சு. நடேசபிள்ளை

சுப்பையா நடேசபிள்ளை (Subaiya Nadesapillai) அல்லது சு. நடேசன் (S. Nadesan, மே 21, 1895 - சனவரி 15, 1965) இலங்கையின் தமிழ்த் தலைவர்களில் ஒருவரும், அரசியல்வாதியும் ஆவார். இலங்கை அரசாங்க சபை, நாடாளுமன்றம் , செனட் சபை ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தவர்.

சுப்பையா நடேசபிள்ளை
இலங்கையின் அஞ்சல், ஒலிபரப்புத் துறை அமைச்சர்
பதவியில்
1952–1956
இலங்கை நாடாளுமன்றம்
for காங்கேசன்துறை
பதவியில்
1952–1956
முன்னையவர்சா. ஜே. வே. செல்வநாயகம், தகா
பின்னவர்சா. ஜே. வே. செல்வநாயகம், இதக
இலங்கை அரசாங்க சபை யாழ்ப்பாண உறுப்பினர்
பதவியில்
1934–1947
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 21, 1895
தஞ்சாவூர், பிரித்தானிய இந்தியா
இறப்புசனவரி 15, 1965(1965-01-15) (அகவை 69)
தேசியம்இலங்கைத் தமிழர்
துணைவர்சிவகாமசுந்தரி இராமநாதன்
தொழில்செனட்டர்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

தமிழ்நாடு, நாகப்பட்டணத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவருக்கும், தஞ்சாவூரைச் சேர்ந்த இலக்கணம் இராமசாமிப்பிள்ளை என்பவரின் மகளுக்கும் தஞ்சாவூரில் பிறந்தவர் நடேசன். இவரின் இயற்பெயர் நாகநாதன். 19 வயதில் பட்டதாரியான நாகநாதன் சட்டம் பயின்று இளமையிலேயே நகராண்மைக்கழக உறுப்பினரானார். முத்துக்கிருஷ்ண பரமஹம்சர் என்பவரிடம் சமயம் பயின்று தரிசனத்திரயம் என்ற நூலையும் எழுதினார்[1].

சேர் பொன். இராமநாதனும், சேர் பொன். அருணாசலமும் தமிழ்நாடு சென்றிருந்த வேளை அருள்பரானந்த சுவாமிகள் மூலம் இலக்கணம் இராமசாமிப்பிள்ளை குடும்பத்துடன் தொடர்பு ஏற்பட்டு நாகநாதனைப் பற்றி அறிந்தனர். இராமநாதன் நாகநாதனை நடேசன், இங்கே வா என்று அழைத்தாராம். அன்றில் இருந்து அவர் பெயர் நடேசன் ஆகியது[1]. இராமநாதனுடன் 1923 ஆம் ஆண்டில் இலங்கை வந்தார் நடேசன். 1924 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரியில் ஆசிரியராகி, பின்னர் அதன் அதிபரானார். 1926 ஆம் ஆண்டில் இராமநாதனின் புதல்வி சிவகாமசுந்தரியைத் திருமணம் புரிந்தார்[2].

அரசியலில் தொகு

நடேசன் பிரித்தானிய இலங்கையின் அரசாங்க சபை உறுப்பினராக 1934 முதல் 1947 வரை யாழ்ப்பாணப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக 1947 தேர்தலில் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு சா. ஜே. வே. செல்வநாயகத்திடம் தோற்றார்.[3]. ஆனாலும், பின்னர் 1952 தேர்தலில் செல்வநாயகத்தை எதிர்த்து காங்கேசன்துறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1952 முதல் 1956 வரை இலங்கையின் அஞ்சல், தந்தி, மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.[4] இவர் சார்ந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி சிங்களம் மட்டும் சட்டத்திற்கு ஆதரவாகச் செயற்பட்டமையினால் அக்கட்சியில் இருந்து பின்னர் விலகி,[5] பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் இலங்கை சுதந்திரக் கட்சியின் அரசில் 1960 முதல் இறக்கும் வரை மேலவை உறுப்பினராக இருந்தார்.

நூல் இயற்றல் தொகு

தளத்தில்
சு. நடேசபிள்ளை எழுதிய
நூல்கள் உள்ளன.

ஆங்கிலப் பாடல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தார். வடமொழியும் நன்கறிந்தவர். வடமொழியில் காளிதாசர் இயற்றிய சகுந்தலை நாடகத்தைத் தழுவி "சகுந்தலை வெண்பா" என்ற காப்பியத்தை எழுதி வெளியிட்டார் நடேசபிள்ளை. 343 செய்யுள்களில் இது அமைந்துள்ளது. இது அவர் 1934 ஆம் ஆண்டில் கலாநிலைய வெளியீடான ஞாயிறு என்னும் முத்திங்கள் இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் நூலாக வெளிவந்தது. இவரின் கட்டுரைகள் பல ஞாயிறு, கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. கலாநிலையம், ஆரிய திராவிடாபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும் இவர் இருந்தார்[1].

 • சகுந்தலை வெண்பா. சுன்னாகம்: இராமநாதன் கழகம், 1வது பதிப்பு, 1963. (கொழும்பு: மெய்கண்டான் அச்சியந்திரசாலை). 102 பக்கம்
 • கதிர்காமநாதன் திருப்பள்ளியெழுச்சி

வேறு சிறப்புகள் தொகு

 • சிதம்பரத்தில் இடம்பெற்ற சென்னை சைவசித்தாந்த சமாசத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கினார்.
 • சென்னையில் நடந்த தமிழ் விழாவில் பேருரை நிகழ்த்தினார்.
 • சென்னைப் பல்கலைக்கழகத்தில் சொர்ணம்மாள் ஞாபகார்த்தப் பேருரை நிகழ்த்தினார்.
 • மதுரை நான்காம் தமிழ்ச்சங்கப் பொன்விழாவிற்குத் தலைமை வகித்தார்.

மேற்கோள்கள் தொகு

 1. 1.0 1.1 1.2 க.சி.குலரத்தினம், சு. நடேசபிள்ளை அவர்கள் (21-5-1895 - 15-1-1965), மில்க்வைட் செய்திகள், சனவரி 1, 1981, யாழ்ப்பாணம்
 2. Sir Ponnambalam Ramanathan, KCMG, QC, MLC. பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம் Royal Family of Jaffna
 3. 27th death anniversary of S. J. V. Chelvanayakam பரணிடப்பட்டது 2011-06-29 at the வந்தவழி இயந்திரம் Sri Lanka Daily News - April 27, 2004
 4. Tamils In Independent Ceylon - Suppiramaniam Makenthiran
 5. Dudley Senanayake - the all-time gentleman பரணிடப்பட்டது 2012-02-14 at the வந்தவழி இயந்திரம் Sunday Observer - April 13, 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._நடேசபிள்ளை&oldid=3829224" இலிருந்து மீள்விக்கப்பட்டது