தேவராட்டம்

தமிழ்நாட்டு ஆடற்கலை

தேவராட்டம் என்பது தென்னிந்தியாவில் வழங்கும் ஒரு நாட்டார் ஆடல் கலை வடிவம் ஆகும் . குறிப்பாகத் தமிழ்நாட்டில் வேட்டைத் தொழில் செய்து வந்த கம்பளத்து நாயக்கர் சமூகத்தினரில் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெற்ற சடங்கு எனலாம்.[1] உருமிமேளம், பறைமேளம் ஆகியன தேவராட்டத்தின் போது பயன்படுத்தும் இசைக் கருவிகளாக இருக்கின்றன. கம்பளத்து நாயக்கர் எனும் சமூகத்தினர் அவர்களது சமுதாய விழாக்களிலும், வீட்டு விழாக்களிலும் இந்த நடனத்தினை ஒரு சடங்காகவே வைத்திருக்கின்றனர். இதன் இசைக்கருவி தேவாதும்பி ஆகும். இந்த நடனம் ஆண்களால் மட்டுமே ஆடப்பட்டு வருகிறது.

தேவர்களால் ஆடப்பட்டது தொகு

மன்னர்கள் போரில் வெற்றி பெற்று தலைநகர் திரும்பும்போது மன்னரை வரவேற்க ஆடப்படும் நடனம் தேவராட்டம் என்று கிராமியக் கலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் முன்தேர்குறுவை மற்றும் பின்தேர்குறுவை என்று இதற்குப் பெயர். மன்னரின் தேரின் முன்னும் பின்னும் போர் வீரர்களும் ஆடல் அணங்குகளும் வரிசையாக அணிவகுத்து ஆடி வருவார்கள். சமயங்களில் மன்னரும் தளபதிகளும்கூட தேரில் இருந்தபடி ஆடுவார்கள்.

தேவர்களால் ஆடப்பட்டது என்ற பொருளில் அழைக்கப்பட்டு, வேட்டைத்தொழிலை அடிப்படையாக கொண்ட ராஜகம்பளம் சமூகத்தினரின் வாழ்வின் அங்கமாக தேவராட்டம் உள்ளது. தாங்கள் தேவர்களின் உண்மையான விசுவாசி என்று இந்த மக்கள் நம்பிவருவதால் தாங்கள் ஆடும் ஆட்டம் தேவராட்டம் என்று அழைத்து கொள்கிறார்கள். இறைவனை வழிபடவும், வேட்டைக்கு செல்லும் போது பாவனையாகவும், மழை, திருமணம் மற்ற விசேஷங்களில் சடங்காட்டமாகவும் நிகழ்த்தப்படுகிறது. தேவராட்டத்திலுள்ள 32 அடவுகளும், மனிதனின் செயல்பாடுகளை வெளிப்படுத்தவும், தேவையான உடற்பயிற்சியாகவும் உள்ளது.

 
உருமி மேளம்

உருமி மேளம் தொகு

தேவராட்டத்திற்கு பக்கபலமாக இருப்பது உருமி மேளம் மற்றும் காலில் கட்டப்படும் சலங்கை ஆகும். ஆட்டக்காரர்கள் தலைப்பாகை போல் மினு மினுப்பான துண்டு கட்டி ஆடுகின்றனர். உருமி மேளத்தின் மூலம் ஆட்ட அடவுகளுக்கு ஏற்ப "சுருதி' ஏற்றப்படுகிறது. வரிசையாக ஒவ்வொரு சீழ்க்கை சத்தத்திற்கும் இடையே "அடவு'கள் மாற்றப்படுகிறது. பங்கேற்கும் அனைவரும் ஒரே நேரத்தில் இசைக்கு ஏற்ப சீராகக் கால்களையும், கைகளையும், உடல் அசைவுகளையும் கொண்டு ஆடுவர். தேவராட்டப்பாடல்கள் தெலுங்கில் பாடப்படுகின்றன.

ஒயிலாட்டம் தொகு

தேவராட்டம் ஆடும்போது துவக்கத்தில் மெதுவாக துவங்கும் "அடவு" மாறமாற வேகமும், உருமி சத்தமும், சலங்கை சத்தமும் கூடி ஒரு வித உச்சநிலைக்கு செல்கிறது. இதில் முதலில் துவங்கும் போது உருமியை கும்பிட்டும், இறுதியில் கடவுளருக்கு நன்றி சொல்லும் "அடவு"க்கு வரும் போது மீண்டும் மெதுவாக மாறியும் ஆட்டம் முடிவுறுகிறது.ஒயிலாக பாடலுடன் சேர்த்து ஆடப்படுவது ஒயிலாட்டம் எனப்படுகிறது. இதன் அசைவுகள் மனிதனின் அனைத்து பாகங்களையும் அசைத்து பார்க்கும். ஒயிலாக ஆடப்படும் ஆட்டம் ஒயிலாட்டம் எனவும், விரைவாக ஆடுவது தேவராட்டம் எனவும் கூறப்படுகிறது. இக்கலையினை திரைப்படம் , சென்னை சங்கமம் போன்ற போது நிகழ்ச்சிகளில் நடத்தி மக்கள் ஆதரவு பெற்றதால் இதனை இம்மக்கள் பிறருக்காகவும் தற்போது ஆடி வருகின்றனர். இச்சமூக மக்கள் எந்தச் செயலைத் துவங்கும் முன்பும் தங்கள் குலதெய்வத்தை வேண்டிய பின்னரே அதில் ஈடுபடுகின்றனர். பொது நிகழ்ச்சிகளில் தங்களது சமூகத்தையும் குலதெய்வத்தையும் தெலுங்கில் பாடிய பின்னரே நிகழ்ச்சியை ஆரம்பிக்கின்றனர். குடி பழக்கம் கொண்டவர்கள் இவ்வாட்டத்தை ஆட தடை விதித்து உள்ளனர். கீழே மூன்று அடவுகளின் இராகங்களைக் காணலாம்.

தான...னான னான

னான ணன்னானே னான

டக் டகடி டீம்.......(1)

தான னா தான ணா ன

தான ணாரி னான னான

டட்ட கோ டட்ட

டட்ட கோ டட்ட.......(2)

தன்ன னன்ன னானே ணன்ன னா னானே

னன்ன னான னானே ணன்ன னன்ன னானே

டக் டக்டக் டகடி டக்

டக் டக்டக் டகடி டட்...(3)

இதற்குத் தகுந்தாற்போல அடவுகளை மாற்றி ஆடுகின்றனர். சேவைக்குரிய ஆட்டமாக ‘‘டக் டகடி டட்டகடி’’ என்ற இசையுடன் ஆடப்படுகிறது.

இன்று தஞ்சை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித் தலைப்பாகத் தேவராட்டம் மாறியுள்ளது .விஜய நகர ஆட்சிக் காலத்தில் தென் தமிழ்நாட்டில் குடியேறிய மக்களால் போற்றப்படும் தேவராட்டம் இன்று கடல் கடந்தும் சென்றுள்ளது.[சான்று தேவை]

மேற்கோள்கள் தொகு

  1. "தேவராட்டம்". Archived from the original on 2009-04-09. பார்க்கப்பட்ட நாள் 2008-11-30.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவராட்டம்&oldid=3652317" இலிருந்து மீள்விக்கப்பட்டது