தென்னிந்திய பெரிய பச்சைப் புறா

தென்னிந்திய பெரிய பச்சைப் புறா (Green imperial pigeon, Ducula aenea pusilla) என்பது பெரிய பச்சைப் புறாவின் துணையினம் ஆகும்.[1] இந்தப் பறவை தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் காணப்படுகின்றன.

விளக்கம்

தொகு

காக்கை அளவுள்ள இப்பறவை சுமார் 43 செ. மீ. நீளம் இருக்கும். இதன் அலகு சாம்பல் தோ்ந்த பசுமை நிறத்தில் இருக்கும். விழிப்படலம் ஆழ்ந்த சிவப்பாகவும், கால்கள் ஆழ்ந்த சிவப்பாகவும் இருக்கும். மரங்களில் வாழும் புறாக்களில் அளவில் மிகப்பெரியது. இதன் உடலின் பெரும் பகுதி அளஞ் சிவப்பு தோ்ந்த சாம்பல் நிறமாக இருக்கும். முதுகும் வாலின் மேற்பகுதியும் பளபளக்கும் வெண்கலப் பச்சை நிறமாக இருக்கும். வாலின் கீழ்ப்பகுதி மஞ்சள் தோ்ந்த கருஞ் செம்பழுப்பாக இருக்கும். ஆணும் பெண்ணும் ஒன்று போலத் தோற்றம் கொண்டவை.[2]

வாழிடம்

தொகு

இப்பறவை தென்னிந்தியாவில் கிழக்கு, மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்கள் சார்ந்த பகுதிகளில் உள்ள, சமவெளிக் காடுகளில் காணப்படுகிறது. மலைப்பகுதிகளில் 300 மீட்டர் உயரத்திற்கு மேல் பெரும்பாலும் காணப்படுவதில்லை. அத்தி, ஆலமரம் சார்ந்த காடுகளை பெரிதும் இது விரும்பும்.[2]

பழக்கவழக்கங்கள்

தொகு

இவை இணையாகவும், ஐந்து முதல் 6 வரையிலான சிறு பறவைக் கூட்டமாக காணப்படும். பெரும்பாலான பச்சைப் புறாக்களைப் போல பெருங்கூட்டமாக இதைக் காணமுடியாது. பழமரங்களில் பழத்திற்காக பிற பச்சைப் புறாக்களைப் போல ஆரவாரமாக ஒன்றோரு ஒன்று சண்டை இடுவது இல்லை. எப்போராவது மட்டும் பழ மரங்களில் அரிதாக 20 பறவைகள் வரையிலான கூட்டமாக காணப்படும். காலை மாலை வேளைகளில் மரக்கிளைகளின் உச்சியில் வெயில் காயும் பழக்கம் உண்டு. உப்பு மண் உரும்டைகளையும் தண்ணீரையும் குடிக்க மட்டுமே தரை இறங்கும்.[2]

ஆழ்ந்த தொனியிற் சிரிப்பதுபோன்று உ, உ, உ, என்றோ வூஉக், வூஉக், வூஉக், வூஉர்ர் என்றோ வூஉக், வூர், வூர், வூர் என்றோ கத்தும்.

இனப்பெருக்கம்

தொகு

இவை பெப்ரவரி முதல் சூன் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. ஆண் பறவை காதலூட்டத்தின் போது மேலும் கீழும் பறந்து வேடிக்கைக் காட்டும். மேலும் பெண் பறவையின் அருகே அமர்ந்து தலையைத் தாழ்த்தி மார்பில் புதைத்துக் கொண்டு உச்சந்தலை, கழுத்து ஆகியவற்றை அழகாகக் காட்டும். மரங்களில் சாதாரண உயரத்தில் கூடு கட்டும். வெள்ளை நிறத்தில் ஒரு முட்டை இடும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Pigeons". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 13 March 2020.
  2. 2.0 2.1 2.2 2.3 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 212–213.