யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர். இவற்றில் நரம்புக் கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைக் கருவியாகும். நரம்புக் கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் வழி வந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கிறது. யாழ் கேள்வி என்ற பெயரையும் கொண்டுள்ளது.[1]

யாழ்

யாழின் வரலாறு

தொகு
 
இந்தியாவின் காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் யாழ் இசைக்கும் சிற்பம், சி. 8 ஆம் நூற்றாண்டு[2]

குறிஞ்சி நிலத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளில் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையே யாழின் உருவாக்கத்திற்கு தோற்றுவாயாக இருக்க வேண்டும். இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது. பதிற்றுப்பத்து, வில்யாழ் முல்லை நிலத்திலேயே முதலில் தோன்றியது என்று கூறினாலும், குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்பதே பொருத்தமுடையது. ஏனெனில் குறிஞ்சி நிலத்தில் தான் வேட்டைத் தொழில் மிகுதியாக நடைபெற்றது. இந்த வில்யாழ் மனிதனின் முயற்சியால், உழைப்பால் பல்வகை யாழாக மலர்ந்தது.

யாழின் வடிவத்தைத் துல்லியமாக அறியப் போதிய சிற்பங்களோ, ஓவியங்களோ இன்று நம்மிடம் இல்லை. சங்க இலக்கியங்களான புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் மற்றும் ஆற்றுப்படை நூல்களிலும், திருக்குறளிலும் சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் பக்தியிலக்கியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. என்றாலும் யாழின் வகைகளைப் பேரியாழ், சீறியாழ், மகரயாழ், சகோடயாழ் என்று அறிய முடிகிறதே ஒழிய அதன் வடிவினை அறிய முடியவில்லை.

பல்லவர் காலக் கோயிலான காஞ்சி கைலாசநாதர் கோயில் (இராஜசிம்மன் மற்றும் சோழர் காலக் கோயில்களான பொன்செய் நல்துணையீஸ்வரம் கோயில் (பராந்தகன்), திருமங்கலம் கோயில் (உத்தம சோழன்) ஆகியவற்றில் யாழ்ச் சிற்பங்கள் காணப்படுகின்றன.[3]

யாழ் கருவியின் வளர்ச்சி

தொகு

வில்லின் அடியாகத் தோன்றிய வில்யாழ் முதலில் குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்றாலும் நாளடைவில் முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நான்கு நிலங்களுக்கும் உரியதாக அமைந்தது. யாழினை இசைப்பதற்கென்றே 'பாணர்' என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டனர். யாழ் இசைக்கலைஞர்களான பாணர்கள் பெயரிலேயே இரண்டு சங்கநூல்கள் தோன்றியுள்ளதில் இருந்து யாழ் மற்றும் பாணர்களின் மதிப்பை அறியமுடிகிறது.

அந்நூல்களில், மன்னர்கள் பாணர்களைப் போற்றியும், புரந்தும் வந்துள்ளமையைக் காட்டுகின்றன. யாழ் பாடிக் கொண்டே இசைக்கும் கருவியாக இருந்துள்ளது. சாதாரண மக்களிடம் புழக்கத்தில் இருந்த யாழ் ஒரு காலகட்டத்தில் தெய்வத்தன்மை பெற்று வணக்கத்திற்கு உரியதாக மாறியது.

தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர். அதனாலேயே ஒரு நரம்பில் தொடங்கி மூன்று, ஐந்து, ஏழு..... என்று ஆயிரம் நரம்புகள் கொண்ட யாழ் உருவாகியது. தொடக்கத்தில் வடிவம் பற்றிய சிந்தனை இல்லையென்றாலும் பின்னர் மகரயாழ், செங்கோட்டுயாழ் எனப் பல வகையான யாழ்கள் தோன்றின. இவ்வாறாக யாழ் கி.பி.9-ஆம் நூற்றாண்டுவரை பலவகையாக வளர்ந்தது. இதற்குப் பிறகு வடிவில் ஓரிரு வேறுபாடுகள் கொண்டு வீணையாக வளர்ச்சி கண்டது. அந்த வீணையே இசையுலகில் இன்றளவும் முதலிடம் வகிக்கிறது.

