ரைலேட்டு, அடிப்போநைட்ரைல் போன்ற இடைநிலை வேதிப்பொருட்களைத் தயாரிக்கும் வேதித் தொழிற்சாலைகளில் ஐதரசன் சயனைடு பயன்படுகிறது.
பிளாசௌர் (ஐதரசன் சயனைடு) சேர்மத்தை மெத்தான் (மீத்தேன்) மற்றும் அமோனியாக் (அமோனியா) சேர்மங்களிலிருந்து தயாரித்தல் என்ற வாக்கியத்தின் செருமன் மொழி சுருக்கமாக பி.மெ.அ. செயல்முறை என்ற பெயராலும் இவ்வினை அழைக்கப்படுகிறது.
மீத்தேன் மற்றும் நீரின் நீராவிய மறுவாக்கம் வினையை ஒத்த சமன்பாட்டையே இச்செயல்முறையின் சமன்பாடும் பெற்றுள்ளது.
- CH4 + NH3 → HCN + 3 H2, ΔHR = 251 kJ / மோல்
இச்செயல்முறையில் நிகழ்வது ஒரு வெப்பங்கொள் வினையாகும். பிளாட்டினம் சூழ்ந்துள்ள குழாயில் வினைபடு பொருள்கள் சுமார் 1400 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிகின்றன. வினைகலவையில் கிட்டத்தட்ட 23% கன அளவு ஐதரசன் சயனைடும் 72% ஐதரசன் வாயுவும் சிறிய அளவில் அமோனியா, நைட்ரசன் மற்றும் வினையில் ஈடுபடாத மீத்தேன் ஆகியன கலந்துள்ளன [2].
வாயு கலவையை ஒரு துப்புரவாக்கியில் செலுத்தி அமோனியா கரைசலுடன் சேர்த்து சூடுபடுத்துவதால் H2, CH4, மற்றும் N2 ஆகியவற்றிலிருந்து அமில ஐதரசன்சயனைடு பிரிக்கப்படுகிறது. இரண்டாவது படிநிலையில் கரைசலை அமிலமாக்கி தொடர்ந்து இறுதிவாலைவடித்தல் மூலமாக HCN விடுவிக்கப்படுகிறது. அதிக வெப்பங்கொள் வினையாக இருப்பதால், ஆண்ட்ரூசோ செயல்முறையுடன் ஒப்பிடுகையில் இச்செயல்முறைக்கு குறைந்த முக்கியத்துவமே கொடுக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "patent literature". Archived from the original on 2012-09-06. பார்க்கப்பட்ட நாள் 2017-12-10.
- ↑ F. Endter (1958). "Die technische Synthese von Cyanwasserstoff aus Methan und Ammoniak ohne Zusatz von Sauerstoff". Chemie Ingenieur Technik 30 (5): 281–376. doi:10.1002/cite.330300506.