தெற்கத்திய கருஞ்சிவப்பு மரங்கொத்தி
தெற்கத்திய கருஞ்சிவப்பு மரங்கொத்தி (southern Rufous woodpecker, அறிவியல் பெயர்: Micropternus brachyurus jerdonii) என்பது கருஞ்சிவப்பு மரங்கொத்தியின் துணையினம் ஆகும்.[1] இது தென்னிந்தியாவில் காணப்படுகிறது.
விளக்கம்
தொகுமைனா அளவுள்ள தெற்கத்திய கருஞ்சிவப்பு மரங்கொத்தி சுமார் 25 செ. மீ. நீளம் இருக்கிறது. இதன் மேல் அலகு கறுப்பாகவும், கீழ் அலகு வெள்ளையாகவும் இருக்கும். விழிப்படலம் பழுப்புத் தோய்ந்த சிவப்பாகவும், கால்கள் நீலந்த் தோய்ந்த பச்சை நிறத்திலும் இருக்கும். உடலின் மேற்பகுதி கருஞ்சிவப்பாகக் கறுப்புக் குறுக்குக் கோடுகளுடன் காணப்படும். கழுத்தின் தூவிகள் செதில் போன்ற தோற்றம் தரும். மார்பும் வயிறும் கருஞ்சிவப்பாக குறுக்குக் கோடுகள் இன்றி காணப்படும். ஆண் பறவைக்கு கண்களுக்குக் கீழே பிறை வடிவமாக ஆழ்ந்த சிவப்பு நிறத் தூவிகள் வளர்ந்திருக்கும்.[2]
பரவலும் வாழிடமும்
தொகுதெற்கத்திய கருஞ்சிவப்பு மரங்கொத்தியானது தென்னிந்தியாவின் கருநாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களிலும் இலங்கையிலும் மலைத் தொடர்களைச் சார்ந்த மூங்கில் காடுகளுடன் கூடிய இலையுதிர் காட்டுப் பகுதிகளில் சமவெளி முதல் மலைகளில் 1000 மீட்டர் உயரம் வரை காணப்படுகிறது.[2]
நடத்தையும் சூழலியலும்
தொகுஎறும்புகள் நிறைந்த காடுகளில் இதனை இணையாக காண இயலும். எறும்புகளும், எறும்புகளின் முட்டையுமே இதன் முதன்மை உணவாகும். செவ்வெறும்பு முதலான எறும்புகளே முதன்மையாக உண்பதாக அறியப்படுகிறது.[3] மரங்களில் கூடுகட்டி வாழும் இந்த எறும்புகளை சற்று நேரம் கொத்திக் கலைத்த பின்னர் வேறு ஒரு கிளையில் சென்று அமர்ந்து இறக்கைளில் ஒட்டிக்கொண்டுள்ள எறும்புகளைப் பிடித்து உண்ணும். இதன் தலை, வயிறு, வால் முனை ஆகியவற்றில் ஒருவகை நாற்றம் கொண்ட பசையுள்ளது. அதில் எறும்புகள் ஒட்டிக் கொள்ளும். அவற்றை இது பிடித்து உண்ணும். ஒன்றின் வயிற்றில் 2600 எறும்புகள் இருந்தததாக எண்ணியுள்ளனர். சிலசமயங்களில் பழங்களையும் உண்ணும். மூங்கில்களையும் அடிமரங்களையும் அலகால் விடாது தட்டி அதிர்வொலியை உண்டாக்கும்.[2]
இவை பெப்ரவரி முதல்ஏப்ரல் வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடும். எறும்புகள் கூடுகட்டி வாழும் மரங்களில் அவை கூடுகட்டியுள்ள இடத்திலேயே குடைந்து பொந்து செய்து இரண்டு அல்லது மூன்று வெள்ளை முட்டை இடும். சிலசயமங்களில் மரங்களில் பிற மரங்கொத்திகளைப் போல பொந்து குடைவதும் உண்டு.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Malherbe, Alfred (1849). "Description de quelques nouvelles especes de Picines (Picus, Linn.)". Revue et magasin de zoologie pure et appliquée: 529–544. https://biodiversitylibrary.org/page/2343765.
- ↑ 2.0 2.1 2.2 2.3 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 321–322.
- ↑ Santharam, V. (1997). "Display behaviour in Woodpeckers". Newsletter for Birdwatchers 37 (6): 98–99. https://archive.org/details/NLBW37_6/page/n8.