நகர்களிடை காட்சிப் போட்டி
நகர்களிடை காட்சிப் போட்டி அல்லது இன்டர்-சிட்டீஸ் ஃபேர்ஸ் கோப்பை (Inter-Cities Fairs Cup) என்பது 1955 முதல் 1971 ஆடப்பட்ட ஐரோப்பிய கால்பந்துப் போட்டியாகும். பன்னாட்டு வணிகப் பொருட்காட்சிகளை பிரபலப்படுத்தும் பொருட்டு இப்போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டி தொடங்கும் காலத்துக்கு முன்னர், வணிக பொருட்காட்சிகளை நடத்தும் நகரங்களுக்கிடையே நட்புமுறை போட்டிகள் நடத்தும் வழக்கம் இருந்தது; அதிலிருந்தே இப்போட்டியாக பரிணமித்தது. ஆரம்ப காலகட்டத்தில் வணிக பொருட்காட்சிகள் நடத்தும் நகரங்களிலிருக்கும் அணிகள் இதில் எவ்வித நிபந்தனையுமின்றி கலந்துகொள்ளலாம் என்றிருந்தது, அதாவது அவர்கள் அந்நாட்டின் கால்பந்துக் கூட்டிணைவில்/லீகில் எவ்விடத்தில் தகுதிபெற்றார்கள் என்பது முக்கியமில்லாமலிருந்தது. மேலும் ஒரு நகரத்திலிருந்து ஒரு அணியே பங்குபெற வேண்டும் என்ற விதியும் இருந்தது. 1968-க்குப் பிறகு, கூட்டிணைவில் தகுதிபெறும் நிலையைப் பொறுத்தே இப்போட்டிக்குத் தகுதிபெறலாம் என்ற விதி கொண்டுவரப்பட்டது. 1971-ஆம் ஆண்டில் யூஈஎஃப்ஏ-வின் சார்புநிலைக்கு வந்தது; அதன்பின்னர், அது யூஈஎஃப்ஏ கோப்பையுடன் இணைக்கப்பட்டது.[1][2]
தோற்றம் | 1955 |
---|---|
மண்டலம் | ஐரோப்பா |
அணிகளின் எண்ணிக்கை | 12 (First Round) 64 (Total) |
இணையதளம் | History |
நகர்களிடை காட்சிப் போட்டியானது யூஈஎஃப்ஏ கோப்பைக்கு முன்னோடியாக இருந்தாலும் அது யூஈஎஃப்ஏ-வினால் நடத்தப்படவில்லை. ஆதலால், இப்போட்டியில் ஓர் அணியின் செயல்பாடு அவற்றின் ஐரோப்பிய அளவிலான போட்டிகளில் செயல்பாடாக அங்கீகரிக்கப்படாது.