தோடர் பழங்குடியின மக்களின் மொர்டுவெர்த் திருவிழா
|
தோடர் பழங்குடியினர் மக்கள், மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதிகளில் தங்களுக்கென பாரம்பரிய உடை, தனி கலாச்சாரத்துடன் குடில் அமைத்து நூற்றாண்டைக் கடந்து வாழ்ந்து வருபவர்கள்.
நீலகிரி மலைத் தொடரில் இயற்கை வளங்களைக் கொண்டு குடில் அமைத்து மந்து எனப்படும் சிறு,சிறு குக்கிராமங்களில் அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்களின் குலத்தொழில் விவசாயம் ஆகும். இவர்கள் எருமை மாடுகளை குல தெய்வமாக வணங்குகிறார்கள். இவர்கள் வசிக்கும் மந்து என்கிற சிற்றூர் பகுதிகளில் நாவல் மரங்களை வளர்த்து இயற்கையான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்கள் ஆண்டு இறுதி அல்லது புத்தாண்டு முதல் வாரத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையில் தங்களது குல தெய்வம் கோவிலில் விவசாயம் செழிக்கவும், தாங்கள் வளர்க்கும் எருமைகள் விருத்தியடையவும் வன விலங்குகளிடமிருந்து காத்திடவும் 'மொர்டுவெர்த்' என்கிற பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
'மொர்டுவெர்த்' என்பது அவர்கள் பாஷையில்[தெளிவுபடுத்துக] 'பெரிய கோவில்' என்பது பொருளாகும். நீலகிரி மலைப்பகுதியில் வசிக்கும் தோடர் இன மக்கள் அனைவருக்கும் இது பொதுவான கோவில் என்பதால் இந்த கோவிலே அவர்களது பெரிய கோவிலாக விளங்குகிறது. அந்த பெரிய கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாவே 'மொர்டுவெர்த்' எனப்படுகிறது.
உதகை அருகே உள்ள முத்தநாடு என்கிற மந்தில் தான் தோடர் இன மக்களின் குல தெய்வ கோவில் உள்ளது. உதகை பகுதிகளில் உள்ள அனைத்து மந்துகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான தோடர்கள் இந்த குலதெய்வ கோவிலில் கூடுவார்கள். பிறந்த ஆண் குழந்தை முதல் வயது முதிர்ந்த ஆண்கள் அதேபோல அனைத்துப்பெண்களும் இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள். தோடர் இனத்தில் யாரும் குலதெய்வ கோவிலுக்குள் நுழைய முடியாது. கோவிலுக்கென்று அவர்கள் இனத்திலேயே நியமிக்கப்பட்ட பூசாரி மட்டுமே கோவிலுக்குள் நுழைய முடியும். கோவிலுக்கு வெளியே இருந்துதான் அவர்களின் குலதெய்வத்தை வணங்கவேண்டும். திருவிழாவில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து பங்கேற்பது வழக்கம்.
அவ்வாறு பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களது பாரம்பரிய பாடலுடன் நடனமாடி சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர். தோடர் பழங்குடியின இளைஞர்கள் தங்களது பலத்தை காண்பிக்க வட்டக் கல்லைத் தூக்கி தங்களது பலத்தை நிரூபிப்பார்கள். அந்த பாரம்பர்ய பழக்கம் இன்று வரை தொடர்கிறது.
ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த பாரம்பரிய திருவிழாவை காண ஏராளமான மக்களும். உதகைக்கு சுற்றுலா வரும் பயணிகளும் ஆர்வத்துடன் கூடி கண்டுகளிப்பார்கள்.