தோற்ற ஒளிப்பொலிவெண்

(தோற்றப் பொலிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தோற்ற ஒளிப்பொலிவெண் (Apparent magnitude) என்பது ஒரு வான்பொருள் ஒன்றின் அதன் பிரகாசம் அல்லது ஒளிர் திறனைப் பூமியிலிருக்கும் ஒரு பார்வையாளரால் அளவிட்டறியக் கூடிய ஒரு கூறு ஆகும். புவியிலிருந்து ஒரு நோக்குநர் காணும் போது தெரியும் அதன் ஒளிர்வு (பிரகாசம்) ஆகும். இது பூமியின் காற்று மண்டலத்திலுள்ள தூசு மற்றும் மேகம் போன்றவற்றால் தடைப்படும் என்பதால், இதை காற்று மண்டலத்திற்கு அப்பால் இருந்து மதிப்பிடுவார்கள். இம்மதிப்பு புவி வளிமண்டலத்தின் இடையூறைக் கருத்தில் கொண்டு சமப்படுத்தப்படும். ஒரு பொருள் பிரகாசமானதாயின் அதன் தோற்றப் பொலிவு மதிப்பு குறைவானதாக இருக்கும். விண்ணில் எல்லா விண்மீன்களும் ஒரே சமயத்தில் கண்களுக்குப் புலப்படுவதில்லை. சூரியன் மறைந்தவுடன் முதலில் தெரியவரும் விண்மீன்களை பிரகாசமிக்க விண்மீன்கள் என்றும் அதன் ஒளிப்பொலிவெண் முதல் நிலை என்றும் கூறுவர். பின்புல வெளிச்சம் குறையக் குறைய அடுத்தடுத்த பிரகாசமுள்ள விண்மீன்களும் தெரியவருகின்றன. இறுதியாகத் தெரியவருவது மங்கலான விண்மீன்களாகும். இவற்றின் ஒளிப்பொலிவெண் 6 எனக் கொள்ளப்பட்டுள்ளது. தோற்றப் பொலிவு மதிப்பு 6 வரை உள்ள பொருட்களை மட்டுமே நாம் நமது வெறும் கண்களால் காண முடியும். அதற்கு மேல் உள்ள பொருட்களை வெறும் கண்ணால் காண முடியாது. புவியில் இருந்து பார்த்தால் சூரியனின் தோற்றப் பொலிவு மதிப்பு –26.74 ஆகும். ஆனால் புது நிலவின் குறைந்த பட்ச தோற்றப் பொலிவோ –2.50 ஆகும்.

Asteroid 65 Cybele and 2 stars with their magnitudes labeled

1856 -ல் நோர்மன் ராபர்ட் போக்சன்(Norman Robert pogson ) முதல் நிலை ஒளிப்லிபொலிவெண்ணுடைய விண்மீன், மிகவும் மங்கலானத்தை விட 100 மடங்கு பிரகாசமானது என்று கொண்டு ஒரு அளவுத் திட்டத்தை நிறுவினார். விண்வெளியில் கண்களுக்குத் தெரியும் சராசரியாக மிகப்பிரகாசமான விண்மீன்கள் (அவைகள் எல்லாம் ஒரேயளவு பிரகாசமுடையவை அல்ல. மேலும் அவைகள் மிக அருகிலும் இருக்கலாம்,வெகு தொலைவு தள்ளியும் இருக்கலாம்) வெறுங்கண்களின் காட்சி எல்லையிலுள்ள மங்கலான விண்மீன்களைப் போல சரியாக 100 மடங்கு பிரகாசமுள்ளவை எனக் கண்டறிந்துள்ளனர்.[1] இது விண்மீன்களின் பிரகாச அளவிற்கு ஓர் அளவுத் திட்டத்தைத் தந்துள்ளது. அடுத்தடுத்த இரு ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீன்களின் பிரகாச விகிதம் சமாயிருக்குமாறு இதன் அளவுத் திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது இரண்டாவது ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீன் முதல் ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீனை விட n -மடங்கு பொலிவு தாழ்ந்தது என்போம். எனவே அடுத்தடுத்த ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீன்களின் ஒளிப்பொலிவெண் ஒன்றுக்கொன்று n மடங்கு வேறுபட்டது எனலாம். அதாவது மூன்றாவது ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீனும் முதலாவது ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீனும் ஒன்றுக்கொன்று (n x n) மடங்கு பொலிவு வேறுபட்டதாக இருக்கும். இதன்படி ஆறாவது ஒளிப் ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீனும் (மங்கலானது) முதலாவது ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீனும் ஒன்றுக்கொன்று( nxnxnxnxn) மடங்கு பொலிவு வேறுபட்டதாக இருக்கும் எனலாம்.