யாழும் வீணையும்

தொகு

சங்க இலக்கியம் மற்றும் முற்காலக் காப்பியங்களில் இசைக் கருவியாக யாழ் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால் பக்தியிலக்கிய காலத்தில் யாழும் அதன் படிவளர்ச்சியான வீணையும் ஒருங்கே காணப்பட்டன என்பதை 'ஏழிசை யாழ்', 'வீணை முரலக்கண்டேன்', 'பண்ணோடியைந்த வீணை பயின்றாய் போற்றி' என்ற மாணிக்கவாசகரின் பாடல் வரிகள் பிரதிபலிக்கின்றன. ஆனால் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீவக சிந்தாமணியின் "வீணை என்ற யாழையும் பாட்டையும்" [4] என்ற அடி யாழும், மிடறும் உடன்நிகழ்ந்த இசையே வீணை என்ற பொருள் தருகிறது. மேலும், "வெள்ளிமலை வேற்கண்ணாளைச் சீவகன் வீணை வென்றான்" [5] என்ற அடிக்கு உரை எழுதிய ஆசிரியர், சீவகன் கந்தருவதத்தையை யாழும், பாட்டும் வென்றான் என்று குறித்துள்ளார். எனவே, யாழே வீணை என்று குறிக்கப்பட்டு பிற்காலத்தில் தனி இசைக்கருவியாக வளர்ந்தது என்பதை அறிய முடிகிறது.

சிலப்பதிகாரத்தில் "நாரதன் வீணைநயந்தெரி பாடலும்"[6] என்று வருகிறது. அதற்கு அடியார்க்கு நல்லார் யாழ் என்று பொருள் தருகிறார்.சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்னரே வீணை என்ற பெயர் தமிழகத்தில் வழங்கப்பட்டு வந்துள்ளது. மேலும் இளங்கோவடிகள், ‘நாடக உருப்பசி நல்காளாகி மங்கலமிழப்ப வீணை மண்மிசை‘ [7] என்ற வரிகளைக் குறிப்பிடுகிறார். இந்த இடத்தில் வீணை என்னும் சொல் உடலைக் குறிக்கிறது. எனவே வீணை என்னும் சொல் பல பொருளைக் குறிக்கும் வகையில் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடும். இறுதியில் சிறப்பு கருதி இசைக்கருவிக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

இலக்கியங்களில் யாழ்

தொகு

அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், மலைபடுகடாம் முதலிய இலக்கியங்களில் யாழ் வாசிப்பு, பல்வகை யாழ்கள் மற்றும் யாழின் உறுப்பமைதி தொடர்பான குறிப்புகள் பல இருக்கின்றன. சிலப்பதிகாரத்தில் யாழ் வகைகளும், யாழின் உறுப்புகள் பற்றியும், யாழ் நரம்புகளை பரிசோதித்து சுருதி கூட்டிப் பின்னர் யாழை எப்படி இசைப்பது என்பதற்கான இலக்கணங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணியில் காந்தர்வதத்தை என்னும் இசையில் தேர்ந்த பெண்ணுக்கும் சீவகனுக்கும் இடையில் நடக்கும் யாழிசைப் போட்டி பற்றிய பாடல்களில், யாழுக்கு நேரக்கூடிய குற்றங்கள், யாழுடன் சேர்ந்து பாடுவதற்கான இலக்கணம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. திருமுறையாசிரியர்களின் பதிகங்களில் யாழ் இறையாடலுக்குப் பயன்பட்ட இசைக்கருவியெனப் பல இடங்களில் குறிக்கிறார்கள். திருஞான சம்பந்தர் இயற்றிய தேவாரப்பதிகங்களைத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் அழகாக யாழில் வாசித்திருக்கின்றார்.

1947 இல் ஈழத்தவரான சுவாமி விபுலாநந்தர் யாழ் நூல் என்னும் தமது இசைத் தமிழ் நூலில் யாழைப் பற்றி பல விரிவான ஆய்வுகளைத் தொகுத்துள்ளார்.

