தொடர்ச்சியான தொழில்சார் வளர்ச்சி

தொடர்ச்சியான தொழில்சார் வளர்ச்சி (Continuing professional development) என்பது, பல்வேறு தொழில்துறை சார்ந்தோர் தமது தொழில்சார் அறிவையும் திறமைகளையும் விரிவாக்கி மேம்படுத்திக் கொள்வதற்கும், அத் தொழில்சார் வாழ்க்கைக்குத் தேவையான ஆளுமைகளை வளர்த்துக் கொள்வதற்குமான ஒரு வழிமுறையாகும். இதன்மூலம், தொடர்ச்சியான அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களினால் உருவாகின்ற புதிய அறிவு, நடைமுறைகள் போன்றவற்றை அறிந்துகொண்டு அதற்கேற்றபடி செயல்படவும், புதிய சமூகத் தேவைகள், விதிமுறைகள், சட்டங்கள் தொடர்பான புதிய வளர்ச்சிகளை அறிந்துகொள்ளவும், தொழில்முறைச் செயற்பாடுகளில் வெற்றி பெறுவதற்கான உத்திகள் தொடர்பான அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கும் இது ஒருவருக்குப் பெரிதும் உதவுகிறது.

தொழில்சார் கழகங்களும், தொடர்ச்சியான தொழில்சார் வளர்ச்சியும்

தொகு

பெரும்பாலான தொழில்சார் கழகங்கள் அவற்றின் உறுப்பினர்கள் இவ்வாறாகத் தம்மை வளர்த்துக்கொள்வதை உறுதி செய்வதற்காகக் குறிப்பிட்ட அளவு நேரத்தைக் குறித்தவகையான அறிவுத் தேடல் நடவடிக்கைகளில் செலவிட வேண்டும் என விதிக்கின்றன. தொடர்புடைய நூல்களையும், கட்டுரைகளையும் வாசித்தல், குறித்த தொழில் சார்பான விரிவுரைகள், ஆய்வரங்குகள், கண்காட்சிகளுக்குச் செல்லுதல், பாடநெறிகளைப் படிப்பதன்மூலம் புதிய தகைமைகளைப் பெற்றுக்கொள்ளல், கற்பித்தலில் ஈடுபடுதல், குறித்த தொழில்துறை வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுதல் எனப் பலவகையான முயற்சிகள் தொடர்ச்சியான தொழில்சார் வளர்ச்சிக்கான வழிமுறைகளாகப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எந்தவகையான முயற்சிகளில் எவ்வளவு நேரம் செலவழிக்கலாம் என்ற கட்டுப்பாடுகளும் உண்டு.

வசதிகள்

தொகு

தொடர்ச்சியான தொழில்சார் வளர்ச்சித் தேவைகளை நிறைவு செய்வதில் பல்வேறு தொழில்சார் கழகங்களின் உறுப்பினர்களுக்கு உதவுவதற்காகப் பல கல்வி நிறுவனங்கள் தனியான பாடநெறிகளை நடத்துகின்றன. இவற்றில், நேரடியாக வகுப்பறைகளில் நடத்தப்படும் பாடநெறிகளும், அஞ்சல் வழியாக அல்லது இணையம் மூலம் நடத்தப்படும் பாடநெறிகளும் உள்ளன. இது தவிரத் தொழில் துறைகளுக்குப் பல்வேறு வசதிகளை வழங்கும் துறைகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்களும், வழங்குனர்களும் குறித்த தொழில் துறையினருக்கு இலவசமாக விரிவுரைகளையும், ஆய்வரங்குகளையும் ஒழுங்கு செய்வதும் உண்டு. இவற்றை விடவும், தொழில்துறையினர், அவர்களுக்கு வசதிகளையும், உற்பத்திகளையும் வழங்குவோர், தொழில்சார் கல்வித்துறையினர் போன்றோரை ஒன்றிணைத்து ஆய்வரங்குகளை ஒழுங்குபடுத்தும் நிறுவனங்களும் உள்ளன.

பல தொழில்சார் கழகங்கள் மேற்படி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அவற்றுக்குச் சான்றளிப்பதும் உண்டு.