சராசரியாகப் பிரகாசமிக்க விண்மீனின் ஒளிப்பொலிவு மங்கலானதைவிட 100 மடங்கு என்பதால் nxnxnxnxn = 100. இது n-ன் மதிப்பு 2 .5 எனத் தெரிவிக்கின்றது. இதை இன்னும் துல்லியமாகக் கூறினால் n = 2 .512 ஆகும். இதன்படி ஒரு வகை ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீன் அதற்கு முந்தி இருக்கும் ஒளிப்பொலிவெண்ணுடைய அல்லது பிரகாச மிக்கதாக இருக்கும் விண்மீனைக் காட்டிலும் 2 .5 மடங்கு மங்கலானது. இந்த அளவுத் திட்டத்தின்படி 1 என்ற ஒளிப்பொலி வெண்ணுடைய விண்மீன் மிகவும் பிரகாசமானவை. அதனால் அவை சூரியன் மறைந்தவுடனேயே விண்ணில் கண்ணுக்குத் தென்படுகின்றன . இந்த விண்மீன்களின் சராசரிப் பிரகாசம் வெறும் கண்ணின் தோற்ற எல்லையில் உள்ள விண்மீன்களைப் போல 100 மடங்கு அதிகம். சராசரிப் பிரகாசம் தான் 100 மடங்கு அதிகம். தனி விண்மீனின் பிரகாசமில்லை. உண்மையில் இதில் அடங்கியுள்ள விண்மீன்களின் பிரகாசம் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. சமமான பிரகாசம் கொண்டவை இல்லை. இதிலுள்ள சில விண்மீன்கள் சராசரி விண்மீனை விடச் சில மடங்கு அதிகப் பிரகாசமானவை, சில சில மடங்கு மங்கலானவை.

30 Doradus image taken by ESO's VISTA. This நெபுலா has an apparent magnitude of 8.

விண்மீன்களின் பிரகாசத்தைக் குறிக்கும் இந்த அளவுத் திட்டத்தில், ஒரு சராசரி முதல் நிலைப் பிரகாசமுள்ள அதாவது ஒளிப் பொலிவெண் ஒன்று எனவுள்ள விண்மீனை விடவும் 2.5 மடங்கு அதிகப் பிரகாசமுள்ள விண்மீன் பூஜ்ய ஒளிப் ஒளிப்பொலி வெண்ணுடைய விண்மீன் எனப்படுகிறது.[2] இதை விட மேலும் 2.5 மடங்கு கூடுதல் பிரகாசமுள்ள விண்மீனுக்கு -1 ஒளிப்பொலி வெண்ணாகும். ஒரு விண்மீனின் ஒளிப்பொலிவெண் பூஜ்யம் என்றால் அது ஒளிராத விண்மீனைக் குறிப்பிடுவதில்லை. உண்மையில் அது பிரகாசமிக்க விண்மீனாகும். எதிர்குறியுடன் கூடிய ஒளிப்பொலிவெண்ணுடையவை இதை விடவும் பிரகாசமானவை.[3]

வெப்பநிலைக்கான சென்டிகிரேடு அளவுத் திட்டத்தில் எதிர் குறியுடைய வெப்பநிலை இருப்பதைப் போல , விண்மீன்களின் பிரகாசத்திற்கான இந்த அளவுத்திட்டத்திலும் எதிர் குறி உடைய ஒளிப்பொலிவெண்கள் உள்ளன. வெப்பநிலை அளவுத்திட்டத்தில் நீரின் உறை நிலையும், கொதி நிலையும் சுழி மற்றும் நூறு டிகிரி செண்டிகிரேடாகக் கொள்ளப்பட்டுள்ளதை போல விண்மீன்களுக்கான பிரகாச அளவுத் திட்டத்தில், சூரியன் மறைந்தவுடன் கண்ணுக்குத் தெரிகின்ற பிரகாசமான விண்மீனும், வெறும் கண்களின் காட்சி எல்லையில் தெரிகின்ற மங்கலான விண்மீனும் ஒளிப்பொலிவெண் ஒன்றையும், ஆறையும் கொண்டுள்ளதாக கருதப்படுகின்றன.