யாழின் அமைப்பு

தொகு
 
யாழ்ப்பாணம் பிரதேச சபையில் உள்ள மரத்தினால் ஆன யாழ் சின்னம்

யாழ் ஒரு மீட்டி வாசிக்கக்கூடிய நரம்புக்கருவி. இதன் இசையொலி பெருக்கி (resonator) தணக்கு எனும் மரத்தால் செய்யப்பட்டது. இது படகு வடிவமாய் இருக்கும். மேலே தோலால் மூடப்பட்டிருக்கும். இந்தத் தோலுக்குப் போர்வைத்தோல் என்று பெயர். போர்வைத்தோலின் நடுவிலுள்ள மெல்லிய குச்சியின் வழியாக நரம்புகள் கிளம்பி மேலே உள்ள தண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். சில யாழ்களில் மாடகம் அல்லது முறுக்காணிகள் இருந்தன. அத்தகைய யாழ்களில் நரம்புகள் தண்டியின் துவாரங்களின் வழியாகச் சென்று முறுக்காணிகளில் சுற்றப்பட்டிருக்கும். சிலவற்றில் நரம்புக்கட்டு அல்லது வார்க்கட்டு தண்டியில் வரிசையாகக் காணப்படும். வார்க்கட்டுகளை மேலும் கீழுமாக நகர்த்தி நரம்புகளைச் சுருதி கூட்டினர்[8]. சங்க நூல்கள் யாழின் உறுப்புகளாக;

  • பத்தல்
  • வறுவாய்
  • யாப்பு
  • பச்சை
  • போர்வை
  • துரப்பமை ஆணி
  • உந்து
  • நரம்பு
  • கவைக்கடை
  • மருப்பு
  • துவவு

ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன.

பொருநராற்றுப் படைகூறும் பாலை யாழின் அமைப்பு

தொகு
குளப்பு வழி அன்ன கவடுபடு பத்தல்
விளக்கு அழல் உருவின் விசிஉறு பச்சை
எய்யா இளஞ்சூற் செய்யோள் அவ் வயிற்று
ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை;
அளைவாழ் அலவன் கண் கண்டன்ன,
துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி;
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி
அண் நா இல்லா அமைவரு வறுவாய்;
பாம்பு அணந்தன்ன ஓங்கு இரு மருப்பின்;
மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும்;
கண் கூடு இருக்கைத் திண் பிணித் திவ்வின்
ஆய் திணை யரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்
கேள்வி போகிய நீள் விசித் தொடையல்;
மணம் கமழ் மாதரை மண்ணி யன்ன,
அணங்கு மெய்ந் நின்ற அமைவரு, காட்சி;
ஆறு அலை கள்வர் படை விட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவு இன் பாலை-[9]

யாழுக்குக் குடுக்கை என்ற ஓர் உறுப்பு உண்டு. அது இருபுறமும் தாழ்ந்து நடுப்பாகம் உயர்ந்து, மானின் கால் குளம்பு பதித்த சுவடு போன்ற அமைப்பினைப் பெற்றிருந்ததது. யாழின் நிறம் அழல் போன்ற சிவப்பு நிறம். யாழைப் போர்த்திய உறைத்துணியில் அழகாகத் தைக்கப்பட்ட (நூல்) தையல் வரிசை காணப்பட்டது. அந்த நூல்வரிசை கருவுற்ற இளம் பெண்ணின் சிறிது பருத்த வயிற்றில் காணப்படும் மெல்லிய ரோம ஒழுங்கு போல் அமைந்திருந்தது. நண்டின் கண்கள் போன்ற துளைகளில் ஆணி பொருத்தப்பட்ட அந்த யாழின் வடிவம் எட்டாம் நாள் நிலவின் வடிவினைப் போன்றிருந்தது. யாழின் தண்டு பாம்பு தலை நீட்டினாற்போல் அமைய, வார்க்கட்டு பெண்ணின் கையில் நெருங்கிக் காணும் வளைகளைப் போலவும், யாழ் நரம்புகள் தினையரிசியை ஒத்தும் தோன்றின. முழு அளவில் அந்த யாழ் தெய்வீகத் தோற்றத்துடன் அலங்காரம் செய்யப்பட வடிவுடைய மணப்பெண் போல் காட்சி அளித்தது. ஆறலைக் கள்வர் மறம் நீங்கி அன்பு கொள்ளத் தூண்டும் ஆற்றலுடையது.[10]

பெரும்பாணாற்றுப்படை கூறும் யாழின் தோற்றம்

தொகு

"பாதிரிப் பூவை இரண்டாகப் பிளந்தது போன்ற செந்நிறம் கொண்ட தோலால் ஆன யாழ். பாக்கு மரப்பாளையிலுள்ள கண்களைப் போன்ற இரண்டு துளைகளை இணைத்த வேறுபாடு தெரியாதபடி உருக்கி ஒன்றாய்ச் சேர்த்தது போன்ற போர்வை, நீர் வற்றிய சுனை உள்ளே இருண்டிருப்பது போன்ற வாயினைக் கொண்டது.கையில் ஏந்தும் யாழின் கடைப்பாகம் பிறைநிலவு போன்றது. வளைசோர்ந்த பெண்களின் கைவலையல்களைப் போன்ற வார்க்கட்டு உடையது. நீலமலை போலும் நீண்ட பெரிய தண்டு கொண்டது. பொன்னுருக்கிச் செய்தது போன்ற முறுக்கிய நரம்புகள் கொண்ட யாழ்"[11] என்று கூறுவதை வைத்து யாழின் தோற்றத்தை ஓரளவு மனக்கண்ணில் காண முடிகிறது.

