எருமை (கால்நடை)

வீட்டு எருமை
எருமைகள், பாங்காக்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
இனம்:
B. bubalis
இருசொற் பெயரீடு
Bubalus bubalis
(லின்னேயசு, 1758)
அடியினம்(அடிநிலை இனம்)
 • Bubalus bubalis bubalis - the river buffalo
 • Bubalus bubalis carabanensis - the carabao
சீன எருமை, ஆங்கில உரை

எருமை அல்லது நீர் எருமை (ஆங்கிலம்: buffalo) என்ற விலங்கு, பாலூட்டிகளில் ஒன்றாகும். இவற்றிடையே பேரின, சிற்றின வேறுபாடுகள் உண்டு. இருப்பினும், எருமை என்ற சொல் பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் எருமையையே (ஆங்கிலம்:Water buffalo)க் குறிக்கிறது. இந்த எருமையின் தாயகம் இந்தியா என பெரும்பான்மையான பரிணாம மரபியல் ஆய்வுகள் கூறுகின்றன.[1] இவ்விலங்கின் கொழுப்பு நிறைந்த பாலுக்காகவும், உழவுக்கும், போக்குவரவுக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க உயிரியல் வகைப்பாடு இல்லை. இருப்பினும் பெரும்பாலோனோர், வலப்பக்கமுள்ள பெட்டியின் குறிப்புகளை ஏற்றுக்கொள்கின்றனர்.

பெயரியல்

தொகு

காரான், மயிடம், கவரி என்பவை பெண் எருமையை குறிக்கும் தமிழ் சொற்களாகவும், பகடு, கடா, ஆமா, கவயம் என்பன ஆண்பால் எருமையினை குறிக்கும் தமிழ் சொற்களாகவும் திவாகர நிகண்டு குறிப்பிடுகிறது.[2]

எருமைப்பால்

தொகு

எருமையானது கன்றை ஈன்றவுடன் சீம்பால் சுரக்கும். கன்று ஈன்ற முதல் மூன்று நாட்களில் எருமையானது சீம்பாலைச் சுரக்கும். இதில் கன்றுக்கு அவசியமான இம்யூனோ குளோபுலின் நோய் எதிர்ப்பொருளும், சாதாரண பாலில் உள்ளதை விட தாமிரம், இரும்புச்சத்துக்கள் அதிக அளவிலும் உள்ளன. பின்பு, சாதரணப்பால் சுரக்க ஆரம்பிக்கிறது. முதல் ஓரிரு வாரங்களில் கறக்கும் பாலிலிருந்து அந்த எருமையின் பாலின் தன்மையை அறிந்து கொள்ளலாம். 5-6 வாரங்களில் அதிக அளவு பால் தரும். இந்த அளவு சில வாரங்களில் வரை தொடர்ந்து, பின் குறைய ஆரம்பிக்கும். பின்பு கறவையின் பால் வற்ற ஆரம்பித்துவிடும்.

எருமைகள் நான்காவது கன்று ஈனும் போது அதன் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும். பின்பு குறைந்து விடும். பால் கறக்கும் கால அளவு தீவனம், பராமரிப்பு, பால் கறக்கும் இடைவெளி, நோய்த்தாக்கம் போன்ற காரணிகளைப் பொறுத்தது. பல்வேறு இன எருமைகளின் கறவைக்காலம் வேறுபடுகின்றன. முர்ரா இன எருமைகளில் பால் உற்பத்திக் காலம் 262-295 நாட்கள் வரை ஆகும்.

