தென் இந்திய சிற்ப வடிவங்கள் (நூல்)

தென் இந்திய சிற்ப வடிவங்கள் என்பது, தென்னிந்தியாவின் சிற்பக்கலை குறித்து எழுதப்பட்ட ஒரு நூல் ஆகும். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியரான க. நவரத்தினம் எழுதிய இந்நூலின் முதற்பதிப்பு 1941 ஆம் ஆண்டு வெளியானது. அறுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் 2006 ஆம் ஆண்டில் குமரன் புத்தக இல்லத்தினால் மீளச்சு செய்து வெளியிடப்பட்டுள்ளது.

தென் இந்திய சிற்ப வடிவங்கள்
நூல் பெயர்:தென் இந்திய சிற்ப வடிவங்கள்
ஆசிரியர்(கள்):க. நவரத்தினம்
வகை:சிற்பக்கலை
துறை:சிற்பக்கலை வரலாறு
காலம்:பண்டைக்காலம் முதல் தற்காலம் வரை
இடம்:தென்னிந்தியா
மொழி:தமிழ்
பக்கங்கள்:117
பதிப்பகர்:குமரன் புத்தக இல்லம் (2006)
பதிப்பு:1941, 2006

இந்நூல் எழுதிய காலம் வரை தென்னிந்தியச் சிற்பங்களைக் குறித்து தமிழில் எந்த நூலும் வெளிவரவில்லை என்றும் இத்துறையில் இதுவே முதல் தமிழ் நூல் என்றும் இதற்கு மதிப்புரை வழங்கிய ஏ. கே. நீலகண்ட சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.[1]

நோக்கம் தொகு

தென்னிந்தியச் சிற்ப இலக்கணம் பற்றிய பழைய நூல்கள் யாவும் வடமொழியிலேயே எழுதப்பட்டுள்ளதால் சிற்பக் கலைஞர்களுக்கேயன்றிச் சாதாரண மக்கள் சிற்பங்களைப் பற்றி அறிந்துகொள்ள அவை பயன்படுவது இல்லை. அத்துடன் இத்தைகைய நூல்கள் சிற்ப அமைப்பின் இலக்கணங்களையே கூறுகின்றன. சிற்பத்தைச் சுவைப்பதற்கு உரிய கலையாகக் கொண்டு அதை அறிவதற்கான விடயங்கள் எதுவும் அந்நூல்களில் கிடைப்பதில்லை. ஆனால் சிற்பக்கலையின் அழகியலைக் குறித்த ஆய்வு நூல்கள் பல ஆங்கில மொழியில் வெளியாகியுள்ளன. அத்தகைய ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களும் படித்துப் பயன் பெறவேண்டும் என்பதற்காகவே நூலாசிரியர் இந்நூலை எழுதியுள்ளார்.[2]

உள்ளடக்கம் தொகு

இந்நூலில் காணப்படும் விடயங்கள் பல ஆங்கில நூல்களில் கண்ட ஆய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டவை. எனினும் தமிழ் இலக்கிய அறிவு இல்லாதவர்களால் எழுதப்பட்ட இத்தகைய நூல்களில் காணப்படாதனவும், தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றனவுமான சிற்பங்கள் குறித்த விடயங்கள் பலவற்றையும் இந்நூலாசிரியர் இந்நூலில் எடுத்தாண்டுள்ளார். சிற்ப வடிவங்கள் பற்றியே இந்நூல் சிறப்பாக எடுத்தாண்டாலும், தென்னாட்டில் சிற்பங்களின் வளர்ச்சிக்குக் கோயில்களே காரணமாக அமைவதால், கோயில்களின் தோற்றம் அவற்றின் வளர்ச்சி என்பன குறித்த விடயங்களும் இந்நூலில் காணப்படுகின்றன. இது பின்வரும் எட்டு இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  1. தமிழ்க் கலைகளும் அவற்றின் இக்கால நிலையும்
  2. இந்திய சிற்பத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
  3. தமிழ்நாட்டிற் சிற்ப வளர்ச்சி
  4. தமிழ்நாட்டுச் சிற்ப நூல்கள்
  5. திருவுருவ அமைப்பு இலக்கணம்
  6. இந்திய கலாதத்துவமும் சிற்பமும்
  7. சிற்ப வடிவங்கள்
  8. சிறீ நடராஜ வடிவம்

குறிப்புகள் தொகு

  1. நவரத்தினம், க., 2006, பக்.vi
  2. நவரத்தினம், க., 2006, பக்.vii, viii

இவற்றையும் பார்க்கவும் தொகு