சோ. சிவபாதசுந்தரம்

சோ. சிவபாதசுந்தரம் (ஆகத்து 27, 1912[1] - நவம்பர் 8, 2000) ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவரும் ஒலிபரப்பாளரும் ஆவார். ஈழகேசரி பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியவர். சிறுகதைகள் மற்றும் பிரயாணக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

சோ. சிவபாதசுந்தரம்
SoSivapathasundaram.jpg
பிறப்புஆகத்து 27, 1912(1912-08-27)
ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்
இறப்புநவம்பர் 8, 2000(2000-11-08) (அகவை 88)
இலண்டன், ஐக்கிய இராச்சியம்
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்விகொழும்பு சட்டக் கல்லூரி,
இலங்கைப் பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
அறியப்படுவதுஒலிபரப்பாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர்
பெற்றோர்சோமசுந்தரம்பிள்ளை
வாழ்க்கைத்
துணை
ஞானதீபம்
பிள்ளைகள்மஞ்சுபாஷிணி, ரவிலோச்சனன், பிரசன்னவதனி

வாழ்க்கைச் சுருக்கம்தொகு

ஈழத்தில் யாழ்ப்பாண மாவட்டம், ஊர்காவற்துறையில் சோமு உடையார் பேரன் என்றழைக்கப்பட்ட சோமசுந்தரம்பிள்ளை என்பவருக்கு 1912 ஆம் ஆண்டில் பிறந்தவர் சிவபாதசுந்தரம். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி கற்ற இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். ஆங்கிலம், தமிழ், மற்றும் சமக்கிருந்தம் போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்ற இவர் கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டமும் படித்தார். குரும்பசிட்டி நா. பொன்னையாவால் ஆரம்பிக்கப்பட்ட ஈழகேசரி பத்திரிகையில் 1938 ஆம் ஆண்டில் ஆசிரியரானார்.[2] 1942 வரை ஈழகேசரியில் நான்கு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் "ஈழகேசரி இளைஞர் கழகம்" என்ற அமைப்பைத் தோற்றுவித்து 200 இற்கும் அதிகமான அங்கத்தவர்களை இணைத்தார்..[2] 1942 இல் கொழும்பு வானொலியில் பணியில் சேர்ந்தார்.

1941 ஆம் ஆண்டு லண்டன் பிபிசி நிறுவனத்தில் தமிழ் ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. இரண்டாவது உலகப் போர் முடிவடைந்த பின்னர் தமிழ் ஒலிபரப்பை விரிவுபடுத்தும் நோக்குடன் பிபிசி நிறுவனம் சிவபாதசுந்தரத்தை அழைத்தது. 1947 செப்டம்பரில் இவர் அங்கு சென்று பணியில் சேர்ந்தார். 1948 இல் தமிழ் ஒலிபரப்பை ஒரு சஞ்சிகை நிகழ்ச்சியாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இலண்டனில் இலங்கை தூதரகத்திலிருந்த குமாரசுவாமி, இந்திய தூதரகத்திலிருந்த பார்த்தசாரதி ஆகியோருடன் ஆலோசனை நடத்தி சஞ்சிகை நிகழ்ச்சியாக விரிவுபடுத்தப் பட்டது. அப்போது (1948இல்) பாரதியாரின் "தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்ற பாடலை வைத்து தமிழ் ஒலிபரப்புக்கு தமிழோசை என பெயர் சூட்டினார்.[3]

இலங்கை திரும்பிய பின்னர் சிவபாதசுந்தரம் இலங்கை வானொலியில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த முயன்றபோது இனத்துவேசம் காரணமாகத் தடுத்து நிறுத்தப்பட்டார்.[4]. இதனை அடுத்து இலங்கை வானொலியை விட்டு வெளியேறி லீவர் பிறதர்சு நிறுவனத்தில் விளம்பர இயக்குநராக ஒன்பதாண்டுகள் பணிபுரிந்தார்.

