தேவாஸ், இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள நகரம்.[1] இந்த நகரம் மாவட்டத் தலைநகரமாக செயல்படுகிறது.

பெயரின் தோற்றம்

தொகு

இந்நகரில் அமைந்திருக்கும் தேவி வைஷினி மலையினால் தேவாஸ் என்ற பெயரை இந்த நகரம் பெறுகின்றது.[2] தேவாஸ் மாவட்டம் தலைமையகமான தேவாஸிலிருந்து அதன் பெயரைப் பெற்றது.

வரலாறு

தொகு

தேவாஸ் பகுதி முன்னர் பிரித்தானிய இந்தியாவின் இரண்டு சுதேச மாநிலங்களின் தலைநகராக இருந்தது. இது 18 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் மராத்தியர்களின் புவார் குலத்தைச் சேர்ந்த துகாஜி ராவ் (மூத்தவர்) மற்றும் ஜிவாஜி ராவ் (இளையவர்) ஆகிய சகோதரர்களால் நிறுவப்பட்டது. சகோதரர்கள் பிரதேசத்தை தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். அவர்களின் சந்ததியினர் குடும்பத்தின் இரு கிளைகளாக ஆட்சி செய்தனர். 1841 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒவ்வொரு கிளையும் தனது சொந்த பகுதியை தனி மாநிலமாக ஆட்சி செய்தன. தலைநகரான தேவாஸின் பிரதான வீதியின் இரு பக்கங்களும் வெவ்வேறு நிர்வாகங்களின் கீழ் இருந்தன. மேலும் வெளிச்சம் மற்றும் நீர் வழங்கல் என்பற்றுக்கான வெவ்வேறு ஏற்பாடுகளைக் கொண்டிருந்தன.

1901 ஆம் ஆண்டில் மூத்த கிளை 446 சதுர மைல் (1,160 கிமீ 2 ) பரப்பளவை கொண்ட பகுதியை ஆட்சி செய்தது. அப்பகுதியில் 62,312 மக்கள் வாழ்ந்தனர். அதே ஆண்டில் இளைய கிளை 440 சதுர மைல் (1,100 கிமீ 2 ) பரப்பளவைக் கொண்ட பகுதியையும், 54,904 மக்களையும் ஆட்சி செய்தார்கள்.[3] 1947 ஆம் ஆண்டில் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, தேவாஸின் மன்னர்கள் சுதந்திர இந்தியாவுடன் இணைந்தனர். அவர்களின் மாநிலங்கள் மத்திய பாரதத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டன. இது 1950 ஆம் ஆண்டில் இந்திய மாநிலமாக மாறியது. 1956 ஆம் ஆண்டில் மத்திய பாரத் மத்திய பிரதேச மாநிலத்தில் இணைக்கப்பட்டது.[4]

புவியியல்

தொகு

தேவாஸ் இந்தூரின் வடகிழக்கிலும், உஜ்ஜைனின் தென்கிழக்கிலும் மற்றும் ஷாஜாபூருக்கு தென்மேற்கேயும் அமைந்துள்ளது. நகரம் மால்வா பீடபூமியின் சமவெளிகளில் அமைந்துள்ளது. தென்பகுதி நிலம் மெதுவாக விந்தியா மலைத்தொடருக்கு உயர்கிறது. இது சாம்பல், காளி சிந்து நதிகளின் மூலமாகும். இந்த நதிகள் கங்கைக்கு செல்லும் வழியில் மாவட்டத்தின் வழியாக வடக்கு நோக்கி பாய்கின்றன. தேவாஸின் முக்கிய நதி கிஷிப்ரா ஆகும்.

புள்ளிவிபரங்கள்

தொகு

2013 ஆம் ஆண்டு இந்திய சனத் தொகை கணக்கெடுப்பின்படி தேவாஸில் 289,438 மக்கள் வசிக்கின்றனர். ஆண்கள் மொத்த சனத் தொகையில் 52% வீதமாகவும், பெண்கள் 48% வீதமாகவும் காணப்படுகின்றனர். மக்களின் சராசரி கல்வியறிவு விகிதம் 69% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண் கல்வியறிவு 77% வீதமும், பெண்களின் கல்வியறிவு 61% வீதமும் ஆகும். சனத் தொகையில் 7% வீதமானோர் 5 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.[5]

பொருளாதாரம்

தொகு

தேவாஸ் 1800 ஆண்டுகளில் அபின் உற்பத்தி மையமாக அறியப்பட்டது. இது குறித்து அபின் ராயல் கமிஷனின் 1895 ஆம் ஆண்டின் முதல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் 1980 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலும் இது நடைப்பெற்றாலும், 1980 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து போதுமான உள்கட்டமைப்பு வசதியின்மையினால் தொழிற்துறை வளர்ச்சி வேகம் குறைந்துவிட்டது.

நகரத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பல தொழிற்துறை பிரிவுகள் காணப்படுகின்றன. டாடா , கிர்லோஸ்கர் , அரவிந்த் மில்ஸ், எஸ் குமார்ஸ், டாடா-கம்மின்ஸ், கஜ்ரா கியர்ஸ், கேப்ரியல் இந்தியா லிமிடெட், சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், கபரோ டியூப்ஸ் மற்றும் ஜான் டீரெ ஆகிய மிகப்பெரிய நிறுவனங்கள் இங்கு உள்ளன. தேவாஸ் இந்தியாவின் சோயா தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. இது நாட்டின் சோயா அவரை பதப்படுத்தும் தொழிலில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

தேவாஸிலிருந்து 13 கி.மீ (8.1 மைல்) தொலைவில் உள்ள ஒரு மலையில் நூற்றுக்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. இவற்றினால் சுமார் 15 மெகாவாற்று மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. நம்பகமான மின்சாரம் பெற முயன்ற ஒரு சில தனியார் நிறுவனங்களால் இவற்றுக்கு நிதியளிக்கப்பட்டன.[6][7]

ஊடகங்கள்

தொகு

தேவாஸில் அச்சு ஊடகத்தின் கீழ், சத்யாகர் தினசரி மாலை செய்தித்தாள் வெளியிடப்படுகிறது. இதனுடன் இந்தூரிலிருந்து வெளியிடப்பட்ட டைனிக் பாஸ்கர், நைடுனியா, பத்ரிகா போன்ற செய்தித்தாள்களும் இங்கு கிடைக்கின்றது.

அரசியல்

தொகு

இந்த நகரம் தேவாஸ் சட்டமன்றத் தொகுதிக்கும், தேவாஸ் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. "Online dewas". www.onlinedewas.com. Archived from the original on 2019-11-08. பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
  3. One or more of the preceding sentences incorporates text from a publication now in the public domain:
  4. "History Of Dewas". dic.mp.nic.in. Archived from the original on 2019-12-11. பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
  5. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Archived from the original on 2004-06-16.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  6. "Handy Craft". dic.mp.nic.in. Archived from the original on 2019-12-11. பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
  7. "Wind Energy". dic.mp.nic.in. Archived from the original on 2019-12-11. பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவாஸ்&oldid=3587276" இலிருந்து மீள்விக்கப்பட்டது