க. நவரத்தினம்
கலைப்புலவர் கந்தையா நவரத்தினம் (1898[1] - 1962) ஈழத் தமிழறிஞரும், கலை, சமய, இலக்கிய விமரிசகரும், எழுத்தாளரும், ஓவியரும், ஆசிரியரும் ஆவார்.
கலைப்புலவர் க. நவரத்தினம் | |
---|---|
பிறப்பு | 1898 வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் |
இறப்பு | 1962 |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | ஆசிரியர் |
பணியகம் | யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி |
அறியப்படுவது | கலை, இலக்கிய விமரிசகர், எழுத்தாளர் |
வாழ்க்கைத் துணை | மகேசுவரி தேவி |
உறவினர்கள் | ஓவியர் விகே |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுயாழ்ப்பாணத்தில் பிறந்த கலைப்புலவர் நவரத்தினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயின்று அக்கல்லூரியிலேயே 1920 முதல் 1958 வரை வர்த்தகத் துறையில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.[1]
1930 ஆம் ஆண்டு ‘கலாநிலையம்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதில் தன்னிடம் இருந்த ஆயிரத்துக்கும் அதிகமான நூல்களைக் காட்சிக்கு வைத்திருந்தார். அச்சில் இல்லாத பல ஆங்கில, தமிழ் நூல்களும் ஏட்டுப் பிரதிகளும் இங்கிருந்தன. அவ்வப் போது அறிஞர்களின் விரிவுரைகளும் இம்மண்டபத்தில் நிகழ்த்தினார். இந்நிறுவனமூடாக சில ஆண்டுகளுக்கு 'ஞாயிறு' என்னும் கலை, இலக்கிய இதழை வெளியிட்டு வந்தார். இவ்விதழில் பல பெரியார்களின் கட்டுரைகள், ஆய்வுகள் பலவற்றை வெளியிட்டு வந்தார்.
கலைப்புலவர் சைவ சித்தாந்தத்தை நன்கு பயின்று ஆராய்ந்தவர். யாழ்ப்பாணம் சிவ யோக சுவாமிகளின் அடியாராக இருந்தவர்.[2] 1943 இல் கண்டியில் நடைபெற்ற சர்வமத கோட்பாடுகளின் மகாநாட்டில் சைவ சித்தாந்தம் பற்றி விரிவுரை நிகழ்த்தினார். பதினெண் புராணங்களைப் பற்றி ஆங்கிலத்தில் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதினார்.
நடராஜ வடிவம். தமிழ்நாட்டிற் கலை வளர்ச்சி, இலங்கையிற் கலை வளர்ச்சி, இந்திய ஓவியங்கள், ஆனந்த குமாரசுவாமி, நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, சி. கணேசையர் ஆகியவை அவரது வானொலிச் சொற்பொழிவுகள் ஆகும். மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன் விழாவில் ‘தமிழ் நாட்டில் ஓவிய வளர்ச்சி’ என்னும் பொருள் பற்றி விரிவுரையாற்றினார். தமிழ்ச் சங்கப் பொன்விழா மலரிலும், தமிழ்விழா மலர், ஈழகேசரி வெள்ளிவிழா மலர், யாழ் வினோத களியாட்ட மலர், மணிவாசகர் விழா மலர், கல்லூரி ஆண்டு மலர்களிலும், கலாநிதி இதழ்களிலும் கலைப்புலவரது கட்டுரைகள் வெளியாயின. யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் நூற்றாண்டு மலரின் தொகுப்பாசிரியராகவும் இவர் இருந்தார்.
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் நான்காவது தமிழ் விழா யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட போது க. நவரத்தினம் அதன் செயலாளராகவிருந்து செயல்பட்டார்.
இந்தியக் கலைகளைப் படித்தும், சேகரித்தும் வந்தவரான ஒ. ஜி. கங்கூலி என்பவருடன் கலைப்புலவர் வைத்திருந்த நட்பின் பயனாக 1939 ஆம் ஆண்டு ஓவியக் கண்காட்சி ஒன்றை நடத்தினார். அதில் பௌத்த, இந்து, இராஜபுத்திர ஓவியங்களும்; ஓரிசா, நேப்பாள தேசத்து ஓவியங்களுமாக எழுபத்தொரு ஓவியங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றன.
