தை அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரைக் கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைப்பிடிப்பர். இதை அமாவாசை விரதம் என்பர். ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகியன. தை அமாவாசை அன்று ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் படையல் செய்து சிறப்பு பூசை (திதி) செய்வர்.[1]

இராமேசுவரம்,திருச்செந்தூர், முக்கடல் கூடும் கன்னியாகுமரி, மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் மக்கள் கூட்டம் கூடுதலாக இருக்கும்.

இராமேசுவரத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ராமநாத சுவாமி மற்றும் அம்பாள் திருச்சிலைகள் தை அமாவாசை தினத்தன்று அங்குள்ள அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும். கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தை அமாவாசையை முன்னிட்டு இராமேசுவரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். இராமேசுவரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தன்று லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோயிலில் காணும் இடமெல்லாம் ஒளிச்சுடர்களாகவே காணப்படும். பல்லாயிரக்கணக்கானோர் சுற்றுவட்டாரங்களில் இருந்து வந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோயிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றிவைத்து வழிபடுவார்கள்.[2]

அமாவாசையை முழு நிலவு ஆக்கிய அன்னை அபிராமியின் பக்தனுக்கு அருளும் மாண்பினை விளக்கும் காட்சி யொன்று எல்லா ஆலயங்களிலும் , திருக்கடவூர் அன்னை அபிராமியின் திரு முன்னும் நடப்பது வழக்கம் [3]

மேற்கோள்கள்

தொகு
  1. "தை அமாவாசையின் சிறப்பு அம்சங்கள்". Hindu Tamil Thisai. 2025-01-23. Retrieved 2025-03-09.
  2. "தை அமாவாசையில் பித்ரு தர்ப்பணம் செய்வதன் சிறப்பு". Archived from the original on 2008-01-30. Retrieved 2008-01-30.
  3. இன்று முழுமதி வந்த தினம்

இதனையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தை_அமாவாசை&oldid=4223857" இலிருந்து மீள்விக்கப்பட்டது