தேர்தல் பத்திரம் (இந்தியா)

தேர்தல் பத்திரம் (Electoral bond)என்பது அரசியல் கட்சிக்கு அல்லது தனிநபர்களுக்கு நன்கொடை செலுத்த விரும்பும் ஒரு இந்தியக் குடிமகன் அல்லது இந்தியாவில் இணைக்கப்பட்ட நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளிலிருந்து வாங்கக்கூடிய ஒரு உறுதிமொழி பத்திரம்[1] (Promissory note) போன்றது. இந்தியக் குடிமகன் அல்லது ஒரு நிறுவனம் விரும்பும் தகுதியுள்ள அரசியல் கட்சிக்கும் இத்தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக வழங்கலாம். தேர்தல் பத்திரங்கள் வங்கிப் பணத்தாள்கள் போன்றதே. இப்பத்திரங்களுக்கு வட்டி கிடையாது. ஒரு தனிநபர் அல்லது ஒரு நிறுவனம் இந்த பத்திரங்களை டிஜிட்டல் முறையில் அல்லது காசோலை மூலம் வாங்க அனுமதிக்கப்படும்.[2]

மக்களவை ஒப்புதல் இல்லாமல் மேலவையில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் பத்திரங்கள் நிதி மசோதா (2017) படி, இந்திய அரசு 2 சனவரி 2018 அன்று வெளியிட்ட அரசானை[3] மூலம் தேர்தல் பத்திரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் பத்திரங்கள் ரூபாய் 1,000, 10,000, 1,00,000 மற்றும் 1 கோடி மதிப்புகளில் பாரத ஸ்டேட் வங்கியால் வெளியிடப்படுகிறது.[4] இத்தேர்தல் பத்திரங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் புது தில்லி, காந்திநகர், சண்டிகர், பெங்களூரு, போபால், மும்பை, ஜெய்ப்பூர், லக்னோ, சென்னை, கொல்கத்தா மற்றும் கவுகாத்தி போன்ற 29 கிளைகளிலும் பணம் செலுத்தி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை செலுத்துவர்கள் பெறலாம்.

தேர்தல் பத்திரம் வாங்கிய நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். தேர்தல் பத்திரங்கள் ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்தின் 10 நாட்களுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் விற்கப்படுகிறது. இந்திய மக்களவைத் தேர்தல் ஆண்டில் மட்டும் 30 நாட்கள் தேர்தல் பத்திரங்கள் கூடுதலாக விற்பனைக்கு உள்ளது.

தேர்தல் பத்திரம் நன்கொடையாக பெற தகுதிகள்

தொகு
  • மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951[5] (1951 இன் 43) பிரிவு 29A இன் கீழ் பதிவு செய்யப்பட்டு, சமீபத்திய பொதுத் தேர்தல்கள் அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் குறைந்தது ஒரு சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தல் பத்திரங்களை நன்கொடையாகப் பெற தகுதியுடையவர்கள்.
  • இந்தியத் தேர்தல் ஆணையத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாக செலுத்த முடியும்.
  • தேர்தல் பத்திரங்களில் நன்கொடையாளரின் பெயர் இருக்காது. இதனால், நன்கொடையாளரின் அடையாளத்தை அரசியல் கட்சி அறிய முடியாது. தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக செலுத்துபவர் மற்றும் பெறும் அரசியல் கட்சிகளுக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும்.

தேர்தல் பத்திரம் அறிமுகத்தின் காரணம்

தொகு

நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசுத் திட்டத்தின் படி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருபவர்களின் விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தாமல், ஒரு கட்சிக்கு அளிக்கப்பட்ட அனைத்து நன்கொடைகளும் இருப்புநிலைக் கணக்குகளில் கணக்கிடப்படுவதை உறுதி செய்வதற்காக தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தேர்தல் பணப் பத்திரங்கள், கறுப்புப் பணத்தை தேர்தலுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கும் என்று இந்திய அரசு கருதியது.

விமர்சனங்கள்

தொகு
  • அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்காக தேர்தல் பத்திரங்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால், அத்தகைய நன்கொடைகளின் விவரங்களை பொதுவில் வெளியிடுவதை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
  • தேர்தல் பத்திரத்தை வாங்குபவர் அல்லது நன்கொடை பெறும் அரசியல் கட்சி நன்கொடையாளரின் அடையாளத்தை வெளிப்படுத்த தேவையில்லை என்பதால், ஒரு நிறுவனத்தின் பங்குதாரர்கள் நிறுவனத்தின் பங்களிப்பை அறியாமல் இருப்பார்கள்.
  • ஒரு அரசியல் கட்சிக்கு எப்படி, யார் மூலம் நிதி வழங்கப்பட்டது என்பது பற்றி வாக்காளர்களுக்கு தெரியாது. தேர்தல் பத்திரத் திட்டத்தை எதிர்ப்பவர்கள், நன்கொடையாளரின் அடையாளத்தை இரகசியமாக வைத்திருப்பதால், அது கருப்புப் பணத்தின் வரவுக்கு வழிவகுக்கும் என்று வாதிடுகின்றனர்.
  • இந்த திட்டம் பெரிய நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பணத்தை நன்கொடையாக வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
  • சிவில் உரிமைகள் சமூகங்களின் கூற்றுப்படி, நன்கொடையாளர் "இரகசியம்" என்ற கருத்து ஜனநாயகத்தின் ஆவிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் செலுத்தப்படும் நன்கொடைகள் பணமோசடிக்கு சமம் என்று இந்திய தேசிய காங்கிரசு கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தேர்தல் பத்திரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நீக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

தொகு
  1. முன்னதாக, நிறுவன சட்டத்தின் கீழ் எந்த வெளிநாட்டு நிறுவனமும் எந்த அரசியல் கட்சிக்கும் நன்கொடை அளிக்க முடியாது.
  2. நிறுவனங்கள் சட்டப் பிரிவு 182 இன் படி ஒரு நிறுவனம் தனது சராசரி மூன்று வருட நிகர லாபத்தில் அதிகபட்சமாக 7.5% அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடைகளாக வழங்கலாம்.
  3. இச்சட்டத்தின் அதே பிரிவின்படி, நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர கணக்கு அறிக்கையில் தங்கள் அரசியல் நன்கொடைகளுக்கு வழகப்பட்ட் நன்கொடை விவரங்களை வெளியிட வேண்டும்.
  4. தேர்தல் நிபந்தனைகளில் இந்த நிபந்தனை நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்பதை உறுதி செய்வதற்காக இந்திய அரசு நிதி மசோதாவில் உரிய திருத்தம் கொண்டு வந்தது. இதனால் இந்திய, வெளிநாட்டு மற்றும் ஷெல் நிறுவனங்கள் கூட பங்களிப்பை யாரிடமும் தெரிவிக்காமல் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. Promissory note
  2. >What are electoral bonds?
  3. ELECTORAL BONDS
  4. SBI is the only authorised bank to issue such bond
  5. Representation of the People Act, 1951

வெளி இணைப்புகள்

தொகு