நந்திக் கலம்பகம்

இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் குறித்துப் பாடப்பட்டது.

நந்திக் கலம்பகம் தமிழில் உருவான கலம்பக இலக்கியங்களில் ஒன்று. இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் குறித்துப் பாடப்பட்டது. இதுவே கலம்பக நூல்களில் காலத்தால் முற்பட்டு விளங்குவதாகும். மூன்றாம் நந்திவர்மனின் காலம் கி.பி.825-850 என்பதால் நந்திக் கலம்பகத்தின் காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு ஆகும். காஞ்சி, மல்லை (மாமல்ல புரம்), மயிலை( மயிலாப்பூர்) ஆகிய நகரங்கள் பற்றி இந்நூலில் சிறப்பாகப் போற்றப்பட்டுள்ளது. சிறந்த சொற்சுவை பொருட்சுவையோடு கற்பனை வளமும் நிறைந்த இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை.

நூல் வரலாறுதொகு

நந்திவர்மனிடம் இருந்து அரசைக் கவரும் நோக்கில் அவனது தம்பியால் ஒழுங்குசெய்யப்பட்டு அறம் பாடுதல் என்னும் முறையில் இப்பாடல்கள் பாடப்பட்டன. அறம் வைத்துப்பாடிய நூலின் பாடலைத் தற்செயலாகக் கேட்ட நந்தி வர்மன் அப்பாடலின் சிறப்பில் மனம் பறிகொடுத்து பாடல் முழுவதையும் பாட விரும்பினான். நூல் முழுவதையும் கேட்டால் மன்னன் உடல் எரிந்து இறப்பான் என்பதை அறிந்தும் தமிழின் மீதுள்ள தனியாத காதலால் உயிரையும் பொருட்படுத்தாது, எரியும் பந்தலின் கீழிருந்து கேட்டு உயிர் இறந்தான் என்று கூறப்படுகிறது. 'நந்தி, கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்' - என்னும் சோமேசர் முதுமொழி வெண்பா என்னும் நூலின் வெண்பா வரிகளும், கள்ளாரும் செஞ்சொல் கலம்பகமே கொண்டு, காயம் விட்ட தெள்ளாறை நந்தி -என்னும் தொண்டை மண்டலச் சதகப்பாடல் வரிகளும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன. இதற்கேற்ப இந்நூலிலும் பல வசைக்குறிப்புகள் இடம் பெறுகின்றன. இதனை மறுத்துக்கூறுவாரும் உள்ளனர்.

நந்திக் கலம்பகம்

  பல்லவர் கி.பி.3-9 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்டனர். இவர்கள் தமிழ்மொழியை வளர்த்து தமிழ்மொழியை ஆதரித்தனர். தமிழை வளர்த்த பல்லவ அரசர்களின் 3- ஆம் நந்திவர்மன் குறிப்பிடத்தக்கவன். மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப்பட்டதே `நந்திக் கலம்பகம்’ ஆகும். இந்நூல், மற்ற கலம்பக நூற்களைப் போலல்லாமல் வரலாற்று நூலாகவே திகழ்கின்றது.
  உள்ளதை உள்ளவாறு கூறுவது வரலாறு.  உள்ளதை உயர்த்திக் கூறுவது இலக்கியம். மூன்றாம் நந்திவர்மனது அரசியல் தொடர்பான செய்திகள் நந்திக் கலம்பகத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. இவ்விலக்கியத்தில் மூன்றாம் நந்திவர்மனின் வரலாற்றுச் செய்திகளைப் புறத்துறைகள் வாயிலாகவும், தலைவி தன் மகிழ்ச்சியைக் கூறுவதாக அமைந்து, அகப்பொருள் சுவையுடனு விளக்கப்படுகிறது.
  மூன்றாம் நந்திவர்மனின் வரலாறு குறித்த கல்வெட்டு, செப்பேட்டு செய்திகளும், நந்திக்கலம்பகத்தில் உள்ள செய்திகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்படுகின்றன. மேலும் மூன்றாம் நந்திவர்மனின் கொடைச்சிறப்பு, தமிழ்ப்பற்று, சிவபெருமான் மீது கொண்ட பக்தி, வீரம், அறிவு போன்ற பண்புகளுடன் அறம், கொடை போன்ற பண்புகளும் நந்திக் கலம்பகத்தில் மிகவும் போற்றப்படுகின்றன.[1]