முதல் நிலை பிரகாசமுள்ள விண்மீனைப் போல் சரியாக 2.5 மடங்கு என்றில்லாமல் 1 .5 மடங்கு அல்லது 2 மடங்கு அதிகப் பிரகாசமுள்ளதாக இருப்பின் அவை ஒன்றுக்கும் சுழிக்கும் இடைப்பட்ட மதிப்புள்ள ஒளிப் பொலிவெண்ணைப் பெற்றிருக்கும். இது பின்ன மதிப்புடையதாக இருக்கும். எனவே ஒளிப் பொலிவெண் விண்மீன்களுக்கு ஒரு முழு எண்ணாக இருக்க வேண்டும் என்பதில்லை. மிகப்பிரகாசமான சராசரி விண்மீனின் பிரகாசம் வெறும் கண்ணுக்கு தெரியக் கூடிய மங்கலான விண்மீனைப் போல 100 மடங்கு பிரகாசமிக்கவை என்ற அடிப்படையில் பிரகாசமிக்க பல விண்மீன்களின் பிரகாசத்தைக் கணக்கிட்டறிந்தால் அவற்றில் ஒன்றுக்குக்கூட ஒளிப்பொலிவெண் 1 என்றில்லை. ஒளிப்பொலிவெண்ணின் மதிப்புகள் ஒன்றுக் கீழாகவோ அல்லது மேலாகவோ இருக்கின்றன. ஏனெனில் ஒப்பிடுவதற்காக பின்புல ஒளிச் செறிவின் பின்னணியில் அவை நமக்குத் தென்படும் முறையை அடிப்படையாகக் கொண்டு நாமாக ஏற்படுத்திக் கொண்ட அது ஓர் அளவுத் திட்டமாக உள்ளது. இந்த அளவுத் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீனின் பிரகாசத்தை மற்றொரு ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீனின் பிரகாசத்தோடு ஒப்பிடுகின்றார்கள்.[4] மூன்றாம் நிலைப் பிரகாசமுடைய விண்மீன் முதல் நிலைப் பிரகாசமுடைய விண்மீனை விட 2.5 x 2.5 மடங்கு அதாவது 6.3 மடங்கு மங்கலானது. எனவே ஒரு முதல் நிலைப் பிரகாசமுடைய விண்மீனின் பிரகாசம் 6.3 மூன்றாம் நிலைப் பிரகாசமுடைய விண்மீனின் பிரகாசத்திற்குச் சமம் என அறியலாம்.இதே கணிப்பு முறையில் ஒரு முதல் நிலைப் பிரகாசமுடைய விண்மீன், 2.5 ,இரண்டாம் நிலை 6.3 ,மூன்றாம் நிலை 15.9, நான்காம் நிலை 39.8 , ஐந்தாம்நிலை 100 ,ஆறாம் நிலை 251, எழாம் நிலை 631 ,எட்டாம் நிலை 1585 ..... பிரகாசமுடைய விண்மீன்களின் பிரகாசத்திற்குச் சமம் எனக் கூறலாம். இது போல -௦.5 ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீன் 1 .5 முதல் நிலை ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீனுக்கும், -௦.19 ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீன் 5.8 முதல் நிலை ஒளிப் ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீனுக்கும் சமம் எனலாம்.[5]

வெறுங் கண்களால் 6 என்ற ஒளிப் ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீன்கள மட்டுமே காண முடியும். 7 மற்றும் அதற்கும் மேற்பட்ட ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீன்கள் இப்பிரபஞ்சத்தில் இருக்கின்றன. அவை வெறும் கண்ணுக்குத் தெரியும் விண்வெளிக்கப்பால் இருக்கின்றன.

விண்மீன்களின் ஒளிப்பொலிவெண் அவற்றின் தொலைவைச் சார்ந்திருப்பதில்லை. எனவே ஒளிப்பொலிவெண் மூலம் விண்மீன்களின் தொலைவை நேரடியாக மதிப்பிட முடியாது.எடுத்துக்காட்டாக வெகு தொலைவில் உள்ள - 5 என்று தாழ்ந்த ஒளிப்பொலிவெண்ணுடைய பிரகாசமான விண்மீன்கள் கண்ணுக்குத் தெரியும். ஆனால் அருகில் அதிக ஒளிப் ஒளிப்பொலிவெண்ணுடன், தாழ்ந்த பிரகாசத்துடன் கூடிய விண்மீன் கண்ணுக்குத் தெரிவதில்லை.

மேற்கோள்

தொகு
  1. Magnitudes of Thirty-six of the Minor Planets for the first day of each month of the year 1857, N. Pogson, MNRAS Vol. 17, p. 12 (1856)
  2. Landolt-Börnstein: Numerical Data and Functional Relationships in Science and Technology - New Series " Gruppe/Group 6 Astronomy and Astrophysics " Volume 2 Schaifers/Voigt: Astronomy and Astrophysics / Astronomie und Astrophysik " Stars and Star Clusters / Sterne und Sternhaufen[தொடர்பிழந்த இணைப்பு] L. H. Aller et al., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-10976-5 (1982)
  3. "Magnitude". National Solar Observatory—Sacramento Peak. Archived from the original on 2008-02-06. பார்க்கப்பட்ட நாள் 2006-08-23.
  4. "Magnitude Arithmetic". Weekly Topic. Caglow. பார்க்கப்பட்ட நாள் 30 January 2012.
  5. Eric Schulman (1997). "Misconceptions About Astronomical Magnitudes". American Journal of Physics 65: 1003. doi:10.1119/1.18714. Bibcode: 1997AmJPh..65.1003S. 

வெளியிணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோற்ற_ஒளிப்பொலிவெண்&oldid=3559795" இலிருந்து மீள்விக்கப்பட்டது