பால் சுரப்பைத் தூண்டுதல்

தொகு

கன்றை சிறிது நேரம் பால் ஊட்ட விடுவதன் மூலமோ அல்லது கையினால் காம்பினைத் தடவி விட்டோ காம்பானது பால் சுரப்பிற்குத் தூண்டிவிடப்படுகிறது. ஏனெனில் இவ்வாறு காம்பைத் தடவி விடுவதால் மடியின் கீழேயுள்ள ஆக்ஸிடோசின் ஹார்மோனைச் சுரக்கும் நாளங்கள் தூண்டப்பட்டு, பால் சுரப்பு அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் ஆனது இரத்தத்தின் வழியாக மெமரி (Memory) சுரப்பிற்குக் கடத்தப்படுகிறது. ஏனெனில் ஹார்மோனும், நரம்பு நாளங்களும் பாலை வெளித் தள்ளுவதில் ஈடுபடுகின்றன. எனவே இவை நரம்பு ‘உட்சுரப்பு செயல்’ எனப்படுகிறது. ஆக்ஸிடோசின் ஆல்வியோலை குழாயை சுருங்கி விரியச்செய்கிறது. இதனால் குழாயிலுள்ள பால் வெளித்தள்ளப்பட்டு காம்பை வந்தடைகிறது.

இவ்வாறு அல்வியோலை வழியே வரும் பால் சுரப்பு குறைவாகவே இருக்கும். கன்றுக்குப் பாலூட்டும் போது மடியில் முட்டி மோதும் போதும், கையினால் மசாஜ் செய்வது போல் தடவும் போதும் இந்த ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். அப்போது தான் பால் சுரப்பும் அதிகரிக்கும்.மேலும் கால்நடைகளில் பால்கறப்பதற்கு முன்பு அடர் தீவனமளிப்பது பால் சுரப்பையும், பால் தரும் நேரத்தையும் அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எருமைகளின் காம்பு, மடியின் அமைப்பு

தொகு

எருமையின் மடி, கால்நடையின் மடியை ஒத்திருந்தாலும் காம்புகள் அளவில் சற்று பெரியவை. நான்கிற்கும் மேற்பட்ட காம்புகள் இருப்பின் கன்று பிறந்த, ஓரிரு வாரங்களுக்குள் நீக்கிவிடவேண்டும். உருளை வடிவக் காம்புகளே பெரும்பாலும் முர்ரா இன மாடுகளில் காணப்படுகின்றன. முன் இரு காம்புகள் 5-8 செ.மீ, 6.4 செ.மீ வரை நீளமும் அதன் சுற்றளவு 2.5-2.6 செ.மீ வரையும் இருக்கும். இதே போன்று பின் இரு காம்புகளும் 6-9 - 7.8 செ.மீ மற்றும் 2.6 - 2.8 செ.மீ அளவு கொண்டுள்ளன.முன்பக்க மடியை விட பின்பக்கமானது சற்று அளவில் பெரியது. பாலும் இதில் அதிக அளவில் இருக்கும். கால்நடை அளவீட்டின் படி 60:40 என்ற அளவில் பின் மடி மற்றும் முன்மடியில் முறையே பால் அளவு இருக்கும். பால் அதிகம் இருப்பதால் பின்பாகத்தைக் கறந்து முடிக்க அதிக நேரம் ஆகும்.

வேறுபாடுகள்

தொகு

எருமையின் காம்புகளில் பால் வரும் துளையைச் சுற்றியுள்ள தசைகளும், எபிதீலியத் திசுக்களும் சற்று தடிமனானவை. எனவே எருமையில் பால் கறக்க, மாட்டை விட சற்று அதிக விசையுடன் அழுத்தவேண்டும். கன்று ஊட்டிய பின்னர் இநத அழுத்தத்தின் அளவு சற்று குறையும். மாடுகளில் அல்வியோலை என்ற தொகுக்கப்பட்ட பாலானது குழாய் போன்ற வெளியேற்றும் அமைப்புகளிலும், மெமரி (Memory) சுரப்பிகள் மற்றும் காம்புகளில் சேகரித்து வைக்கப்படுகிறது. ஆனால் எருமைகளில் அவ்வாறில்லாமல் பீய்ச்சும் போது உள்ளிருந்து வெளித்தள்ளப்படுகிறது. சீனாவின் மஞ்சள் மாடுகள் மற்றும் எருதுகளில் இவ்வாறு பாய்ச்சப்படுகிறது.எருமைகளில் குழாய் அமைப்புகளில் சேகரித்து வைக்கப்படாததால் காம்புகள் பால் கறக்கும் தருணத்தில் தளர்ச்சியாகவும், மென்மையாகவும் இருக்கும். ஆனால் மாடுகளில் அப்படி இருப்பதில்லை.

