தெற்கு பொரிப்புள்ளி ஆந்தை

பறவை துணை இனம்

தெற்கு பொரிப்புள்ளி ஆந்தை (southern mottled wood owl, அறிவியல் பெயர்: Strix ocellata ocellata) என்பது பொரிப்புள்ளி ஆந்தையின், துணையினம் ஆகும்.[1] இது தென்னிந்தியாவில் காணப்படுகிறது.

விளக்கம்

தொகு

பெரிய ஆந்தையான இது சுமார் 48 செ. மீ. நீளம் இருக்கும். அலகு கறுப்பாகவும், விழி இமைகள் வெளிர் ஆரஞ்சு நிறமாகவும், விழிப்படலம் ஆழ்ந்த பழுப்பாகவும் இருக்கும். கொம்புகள் போன்று தோற்றம் தரும் காதுத் தூவிகள் இதற்கு இல்லை. உடலின் மேற்பகுதியில் பல நிறங்களில் சிறியதும் பெரியதுமான புள்ளிகளும், சிறிய கோடுகளும் ஒழுங்கின்றிப் பரந்திருக்கும். முக வட்டம் வெண்மையாகக் கறுப்புக் கோடுகளோடு காணப்படும்.[2] கழுத்தைச் சுற்றிலும் சாக்லெட் நிறந்தோய்ந்த கறுப்பு வெள்ளைக் கோடுகள் காணப்படும். தொண்டை செம்பழுப்பாகவும் கருப்பாகவும் வெள்ளைப் புள்ளிகளோடும் இருக்கும். முன்கழுத்தில் ஒரு வெள்ளைக் கோடு காணலாம். மார்பும் வயிறும் பொன்னிற மஞ்சள் தோய்ந்த வெண்மையாகச் சிறுத்த கறுப்பு பட்டைகளுடன் காணப்படும்.[3]

பரவலும் நடத்தையும்

தொகு

தெற்கு பொரிப்புள்ளி ஆந்தை தென்னிந்தியா முழுவதும் காணப்படுகிறது. அடர்த்தியற்ற மரங்கள் நிற்கும் காடுகள், மாந்தோப்புகள், பெரிய புளியமரங்கள் நிற்கும் தோப்புகள் ஆகியவற்றில் ஊர்ப்புறங்களைச் சார்ந்து இருக்கும். பகல் முழுவதும் ஆணும் பெண்ணும் என இணையாக மரங்களில் இலைகளிடையே அருகருகே அமர்ந்து இருக்கும். இரவில் வெளிப்பட்டு இரை தேடும். வெயில் நேரத்திலும் இதனால் சிரமமின்றி பறக்க இயலும். எலிகள், சுண்டெலிகள், அணில்கள் போன்றவை இதன் முதன்மை உணவாகும். பெரிய பறவைகள், ஒணான்கள், நத்தை, நண்டு முதலியவற்றையும் உண்ணும். பெரிய கருந்தேள் ஒன்றும் இதன் வயிறில் காணப்பட்டுள்ளது.[3]

சாக்குருவி ஆந்தை போல ஒற்றைக் குரலில் கத்தும். இனப்பெருக்க காலத்தில் சூஉஹுஅ-எஏ என நடுங்கும் குரலில் கத்திய பின் பகலில் வாழும் தன் மறைவிடத்தில் இருந்து வெளிப்படும். இரவிலும் இவ்வாறு கத்தும்.[3]

இனப்பெருக்கம்

தொகு

தெற்கு பொரிப்புள்ளி ஆந்தை நவம்பர் முதல் ஏப்ரல் வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடும். மரப் பொந்துகளில் புற்களைக் கொண்டு மெத்தென்று ஆக்கி முட்டை இடும். அரிதாக குச்சிகளைக் கொண்டு மரங்களில் கூடு கட்டுவதும் உண்டு. பொதுவாக இரண்டு முட்டைகளை இடும். முட்டைகள் பாலாடை வெண்மை நிறத்தில் இருக்கும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Ali, S & SD Ripley (1981). Handbook of the Birds of India and Pakistan. Volume 3 (2nd ed.). pp. 304–307.
  2. Rasmussen PC & JC Anderton (2005). Birds of South Asia. The Ripley Guide. Volume 2. Smithsonian Institution and Lynx Edicions. p. 242.
  3. 3.0 3.1 3.2 3.3 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 270–271.