தேவன்குறிச்சி தொல்லியற் களம்

தேவன்குறிச்சி தொல்லியற் களம் என்பது மதுரைக்குத் தென்மேற்காக சுமார் 40 கி.மீ. தொலைவில், தே. கல்லுப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து வலப்புறமாகச் சென்றடையும் வகையில் அமைந்துள்ள மலைப்பகுதி ஆகும்.

சிவன் கோவிலும் சமணத் தடயங்களும் தொகு

தேவன்குறிச்சி மலை 6000 ஆண்டு வரலாற்றைக் கொண்டு விளங்குகிறது. அங்கு அமைந்துள்ள சிவன் கோவில் 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அதற்கும் முற்பட்ட காலத்தைச் சார்ந்த சமணச் சிற்பங்கள், கற்படுகைகள், கிணறுகள், குளங்கள், கல்வெட்டுகள், நடுகல் ஆகிய சிறப்புகளும் தேவன்குறிச்சி மலைக்கு உண்டு.

1976-77 தொல்லியல் ஆய்வு கண்டுபிடிப்புகள் தொகு

தேவன்குறிச்சி மலைப்பகுதியில் 1976-77இல் நிகழ்ந்த தொல்லியல் ஆய்விலிருந்து அங்கே 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் குடியேற்றம் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்தன. அதாவது, இடைக் கற்காலத்திலிருந்தே மக்கள் அங்கு வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் உருவாக்கிய நுண்கற்கருவிகள் கிடைத்துள்ளன. மேலும் அங்கு இரும்பு மற்றும் செப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதிலிருந்து, இரும்புக் கால மக்களும் செப்புக் கால மக்களும் அங்கு வாழ்ந்தது தெரிகிறது.

பெருங்கற்காலத்தைச் சார்ந்த பொருள்களும் தேவன்குறிச்சியில் கிடைத்துள்ளன. அவற்றுள் 2000 ஆண்டுகளுக்கு முந்திய கருப்பு மற்றும் சிவப்பு நிற மண்பாண்டங்கள், கல் மணிகள், கிளிஞ்சில் வளையல்கள், முதுமக்கள் தாழிகள் போன்றவை அடங்கும்.

வரலாற்றுக் காலத்தில் தேவன்குறிச்சியில் சமணமும் சைவமும் தழைத்தன என்பதற்கு ஆதாரமாக சமணச் சிற்பங்களும் சிவன் கோவிலும் உள்ளன.

சிவன் கோவில் தொகு

தேவன்குறிச்சியில் உள்ள சிவன் கோவில் அக்னீசுவரர் கோமதி அம்மன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. அது பாண்டியர் ஆட்சியின் பிற்காலத்தில் (12-13ஆம் நூற்றாண்டு) கட்டப்பட்டது. பின்னர் நாயக்கர் காலத்தில் அக்கோவில் புதுப்பிக்கப்பட்டு மீளமைக்கப்பட்டது. கோவிலுக்கு மானியங்கள் வழங்கப்பட்டதை விவரிக்கும் கல்வெட்டுகள் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216-1238) காலத்தவை.

கல்வெட்டுகளில் அக்கோவிலின் பழைய பெயர் "திருவாற்றேசுவரமுடைய நாயனார் கோவில்" என்று காணப்படுகிறது. கோவில் அமைந்துள்ள ஊர் "பெருங்குன்றூர்" என்று பெயர்கொண்டு, செங்குடியின் பிரிவாக இருந்தது என்று கல்வெட்டியல் அறிஞர் வேதாச்சலம் என்பவர் கூறுகிறார்.

இரு தெப்பக்குளங்கள், கிணறுகள் தவிர கோமதி அம்மன், நவகிரகங்கள், அனுமார் சந்நிதிகள் உள்ளன.

சமணச் சிற்பங்கள் தொகு

தேவன்குறிச்சியில் அமைந்திருந்த சமணக் கோவில் அழிந்து போயினும், இன்றைய சிவன் கோவில் பகுதியில் சமணச் சிற்பங்கள் உள்ளன. கோவிலின் பின் பகுதியில் மகாவீரர் அமர்ந்த நிலையில் உள்ள சிற்பம் காணப்படுகிறது. அதுபோலவே, உள்பகுதிக் கற்சுவரில் மகாவீரர் நின்றுகொண்டிருப்பதாகச் சிற்பம் உள்ளது.

நடுகல் தொகு

நாயக்கர் காலத்தைச் சார்ந்த நடுகல் ஒன்றும் தேவன்குறிச்சியில் உள்ளது. புலியோடு போராடி இறந்த வீரனின் நினைவாக நடப்பட்டது அந்த நடுகல்.

ஆதாரம் தொகு

எஸ்.எஸ்.கவிதா "தி இந்து" நாளிதழில் எழுதிய கட்டுரை - சூலை 3, 2013