பால் சுரப்பு தடைபடுதல்

தொகு

எருமைகள் பொதுவாகவே சுற்றுச்சூழல் மாற்றத்தைப் பொறுத்து எளிதில் பாதிப்படையக்கூடியவை. இவை பயந்தாலோ, ஏதேனும் வலி, மன அழுத்தம் ஏற்பட்டாலோ உடனே பால் சுரப்பு குறையும். ஏனெனில் மேற்கண்ட சூழ்நிலைகளின் போது அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரக்கும். இது இரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து மடிக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கிறது. மேலும் இந்த அட்ரினல் ஆனது அல்வியோலையின் மையோஎபிதீலியல் செல்களின் மீது செயல்புரிந்து, அவை ஆக்ஸிடோசினை எடுத்துக் கொள்ள முடியாமல் அடைத்து விடுகிறது. இதனால் பால் சுரப்பு தடைபடுகிறது. எனவே வலி, மனஅழுத்தம் ஏற்படா வண்ணம் எருமைகளை நன்கு கண்காணித்து சிகிச்சை அளித்தல்வேண்டும். பால் கறக்கும் நேரத்தை மாற்றிக் கொண்டே இருத்தல், தவறான கறக்கும் முறையைக் கையாளுதல், பால் கறக்கும் எந்திரத்தை சரியாகப் பொறுத்தாமை போன்றவையும் பால் சுரப்புக் குறைவுக்குக் காரணங்களாகும்.

பால் கறக்கும் முறை

தொகு

மாட்டுடன் ஒப்பிடும் போது எருமையில் பால் கறப்பது கடினமான, மெதுவாகச் செய்யக்கூடிய செயலாகும். இதில் காம்புகள் சற்று தடிமனாக இருப்பதால் அதிக அழுத்தம் தேவைப்படுகிறது. பால் கறக்க எருமையில் ஆகும் நேரம் 2-10 நிமிடங்கள் ஆகும்.இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எருமையில் காம்பின் துளை சிறியது. அதிக ஆற்றல் செலுத்த வேண்டி இருக்கும். மாடுகளைப் போல் பால் முதலிலேயே குழாயில் சேகரித்து வைக்கப்பட்டிருக்காது. எனவே கறக்கும் போது தான் சிறிது சிறிதாக வெளிவரும்.

பால் கறக்கும்போது கொடுக்கும் அழுத்தமானது சிறிது சிறிதாக அதிகரித்து பின்பு மெதுவாகக் குறைய வேண்டும். இந்த அழுத்தமானது கால்நடையைப் பொறுத்தும் பால் கறப்பவரைப் பொறுத்தும் வேறுபடுகிறது.சுரக்கும் பாலின் அளவு அதிகமாக இருக்கும் போது கறக்கும் வேகமும் அதிகரிக்கிறது. எனவே எருமை மாடுகள் வாங்கும் போது மடி, காம்பின் தன்மை போன்றவற்றைப் பார்த்து, கவனித்து வாங்குதல் வேண்டும்.

மாட்டுடன் ஒப்பிடும் போது எருமையில் காம்புகள் சற்று வித்தியாசமானவை. எனவே, எருமையில் பால் கறக்க கொத்தாக உள்ள அதிக விசையுடன் கூடிய இயந்திரம் தேவை. இதன் எடை அதிகம். இந்தியாவில் இதன் தொகுப்பு எடையைக் குறைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பால்மடி பாதுகாப்பு

