தையற்கலைஞர்

ஆடைகளைத் தைப்பவர்; பழுது பார்ப்பவர்

தையற்கலைஞர் என்பவர் பஞ்சுநூல் போன்ற வேறுபல இயற்கைப்பொருள்கள், செயற்கைப்பொருள்களால் ஆன நூலிழையால் நெய்த துணியைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட ஆளின் அல்லது சிறுவரின் உடலளவுக்கும் தேவைக்கும் ஏற்ப அத் துணியை வெட்டியும், தைத்தும் (பெரும்பாலும் நூலிழைகொண்டு பிணைத்தல்) ஒருவர் அணியத்தக்க ஆடையைச் செய்யும் கலைஞர். பொதுவாக இதனைத் பொருள் ஈட்டும் தொழிலாகக் கொண்டுள்ளோரைத் தையற்காரர் என்பர். ஆண்களும் பெண்களும் தையற்காரர்களாக இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

ஆங்க்காங்கில் ஒரு தையற்கலைஞர் ஒரு வாடிக்கையாளரின் ஆடையைத் தைக்க அளவெடுத்துக் கொண்டு இருக்கின்றார்.
துணிகளின் ஓரங்களைப் பிணைக்கவும், வேறுவகையான தையற் தேவைகளுக்கும் பயன்படும் தையல் இயந்திரம்

தமிழ்நாட்டில் பரவலாக பயன்பட்டு வரும் வேட்டி, துண்டு, சீலை (புடவை) போன்றவை நெய்த துணியை அப்படியே தையற்கலைஞர் ஆடையாக செய்து தராமலேயே அணியும் ஆடைகள். ஆனால் சட்டை (முற்காலக் குப்பாயம்), கால்சட்டை (பேண்ட் என்னும் குழாய்க் கால்சட்டை), இந்திய, தமிழ்நாட்டுப் பெண்களின் மேற்சட்டை, குழந்தைகள் அணியாடைகள் முதலியன துணியைப் பல்வேறு வடிவங்களில் தக்க அளவுடன் வகுத்து (design), வெட்டித் தைத்து உருவாக்கும் ஆடைகள். இவற்றைத் தையற்கலைஞர்கள் செய்து தருகிறார்கள்.

தையற்கலைஞர்கள் மிகத் தொன்மையான காலங்களில் இருந்தே பணியாற்றி வந்திருந்த பொழுதும், பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் தற்கால முதன்மைப் பொருளில் பயன்பாட்டில் உள்ளது.

ஆங்கிலத்தில் தையற்கலையை டெய்லரிங் (tailoring) என்று தற்காலத்தில் கூறுகிறார்கள். வாடிக்கைக் காரர்களுக்கு தனிப்பட்ட முறையில் அவர்களின் உடலளவு, தேவை முதலியவற்றுக்கு ஏற்றவாறு தைத்துத் தருதலைச் சிறப்பாக பெ'சுப்போக் டெய்லரிங் (bespoke)என்று கூறுகிறார்கள். ஒருவரின் தனிப்பட்ட அளவுகளுக்கு ஏற்றார்போல அல்லாமல், குறிப்பிட்ட சில அளவுகளில் ஏற்கனவே தைத்து வைத்திருக்கும் ஆடைகளுக்கு அணிய ஆடை (ரெடிமேடு) என்று பெயர்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தையற்கலைஞர்&oldid=2716570" இலிருந்து மீள்விக்கப்பட்டது