ஈழகேசரி ஈழத்தின் ஆரம்பகால பத்திரிகைகளுள் மிக முக்கியமானது.[2] 22.06.1930 அன்று ஈழகேசரி வார இதழின் முதல் இதழ் வெளியானது.[1] ஈழகேசரியைத் தொடக்கியவர் நா. பொன்னையா என்பவர். 1958 ஜூன் 6 ஆம் திகதி வரை ஈழகேசரி வெளியானது. நா. பொன்னையா, சோ. சிவபாதசுந்தரம், அ. செ. முருகானந்தம், இராஜ அரியரத்தினம் ஆகியோர் ஈழகேசரி ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர்.

ஈழகேசரி
வகைநாளிதழ்
நிறுவுனர்(கள்)நா. பொன்னையா
ஆசிரியர்நா. பொன்னையா,
சோ. சிவபாதசுந்தரம்,
அ. செ. முருகானந்தம்,
இராஜ அரியரத்தினம்
நிறுவியதுசூன் 22, 1930 (1930-06-22)
மொழிதமிழ்
வெளியீட்டு முடிவுசூன் 6, 1958 (1958-06-06)
சகோதர செய்தித்தாள்கள்கேசரி (ஆங்கில வாரப் பத்திரிகை)[1]
நாடுஇலங்கை
நகரம்யாழ்ப்பாணம்

நோக்கம் தொகு

அடிமைத் தளையில் கிடந்த தமிழ் மக்களைத் தட்டியெழுப்பி அவர்களிடையே அறிவு வளர்ச்சியை ஊக்குவித்தலையும், நாட்டில் ஏற்பட்டுள்ள சமூகச் சீரழிவைத் தடுத்து அதனை முன்னேற்றுவதுமே ஈழகேசரியின் நோக்கமாக அமைந்தது. இது, அதன் முதழ் இதழில் வெளிவந்த கட்டுரையில் இருந்து தெளிவாகிறது.

.... அறியாமை வயப்பட்டு உறங்கிக் கிடக்கும் மக்களைத் தட்டியெழுப்பி அறிவுச்சுடர் கொழுத்துவதற்கும் ஏற்ற நல்விளக்குப் பத்திரிகையே .............. நமது நாடு அடிமைக் குழியிலாழ்ந்து, அன்னியர் வயப்பட்டு, அறிவிழந்து, மொழிவளம் குன்றி, சாதிப்பேய்க்காட்பட்டு, சன்மார்க்க நெறியழிந்து, உன்மத்தராய், மாக்களாய் உண்டுறங்கி வாழ்தலே கண்ட காட்சியெனக் கொண்டாடுமிக் காலத்தில் எத்தனை பத்திரிகைகள் தோன்றினும் மிகையாகாது.

மேலும் தன்னலமற்ற தேசத் தொண்டு புரியும் அவாவும் இப் பத்திரிகை வெளிவரக் காரணமாக அமைந்ததாக இக் கட்டுரையில் கூறப்படுகிறது.

...... மக்களாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தன்னலமற்ற தியாக சிந்தையுடனும் யாதானுமொரு பணியிற் கடனாற்றுதல் வேண்டுமென்னும் பேரறிஞர் கொள்கை சிரமேற் கொண்டும் எமது சிற்றறிவிற் போந்தவாறு "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவவானினும் நனிசிறந்தனவே" என்னும் ஆன்றோர் வாக்கின்படியும் தேசத்தொண்டு செய்தலே சிறப்புடையதெனக் கருதி இப்பணியை மேற்கொண்டோம்.

ஈழகேசரியின் தோற்றப் பின்னணி பற்றி ஆராய்ந்த கா. சிவத்தம்பி, அக் காலத்தின் சமூக அரசியற் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் அரசியல் மயப்படுத்தப்பட்ட காலத்திலேயே இப் பத்திரிகை தொடங்கப்பட்டதென எடுத்துக் காட்டுகிறார். அத்துடன் 1841 இல் தொடங்கிய யாழ்ப்பாணப் பத்திரிகைத் துறை வரலாற்றில் ஏறத்தாழத் தொண்ணூறு ஆண்டுகள் கழிந்த பின்னர் ஈழகேசரியே முதலாவது மதச் சார்பற்ற செய்திப் பத்திரிகை என்பது அவர் கூற்று.

இவற்றையும் பார்க்க தொகு

  • ஈழகேசரி, ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வெளியான பத்திரிகை

மேற்கோள்கள் தொகு

உசாத்துணைகள் தொகு

  • சிவத்தம்பி, கார்த்திகேசு; யாழ்ப்பாணம் சமூகம், பண்பாடு, கருத்துநிலை; குமரன் அச்சகம், கொழும்பு, ஆவணி 2000.

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈழகேசரி&oldid=3235119" இருந்து மீள்விக்கப்பட்டது