தொகு

பால் கறந்து முடித்த பின்பு, ஏதேனும் தொற்றி நீக்கி கலந்த நீரினால் மடியை சுத்தம் செய்யவெண்டும். காம்பின் துளையானது பால் கறந்து சில நிமிடங்கள் வரை மூடாமல் இருக்கும். அந்த நேரத்தில் ஏதேனும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் உட்புகுந்து விடலாம். இதைத் தடுக்கவே தொற்று நீக்கிகளைப் பயன்படுத்துகிறோம். இது காம்பை சுத்தப்படுத்துவதோடு அதன் துளை மூடும் வரை அதில் அடைத்து நுண்ணுயிரிகள் உட்புகாமல் காக்கிறது. இந்தக் கரைசலில் ஏதேனும் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். சில நேரங்களில், இந்தத் துளையானது அரைமணி நேரம் வரை மூடாமல் இருக்கும். அப்போது எருமை கீழே படுக்காமல் இருக்கத் தீவனம் அளிக்கவேண்டும். பால் கறக்க பயன்படுத்திய பாத்திரங்களை உடனக்குடனே நீரில் கழுவி உட்புறம், வெளிப்புறம் இரண்டும் சுத்தமாக இருக்குமாறு துடைத்து வைக்கவும். கை, மடிகளைக் கழுவப் பயன்படுத்தும் துணிகளும் ஒவ்வொரு முறையும் நன்கு துவைத்துக் காயவைத்த பின்னரே, மறு முறை பயன்படுத்தவேண்டும். இவைகளை கழுவக் குளோரின் கலந்த நீரைப் பயன்படுத்தலாம்.

வகைகள்

தொகு

நீர் எருமைகளை இந்திய நீர் எருமை மற்றும் சைனா நீர்காட்டு எருமை என இரு வகைகளாகக் பிரிக்கின்றனர்.இதில் இந்திய நீர் எருமைகள் 5000 வருடங்களாக இந்தியாவில் உள்ளன எனவும். சைனாவின் நீர்காட்டு எருமைகள் 4000 வருடங்களாக சைனாவில் உள்ளன என்றும் அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.[1]

எண்ணிக்கை

தொகு

உலகம் முழுவதும் 172 மில்லியன் நீர் எருமைகள் இருப்பதாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன.[3]. அவற்றில் 95.8 சதவீதம் ஆசியாவில் காணப்படுகின்றன.[4]

பயன்கள்

தொகு

விவசாயம் மற்றும் பால் தவிர இவற்றின் கொம்புகளும் எலும்புகளும் அணிகலன்கள் செய்யப் பயன்படுகின்றன.

போட்டிகள்

தொகு
 • இந்தியாவின் கர்னாடக மாநிலம் கம்பாலாவில் நடக்கும் எருமைப் போட்டி பிரசித்தி பெற்றது.
 • தாய்லாந்து நாட்டிலும் எருமைப் போட்டி நடக்கிறது.[5]

எருமையை தாக்கும் நோய்கள்

தொகு

கீழ்கண்ட நோய்கள் வீட்டு எருமைகளை அதிகம் தாக்குகின்றன என ஆய்வுகள் கூறுகிறது.[6]