அடியார்க்கு நல்லார் காட்டும் யாழ்

தொகு

மக்கள் ஒவ்வொருவரும் அவரவர் கையால் எட்டுச் சாண் [12] உயரம் இருப்பர். பெருங்கலம் என்னும் பேரியாழின் உயரமோ பன்னிரண்டு சாண். இதன் கோட்டினது [13] ஒருசாண். ஒன்றரை ஆள் உயரம் இருக்கும் என 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார்.[14][15][16][17]

யாழ் வகைகள்

தொகு

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய கல்லாடம் என்னும் நூல் யாழ் வகைகளைப் பற்றுக் கூறுகிறது.

இவற்றைவிட நாரதயாழ் (1000 நரம்புகளை உடையது), நாரத பெரியாழ், ஆதிகால பெரியாழ் (100 நரம்புகளை உடையது), தும்புருயாழ், மருத்துவயாழ் (தேவ யாழ்), ஆதியாழ் (1000 நரம்புகளை உடையது), கிளி யாழ், வல்லகியாழ், குறிஞ்சி யாழ், பாலை யாழ், மருத யாழ், முல்லை யாழ் எனப்பல வகைகள் இருந்ததாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.[18] மகர யாழ் யவன தேசத்திலிருந்து எடுத்துவரப்பட்டதாகக் கூறப்படுகிறது. சாத்தான் குளம் அ.இராகவன் என்பவர் தனது[19] நூலில் 24 வகையான யாழ்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.[8]

யாழ் நூலில் கூறப்படும் யாழ் வகைகள்:

  • வில் யாழ்
  • சீறி யாழ்
  • செங்கோட்டியாழ்
  • பேரி யாழ்
  • சகோட யாழ்
  • மகர யாழ் (வேல்கொடி யாழ், காமன் கொடி யாழ், வர்ணர் ஊர்தி யாழ்)

கோவை தமிழ் செம்மொழி மாநாட்டில் நடைபெற்ற கண்காட்சியில் 700 ஆண்டுகள் பழைமையான சில யாழ்கள் காட்சிப்படுத்தப்பட்டன.[20] அவை:

  • செங்கோட்டு யாழ்
  • எருது யாழ்
  • மயில் யாழ்
  • மயூரி யாழ்

யாழ் வாசிக்கும் முறை

தொகு

யாழில் உள்ள ஒவ்வொரு நரம்பும் ஒவ்வொரு சுரத்துக்குச் சுருதி கூட்டப்பட்டிருக்கும். சுத்தசுரங்களே அதில் வாசிக்கமுடியும். யாழைச் சுத்த மேளமாகிய செம்பாலை அல்லது ஹரிகாம்போஜி மேளத்துக்கு முதலில் சுருதி கூட்டி, பின்னர் வேறு இராகங்களைக் கிரகபேதம் செய்து வாசித்தனர்[8].

யாழின் வீழ்ச்சி

தொகு

யாழ் தற்போது செல்வாக்கிழந்து வழக்கொழிந்தும் விட்டது. வீணையின் வரவே யாழின் செல்வாக்கையழித்தது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். யாழ் பல நூற்றாண்டுகள் உருவத்தில் முன்னேற்றம் அடைந்து வீணையாக மாறியது என்ற கருத்தையும் இவர்கள் தெரிவிக்கிறார்கள். நுட்ப சுருதிகளை வாசிக்கக்கூடியது வீணை. அத்துடன் உலோகத் தந்திகளோடு கூடிய மெட்டுக்கள் உள்ளது வீணை. யாழைக் காட்டிலும் வாசிப்பதற்குச் சுலபமானதும் அதே சமயத்தில் ஒலிக்கும் நாதம் அற்புதமாகவும் இருந்ததால், வீணையின் வரவு யாழின் செல்வாக்கைக் குறைத்தாலும், வீணையும் யாழும் சேர்ந்தே பல நூற்றாண்டுகள் இருந்திருக்கின்றன எனக் கருதப்படுகின்றது[8].