குடும்பம்
தொகுகலைப்புலவரின் மனைவி மகேஸ்வரி தேவி. இவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. மகேசுவரி தேவி யாழ், வீணை, ஜலதரங்கம், சித்தார், கோட்டு வாத்தியம் ஆகிய இசைக்கருவிகளை மீட்டும் கலைஞராகத் திகழ்ந்தவர். இவரின் தாயார் மங்களாம்பாள் மாசிலாமணி முதன் முதலாக பெண்களுக்காகத் "தமிழ் மகள்' என்னும் பத்திரிகையை யாழ்ப்பாணத்திலே ஆரம்பித்தவர். மகேஸ்வரி A First Book of Indian Music, Veena Tutor ஆகிய நூல்களை வெளியிட்டார். கவிஞர் இரவீந்திரநாத் தாகூரின் விசுவபாரதியில் இரண்டு ஆண்டுகளாக இருந்து கலை பயின்றதன் பயனாக தாகூரை 1934 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்தார்கள். தாகூரின் வருகைக்கான ஏற்பாட்டுக் குழுவுக்கு நவரத்தினம் செயலாளராகப் பணியாற்றினார்.
சமூகப் பணி
தொகு1920 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒரு பாடசாலையை சுவாமி விபுலாநந்தருடன் இணைந்து ஆரம்பித்து நடத்தினார். 1929, 30, 31ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரசின் ஆதரவில் நடந்த கலை, கைத்தொழிற் கண்காட்சியின் திட்டக் குழுவிற்கு செயலாளராக விருந்தார். வடமாகாண மதுவிலக்குச் சபை, ஈழகேசரி நா. பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், யாழ்ப்பாணக் கலை கைப்பணிக் கழகம் ஆகியவற்றின் செயலாளராகவும்; யாழ்ப்பாண அருங்காட்சியகம், இலங்கைத் தேசிய அருங்காட்சியகம் ஆகியவற்றின் ஆலோசனைக்குழுவிலும் உறுப்பினராக இருந்தார். இலங்கை அரசினர் கலைக்கழக சிற்ப ஓவியப் பிரிவில் உறுப்பினராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.
ஆலயங்களில் மிருகபலியை நிறுத்தல் வேண்டுமென்றும். தீண்டாமையை ஒழித்தும், மதுவிலக்கை ஆதரித்தும் ஈழகேசரி, வீரகேசரி, இந்து சாதனம், Hindu Organ ஆகிய பத்திரிகைகளில் கட்டுரைகளும், அறிக்கைகளும் எழுதினார்.
1956 டிசம்பரில் புது தில்லியில் நடைபெற்ற ஆசிய எழுத்தாளர்களின் மகாநாட்டில் கலைப்புலவர் கலந்து கொனண்டு உரையாற்றினார்.
கலைப்புலவர் பட்டம்
தொகுக. நவரத்தினம் கலை, கைப்பணித் துறைகளில் ஆற்றிவரும் பணிகளைக் கௌரவித்து, மேலவை, நாடாளுமன்ற உறுப்பினர் சு. நடேசபிள்ளையின் தலைமையில் நடைபெற்ற இலங்கையிற் கலைவளர்ச்சி என்னும் நூல் அறிமுக விழாவின் போது யாழ்ப்பாண மக்கள் சார்பில் கலைப்புலவர் என்னும் பட்டத்தை நடேசபிள்ளை வழங்கிக் கௌரவித்தார்.
நூல்கள்
தொகுசமய நூல்கள்
தொகு- Advaita Vedanta -An Introductory Study
- Saiva Siddhanta,
- Hindu Temple Reform
- வீர சைவம் அல்லது இலிங்காயதம்
- சிவானுபூதி செந்நெறி
- Bhagavad Gita – An Introductory Study
- Studies in Hinduism (1963, மீள்பதிப்பு: 2010)
கலை நூல்கள்
தொகு- யாழ்ப்பாணக் கலையும் கைப்பணியும்
- தென் இந்திய சிற்ப வடிவங்கள்,
- இலங்கையிற் கலைவளர்ச்சி,
- இந்திய ஓவியங்கள்,
- Arts and Crafts of Jaffna,
- Development of Art in Ceylon,
- Religion and Art
- Tamil Element in Ceylon Culture
வாணிப நூல்கள்
தொகு- கணக்குப் பதிவு நூல்,
- உயர்தரக் கணக்குப் பதிவு நூல்,
- இக்கால வாணிப முறை
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 கலைப்புலவரின் நூல் வெளியீட்டில் க. வி. விக்னேஸ்வரன் உரை, Omlanka News - (ஆங்கில மொழியில்)
- ↑ Yogaswami, the Young Guru, The Himalayan Academy
- நான் கண்ட கலைப்புலவர் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், கா. மாணிக்கவாசகர், திருமகள் அழுத்தகம், சுன்னாகம், 1958