 • எருமை அம்மை (Buffalo pox): நோயானது, இந்தியா முழுவதிலும் பரவிக் காணப்படுகிறது. இதன் மூலம் மடி, உள்தொடை, நாசி, வாய் போன்ற இடங்களில் கொப்புளங்கள் தோன்றுகின்றன. நோய் பரவும் முறை, தடுப்பு முறைகள் அனைத்தும் மாடுகளில் இருப்பது போலத்தான், இதற்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காயங்களை, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, ஈக்கள் மொய்க்காமல் பாதுகாக்க வேண்டும். பொதுவாக இவை தானாகவே மறைந்து விடும். புண்கள் பெரிதாகாமல், :1000 விகித பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசல், மற்றும் போரிக் அமில களிம்பு 1:100 விகித தடவி, அதை சுத்தப்படுத்த வேண்டும்.
 • பிளாக் குவார்டர் (Black Quarter): இது கால்நடை, செம்மறி ஆடுகளில் காணப்படும் ஒரு முக்கியமான நோய். தொடர்பினால் பரவாது எனினும் நச்சுத்தன்மை கொண்டது. இந்நோயானது 6 மாதத்திலிருந்து 2 வயது வரை உள்ள எருமைகளை இந்நோய் தாக்குகிறது. மழைக்காலம் ஆரம்பிக்கும் தருணத்தில் தான் இது அதிகமாகப் பரவும். பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் எருமையின் வாய் வழியே உள்ளே சென்று சில காலம் தங்கி, நச்சுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. பென்சிலின், டெட்ராசைக்ளின் போன்ற மருந்துகளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவலாம்.
 • சோன்சு நோய் (Johne’s Disease): சாதாரண சூழ்நிலையில் தொடர்பினால் பரவக்கூடிய இந்நோய் செம்மறி ஆடு, வெள்ளாடு, எருமை போன்ற பல கால்நடைகளைத் தாக்கக்கூடியது. இந்நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் கழிவுகள் தீவனம் போன்றவை மூலம் எளிதில் பரவக்கூடியது. நோய் தாக்கிய பின்பு அறிகுறிகள் வெளிப்பட 12 மாதங்களிலிருந்து சில வருடங்களாகலாம். பெரும்பாலும் 3-6 வயதுடைய எருமைகளை அதிகம் தாக்கும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் அறிகுறிகள் அதிகம் தென்படாது. அதன் கழிவுகளில் நுண்ணுயிரிகள் இருக்கும். இவை மேய்ச்சல் நிலங்களில் 1 வருடம் வரை வாழும் தன்மை கொண்டவை. சூரிய ஒளி, அதிக அமில / காரத்தன்மையில் இது உயிர் வாழ முடியாது. கால்நடைகளில் 2-6 வருட வயதுள்ளவை பால் கறந்த பின்பு, வரும் கழிவுகளில் இந்நோயின் அறிகுறிகளை எளிதில் அறியலாம். கன்று பிறந்த உடன் தடுப்பூசி போடுதல் சிறந்தது. மந்தைகளில், பரவாவண்ணம் தடுக்க, பிற கால்நடைகளுக்குத் தடுப்பூசி அளித்தல் சிறந்தது.

இவற்றையும் காணவும்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
எருமை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
 1. 1.0 1.1 Yang, D. Y., Liu, L., Chen, X., Speller, C. F. (2008). Wild or domesticated: DNA analysis of ancient water buffalo remains from north China. Journal of Archaeological Science 35: 2778–2785.
 2. முனைவர் ஆ. சுலோச்சனா, ஆரோக்கியம் தரும் ஆவிறைச்சி, கட்டுரை, விடுதலை ஞாயிறு மலர், பக்கம் 14 29. சனவரி. 2022
 3. Borghese, A. (2011). Situation and Perspectives of Buffalo in the World, Europe and Macedonia. Macedonian Journal of Animal Science 1 (2): 281–296.
 4. Borghese, A., Mazzi, M. (2005). Buffalo Population and Strategies in the World. Pages 1–39 in Borghese, A. (ed.) Buffalo Production and Research. REU Technical Series 67. Inter-regional Cooperative Research Network on Buffalo, FAO Regional Office for Europe, Rome.
 5. Buffalo Racing, Thailand, thailand-guide.org (p) some content provided by Tourism Authority of Thailand, Last Updated : 1 July 2007 பரணிடப்பட்டது 2013-10-11 at the வந்தவழி இயந்திரம்; Watching the Buffalo Racing, by Panrit "Gor" Daoruang, 14 October 2003, Thailand Life பரணிடப்பட்டது 2013-05-09 at the வந்தவழி இயந்திரம்; Running of the buffalo: Thais take their beasts of burden to the races; by: Alisa Tang, Associated Press Writer பரணிடப்பட்டது 2010-01-14 at the வந்தவழி இயந்திரம்; Buffalo Racing, The lowdown by Aliwyn Cole, 1 August 2005, Urban Lowdown பரணிடப்பட்டது 2012-10-24 at the வந்தவழி இயந்திரம்; "Running with the Buffalo", originally published in the Learning Post, a supplement of the Bangkok Post பரணிடப்பட்டது 2012-03-07 at the வந்தவழி இயந்திரம்
 6. http://www.agritech.tnau.ac.in/animal_husbandry/animhus_buffalo_content_page.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=எருமை_(கால்நடை)&oldid=3958418" இலிருந்து மீள்விக்கப்பட்டது