நூலமைப்புதொகு

கடவுளர்க்கு 100, முனிவர்க்கு-95, அரசர்க்கு -90 அமைச்சர்க்கு- 70, வணிகர்க்கு- 50 வேளாளர்க்கு -30 எனும் அளவில் கலம்பகப் பாடல்கள் அமைய வேன்டும் என்பது விதி. இந்த அளவினை மீறி கலம்பகங்கள் பாடப்பட்டுள்ளன. நந்திக் கலம்பகத்தில் அகம் ,புறம், ஆகிய துறைகள் கலந்து வர அமையப்பெற்ற போதும் அவற்றுள் அகத்திணைச் செய்திக்ள் பெரும்பான்மையினதாகவும் புறத்திணைச் செய்திகள் சிறுபான்மையினதாகவும் இடம் பெறுகின்றது. நந்திக் கலம்பகத்தில் 144 பாடல்கள் காணப்படுகின்றன. ஆனால் அரசர் மீது பாடப்பெறும் கலம்பகம் 90 பாடல்களுடையதாய் இருக்க வேண்டும் என்பது நியதியாகும். எனவெ, இதில் உள்ள அதிகப்படியான 54 பாடல்கள் பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

நூல்கூறும் செய்திகள்தொகு

இந்நூலில் நந்தி வர்மனின் தெள்ளாறு வெற்றியைப் பற்றி மட்டும் 16 பாடல்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.கொற்ற வாயில் முற்றம், வெறியலூர், வெள்ளாறு, தெள்ளாறு போன்ற பல்வேறு போர்க்களங்களைப் பற்றிக் கூறும் சிறந்த வரலாற்று நூலாகவும் இது திகழ்கிறது.

நூல் நயம்தொகு

நந்திக் கலம்பகப் பாடல்களில் வீரமும் நகைச்சுவையும் கலந்து காணப்படுகிறது. பரத்தையர் வீட்டுக்குச் சென்று திரும்பிய தலைவன், பாணன் ஒருவனைத் தலைவியிடம் தூது அனுப்புகிறான் பாணரின் தூது உரை கேட்டுச் சினம் கொண்ட தலைவி அவனை இழித்துரைப்பதாக அமையும்

" ஈட்டுபுகழ் நந்தி பாண நீ எங்கையர் தம்

வீட்டிலிருந்து பாட விடிவளவும் -கேட்டிருந்தோம்

பேயென்றாள் அன்னை பிறர் நரியென்றார் தோழி

நாயென்றாள் நீ என்றேன் நான்".

என்னும் பாடல் வரிகளால் இதனை அறியலாம்.

தமிழுக்காகத் தன்னுயிர் நீத்த நந்தியின் பிரிவினைத் தாளாது கையறு நிலையாகப் பாடப்பட்டுள்ள பாடல் புலவரின் புலமைக்குச் சான்றாகத் திகழ்வதோடு நந்தியின் சிறப்பையும் புலப்படுத்துகிறது.

"வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
செந்தழல் அடைந்ததுன் தேகம்
நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம்
நந்தியே நந்தயா பரனே!"

உசாத்துணைதொகு

1.மர்ரே எஸ். ராஜம் அவர்கள் 1960-ல் வெளியிட்ட நூலின் மறுபதிப்பு- நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்.
2.தமிழ் இலக்கிய வரலாறு - ஜனகா பதிப்பகம்

இவற்றையும் பார்க்கவும்தொகு

 1. கோபாலன், ப. (1974). நந்திக் கலம்பகத்தில் வரலாற்றுக் குறிப்புகள். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள். 193-198.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்திக்_கலம்பகம்&oldid=2975900" இருந்து மீள்விக்கப்பட்டது