இக்கால யாழ் (படம்) ஒப்புநோக்கம்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு
  1. சுவாமி விபுலானந்தர். யாழ் நூல். கரந்தைத் தமிழ்க்கல்லூரி.
  2. லலிதாராம் (February 15 – March 14, 2005). "யாழ் என்னும் இசைக்கருவி - ஒரு பார்வை". Varalaaru.com. No. 8.{{cite magazine}}: CS1 maint: date format (link)
  3. யாழ் என்னும் இசைக்கருவி - ஒரு பார்வை
  4. சீவக சிந்தாமணி.பா.வரி 730.
  5. சீவக சிந்தாமணி. பா.வரி 732.
  6. சிலப்பதிகாரம்,கடலாடுகாதை வரி.18
  7. சிலப்பதிகாரம்,கடலாடு காதை வரி.21-22
  8. 8.0 8.1 8.2 8.3 செல்லத்துரை, சே.ச., தென்னக இசையியல், ப: 103, 1984, வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல்
  9. பொருநராற்றுப்படை.பாடல் வரிகள் 4-22
  10. புலவர் கோ. பார்த்தசாரதி,'பத்துப்பாட்டு வரிசை-பொருநராற்றுப்படை' அநுராகம் வெளியீடு. 1992
  11. பெரும்பாணாற்றுப்படை,பாடல் வரிகள் 3-15
  12. சராசரி ஒன்பது அங்குலம்
  13. வளைவுப் பகுதியின் குறுக்களவு
  14. இனி, இசைத்தமிழ் நூலாகிய பெருநாரைப் பெருங்குருகும் பிறவும் தேவலிருடி நாரதன் பஞ்ச பாரதீயம் முதலா உள்ள தொன்னூல்கள் இறந்தன. நாடகத் தமிழ்நூலாகிய பரதம் அகத்தியம் முதலாக உள்ள தொன்னூல்களும் இறந்தன. பின்னும் முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றியம் என்பனவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணை அல்லது முதல் நடு இறுதி காணாமையின் அவையும் இறந்தன போலும்.
  15. இறக்கவே வரும் பெருங்கலம் முதலிய பிறவுமாம். இவற்றுள் பெருங்கலமாவது பேரியாழ்; அது கோட்டினது அளவு பன்னிரு சாணும், வணர் அளவு சாணும், பத்தர் அளவு பன்னிரு சாணும், இப் பெற்றிக்கு ஏற்ற ஆணிகளும், திவவும், உந்தியும் பெற்று ஆயிரம் கோல் தொடுத்து இயல்வது; என்னை?
  16. “ஆயிரம் நரம்பிற்றது ஆதியாழ் ஆகும்,
    ஏனை உறுப்பும் ஒப்பன கொளலே,
    பத்தர் அளவும் கோட்டினது அளவும்,
    ஒத்த என்ப இருமூன்று இரட்டி,
    வணர் சாண் ஒழித்து வைத்தனர் புலவர்”

    என நூலுள்ளும்,

  17. “தவ முதல் ஊழியின் தானவர் தருக்கு அற,
    புல மகனாளர் புரி நரம்பு ஆயிரம்,
    வலி பெறத் தொடுத்த வாக்கு அமைப் பேரியாழ்ச்,
    செலவுமுறை எல்லாம் செய்கையில் தெரிந்து
    மற்றை யாழும் கற்று முறை பிழையான் (வெருங்கதை 4-3 அடி 51-55)

    எனக் கதையினுள்ளும் கூறினார் ஆகலான் பேரியாழ் முதலிய ஏனவும் இறந்தன எனக் கொள்க.

  18. "FROM YAZH TO GUITAR - AN OVERVIEW". பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2017.
  19. சாத்தான் குளம் அ.இராகவன், 'இசையும் யாழும்'
  20. தமிழ் செம்மொழி மாநாடு - கண்காட்சி மறக்க முடியாத மகிழ்ச்சி: மாணவிகள் உற்சாகம்
தொகு தமிழிசைக் கருவிகள்
தோல் கருவிகள் ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
நரம்புக் கருவிகள் வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம் | கின்னாரம்
காற்றிசைக் கருவிகள் கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம் |கொக்கரை|மோர்சிங்
கஞ்சக் கருவிகள் தாளம் | சேகண்டி |
பிற கொன்னக்கோல் | கடம் |
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாழ்&oldid=3976993" இலிருந்து மீள்விக்கப்பட்டது