ஒலிபரப்புக் கலை நூல்தொகு

பிபிசி தமிழோசை எனப் பெயரிட்டு தமிழ் நிகழ்ச்சியை பிபிசியில் ஆரம்பித்தவர்களில் இவரும் ஒருவர். பிபிசியில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு "ஒலிபரப்புக் கலை" என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் அமுத நிலையத்தாரால் 1954 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலிற்கு ராஜாஜி ஆசியுரை எழுதியிருந்தார்.[5] இந்நூல் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது..[2]

சென்னை வானொலி நிலையம், காமராஜர், அண்ணாதுரை போன்ற பிரமுகர்கள் காலமானபோது இறுதி ஊர்வலத்தின் நேர்முக வர்ணனையாளராக சிவபாதசுந்தரத்தை அழைத்திருந்தது[5]. சிட்டி பெ. கோ. சுந்தரராஜனும் சிவபாதசுந்தரமும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொடர் உரையாற்றலுக்கு அழைக்கப்பட்டனர். இவ்விருவரும் அண்ணாமலை, பாண்டிச்சேரி சென்னைப் பல்கலைக்கழகங்களில் வருகை தரும் பேராசிரியர்களாகவும் பணியாற்றினர்[5].

சமூகப் பணிகள்தொகு

சிவபாதசுந்தரம், தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்து செயல்பட்டார். சென்னையில் 1959 ஆம் ஆண்டில் நடந்த அனைத்திந்திய எழுத்தாளர் மகாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவராகவும் பணியாற்றினார். 1972 இல் ராஜமய்யரின் நூற்றாண்டு விழாக் குழுவின் பொருளாளராகவும் பணியாற்றியிருந்தார்[5].

சிவபாதசுந்தரனாரின் மனைவி ஞானதீபம் அம்மையார். இவர்களுக்கு மஞ்சுபாஷிணி, ரவிலோச்சனன், பிரசன்னவதனி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். மஞ்சுபாஷிணி ஒரு மருத்துவர். தமிழோசையில் பணியாற்றி பல தகவல்களை அளித்து வந்தார். பிரசன்னவதனி கலாக்ஷேத்திராவில் பரத நாட்டியம் பயின்றார். 1975 ஆம் ஆண்டில் இந்திய அரசு இந்தியக் கலைகளைச் சித்தரிக்கும் தொடர் அஞ்சல் தலைகளை வெளியிட்டது. அதில் பரத நாட்டியம் ஆடுபவராக பிரசன்னவதனியின் படம் இடம் பெற்றிருந்தது.[6]

இவரது நூல்கள்தொகு

தளத்தில்
சோ. சிவபாதசுந்தரம் எழுதிய
நூல்கள் உள்ளன.
 • மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில் (1947)
 • ஒலிபரப்புக்கலை (1954)
 • கௌதமபுத்தர் அடிச்சுவட்டில் (1960)
 • தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் (1977)
 • சேக்கிழார் அடிச்சுவட்டில் (1978)

மறைவுதொகு

சிவபாதசுந்தரம் 2000 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் லண்டனில் காலமானார்.[6]

மேற்கோள்கள்தொகு

 1. "obituary". அஞ்சல் (சனவரி 2001). பார்த்த நாள் 12 சூன் 2020.
 2. 2.0 2.1 2.2 "தமிழ் அகதி 1990.06". பார்த்த நாள் 1 சூன் 2016.
 3. பிபிசி தமிழோசை பொன்விழா நிகழ்ச்சியில் சிவபாதசுந்தரம் அளித்த பேட்டியில் அவரே சொன்ன தகவல்
 4. மாதகலான் யோகராஜா, தமிழ் வெகுஜன தொடர்பு பிதாமகர், ஒலிபரப்பு வாத்தியார், தமிழர் தகவல், பெப்ரவரி 2000
 5. 5.0 5.1 5.2 5.3 இரு சுந்தரர்கள், நரசய்யா, புதுகைத் தென்றல்
 6. 6.0 6.1 The 'Radio Vadhyar' as a Tamil scholar

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோ._சிவபாதசுந்தரம்&oldid=2985303" இருந்து மீள்விக்கப்பட்டது