தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு (நூல்)

தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு என்னும் நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியரான ப. புஷ்பரட்ணத்தால் எழுதப்பட்டது. இந்நூலின் முதற் பதிப்பு 2000 ஆவது ஆண்டிலும், இரண்டாவது பதிப்பு 2003 ஆம் ஆண்டிலும் வெளியானது. பவானி பதிப்பகம் இதனை வெளியிட்டிருந்தது.

தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு
நூல் பெயர்:தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு
ஆசிரியர்(கள்):ப. புஷ்பரட்ணம்
வகை:வரலாறு
துறை:இலங்கைத் தமிழர் வரலாறு
காலம்:சங்ககாலம் - யாழ்ப்பாண இராச்சியக்காலம்
இடம்:யாழ்ப்பாணம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:256
பதிப்பகர்:பவானி பதிப்பகம்
பதிப்பு:2000, 2003

இந்த நூலில் வட இலங்கையில் வன்னிப் பகுதியின் வரலாறு, பண்பாடு ஆகியவை தொடர்பான புதிய கருத்துக்களைப் புதிதாகக் கிடைத்த தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் நூலாசிரியர் முன்வைத்துள்ளார். எடுத்தாளப்பட்டுள்ள தொல்லியற் சான்றுகளுட் பல நூலாசிரியரால் வட இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் மூலம் கிடைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.[1]

நூல் வரலாறு

தொகு

இந்த நூலில் உள்ள கட்டுரைகள் நூலாசிரியர் வன்னிப்பகுதியில் மேற்கொண்ட கள ஆய்வுகளில் கிடைத்த தொல்லியற் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டவை. இச்சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கட்டுரைகளை நூலாசிரியர் யாழ்ப்பாணத்திலும், தமிழ்நாட்டிலும் இடம்பெற்ற கருத்தரங்குகளில் சமர்ப்பித்திருந்தார். இவ்வாறான கட்டுரைகளில் அவர் முன்வைத்த பல புதிய கருத்துக்களை வரலாற்று அறிஞர்கள் நிதானமாகவே அணுகியதாகத் தெரிகிறது.[2] அத்துடன், கள ஆய்வுகளில் கிடைத்த பல சான்றுகளை முறையாக ஆராய்வதற்கான வாய்ப்பும் வசதிகளும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கிடைக்காத ஒரு நிலையும் நிலவியது.[3]

பின்னர் நூலாசிரியர் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாக இருந்தபோது கிடைத்த வாய்ப்புக்களையும், வரலாற்றியல், தொல்லியல், நாணயவியல், கல்வெட்டியல் போன்ற துறைசார் அறிஞர்களுடன் ஏற்பட்ட தொடர்புகளையும் பயன்படுத்திக்கொண்டு இந்த நூல் எழுதப்பட்டது. முன்னர் எழுதிய கட்டுரைகள் புதிய சான்றுகளுடன் மேலும் விரிவாக்கப்பட்டு இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

உள்ளடக்கம்

தொகு

இந்நூலில், எல்லாமாக எட்டுக் கட்டுரைகள் உள்ளன. இக்கட்டுரைகள் சங்க காலம் முதல், யாழ்ப்பாண அரசர் காலம் வரையிலான காலப்பகுதிகள் தொடர்பானவை. இக்கட்டுரைகள் பின்வருமாறு:[4]

  1. இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையிலான சங்ககால அரசியலுறவு ஒரு மீள்பார்வை
  2. இலங்கையில் சங்ககால வேள் ஆட்சி - கல்வெட்டுக்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
  3. பண்டைய இலங்கையில் பரதவ சமூகம் சில தொல்லியல் சான்றுகள்
  4. சங்ககால நாணயங்களும் இலங்கைத் தமிழ் மன்னர்களும்
  5. இலங்கைத் தமிழரும் லட்சுமி உருவம் பொறித்த நாணயங்களும்
  6. பத்தாம் நூற்றாண்டில் கதிரமலையும் சிங்கைநகரும்
  7. கந்(தன்), ஆ(ரியச்சக்கரவர்த்தி) பெயரில் யாழ்ப்பாண மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் - புதிய சான்றுகள்
  8. யாழ்ப்பாண அரசுக் கால சேது நாணய வகைகள்

குறிப்புகள்

தொகு
  1. புஷ்பரட்ணம், ப., தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு, பவானி பதிப்பகம், 2003 இல் எ. சுப்பராயுலுவின் வாழ்த்துரை, பக். iii.
  2. புஷ்பரட்ணம், ப., தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு, பவானி பதிப்பகம், 2003, பக். xv.
  3. புஷ்பரட்ணம், ப., தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு, பவானி பதிப்பகம், 2003, பக். vii.
  4. புஷ்பரட்ணம், ப., தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு, பவானி பதிப்பகம், 2003, பக். x.

இவற்றையும் பார்க்கவும்

தொகு