ஆய்வரங்கு (Seminar) என்பது, ஒருவகைக் கற்பித்தல் வழிமுறை எனலாம். இது பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களிலோ, வணிக அல்லது தொழில்சார் அமைப்புக்களினாலோ ஒழுங்கு செய்யப்படலாம். இது ஒரு சிறு குழுவினரை ஒரு கூட்டத்தில் கூட்டிக் குறித்தவொரு விடயம் தொடர்பில் கலந்தாய்வு நடத்துவதைக் குறிக்கும். இக் கலந்துரையாடல்களில் பெரும்பாலும் பங்குபற்றுவோர் அனைவரும் முனைப்பாகப் பங்கெடுத்துக் கொள்வர். இதில் ஒரு தலைவர் அல்லது நெறியாளர் கலந்துரையாடலை நெறிப்படுத்துவார். முறையான ஒரு ஆய்வுக் கட்டுரை, விரிவுரை என்பவற்றைத் தொடர்ந்த ஒரு கலந்துரையாடலாகவும் இது அமையக்கூடும்.[1][2][3]

பல்கலைக்கழக ஆய்வரங்குகள்

தொகு

பெரும்பாலும் ஆய்வரங்குகளில் பங்குபற்றுவோர் எடுத்துக்கொண்ட விடயங்கள் தொடர்பிலான கற்றுக்குட்டிகளாக இருப்பதில்லை. பல்கலைக்கழகங்களில் கூட ஆய்வரங்குகள் பொதுவாக பிந்திய ஆண்டுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கே ஒழுங்கு செய்யப்படுகின்றன. இத்தகைய ஆய்வரங்குகளுக்கான அடிப்படை நோக்கம், எடுத்துக்கொண்ட விடயம் தொடர்பான நடைமுறைகள் பற்றி மாணவர்களிடையே பழக்கத்தை உருவாக்குவதும், ஆய்வு வேலைகளின்போது எதிர்ப்படும் நடைமுறைச் சிக்கல்களை எடுத்துக்காட்டாகக் கொண்டு கலந்துரையாடுவதை ஊக்குவிப்பதும் ஆகும். இத்தகைய ஆய்வரங்குகள், படிப்பதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட நூல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும், அவை தொடர்பான கேள்விகளை எழுப்புவதற்கும், விவாதங்களை நடத்துவதற்குமான இடமாகவும் பயன்படுவதுண்டு. இவை, விரிவுரைகளோடு ஒப்பிடும்போது ஒரு முறைசாராத கற்பித்தல் முறையாக உள்ளது.

வணிக ஆய்வரங்குகள்

தொகு

ஆய்வரங்குகள் தற்போது, வாடிக்கையாளருக்கு அல்லது வாடிக்கையாளர் ஆகக்கூடியவர்களுக்கு உற்பத்தியாளர்கள் அல்லது வழங்குனர்கள் தகவல்களை வழங்கும் ஒரு வணிக நிகழ்வாகவும் இடம்பெறுகின்றன. சிறப்பாக அழைக்கப்பட்டவர்களுக்காக ஒழுங்கு செய்யப்படும் இத்தகைய ஆய்வரங்குகள் இலவசமாகவே நடைபெறும்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Socratic Method-Problem Method Dichotomy: The Debate Over Teaching Method Continues, CG Hawkins-Leon. BYU Educ. & LJ, 1998.
  2. Dialogic discussion and the siddharth seminar. L Billings, J Fitzgerald. American Educational Research Journal, 2002
  3. "seminar". Lexico. Archived from the original on March 8, 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆய்வரங்கு&oldid=4132919" இலிருந்து மீள்விக்கப்பட்டது