நயீமா சித்தீக்
நயீமா சித்தீக் இலங்கையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். பதுளையை சேர்ந்த இவர் ஆசிரியராகவும் அறியப்படுகிறார். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என் பல படைப்புகளை எழுதியுள்ளார். நயீமா ஏ. பஷீர்' என்ற பெயரில் எழுதிவந்த இவர் திருமணத்திற்குப் பின்னர் 'நயீமா சித்தீக்' என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். வானொலி, பத்திரிகை துறையிலும் பணியாற்றியுள்ளார். இலக்கியத் தாரகை[1] சிறுகதை செம்மணி போன்ற பட்டங்கள் பெற்றுள்ளார்.[2]
நயீமா சித்தீக் | |
---|---|
பிறப்பு | 1948 ஹப்புத்தளை |
தேசியம் | இலங்கை |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | ♂பஷீர் மரைக்கார், ♀தாஜ்பீவி |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுஇலங்கையின் மலையகத்தில் பதுளை - ஹப்புத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பஷீர் மரைக்கார், தாஜ்பீவி தம்பதியினரின் ஏகபுதல்வியாவார். இவர், பண்டாரவளை சாஹிராக்கல்லூரி, ஹப்புத்தளைத் தேசிய பாடசாலை, காத்தான்குடி மத்தியகல்லூரி, பசறை மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியாவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொதுக்கலைமாணிப் பட்டத்தையும், கல்வித் துறை டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார். இவரின் கணவர் முஹம்மத் சித்தீக் பிள்ளைகள் பாத்திமா சியாமா, பாத்திமா சஜீமா, பாத்திமா ஸஹ்ரானா
தொழில்
தொகு1970ம் ஆண்டில் ஆசிரியையாக நியமனம் பெற்ற இவர் இலங்கையின் பல பாகங்களிலும் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார்.
இலக்கிய ஆர்வம்.
தொகு1960களில் தான் 7ம் வகுப்பிற் கற்கும்போது 'கல்வி'எனும் தலைப்பில் எழுதிய முதல் ஆக்கத்தை தினகரன் பிரசுரித்தது. தொடர்ந்து கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், உருவகக்கதைகள், குட்டிக்கதைகள் என இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் இவர் முனைப்புடன் ஈடுபட்டார். இதுவரை இவர் நான்கு நாவல்களையும், 750 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகளையும் எழுதி இலங்கையிலேயே முன்னணி முஸ்லிம் பெண் எழுத்தாளராக திகழ்கின்றார். இல்லற வாழ்க்கையில் இணைய முன்பு 'நயீமா - ஏ - பஷீர்' என எழுதிவந்த இவர் பின்பு 'நயீமா சித்தீக்' என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். இவரின் ஆரம்பகால படைப்பிலக்கியங்கள் பெருமளவு தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டவை.
எழுதியுள்ள நூல்கள்
தொகு- வாழ்க்கைப் பயணம் (1975): (வீரகேசரி பிரசுர வெளியீடு) - இலங்கையில் முஸ்லிம் பெண் எழுத்தாளர் ஒருவரினால் எழுதி வெளியிடப்பட்ட முதலாவது நாவல் இதுவாகும்.
- வாழ்க்கைச் சுவடுகள் (1989): சிறுகதைத் தொகுதி (கல்தஹின்மினை தமிழ் மன்ற வெளியீடு)
- வாழ்க்கை வண்ணங்கள் (2005): சிறுகதைத் தொகுதி (உடதலவின்னை சிந்தனை வட்ட வெளியீடு)
- ஆயிரம் வினாக்களும் விடைகளும் (தமிழ் பாட நூல்)
- சீறாப்புராணம் நபி அவதாரப் படலம் (தமிழ் பாட நூல்)
- வாழ்க்கை வளைவுகள் (2005) - சிறுகதைத் தொகுதி (மணிமேகலைப் பிரசுரம்)[3]
பேச்சுத்துறை
தொகுதனது 17வது வயதிலிருந்தே மேடைப் பேச்சுகளில் ஆர்வம் செலுத்திய இவர் புகழ்பெற்று விளங்கும் சிறந்த பெண் பேச்சாளர்களில் ஒருவராவார். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மீலாத் விழாக்கள், கலைவிழாக்கள், இலக்கிய விழாக்கள் என்பவற்றில் உரையாற்றியுள்ளார். இலங்கை வானொலியில் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள இவர் நூற்றுக்கு மேற்பட்ட சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார். அத்துடன் எண்ணற்ற கவியரங்குகளில் பங்கேற்றுள்ளார்.
தொழில் சங்கங்களில்
தொகுதனது இளம் பராயத்தில் ஏ.அஸீஸ் அவர்களின் அகில இலங்கை ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மாதர் பிரிவில் தலைவியாக தொழிற்பட்டதுடன், இலங்கையின் தோட்டப் பிரதேசத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்களின் சேமநலன்களில் அக்கறை மிக்கவராகவும் காணப்பட்டார்.
ஊடகத்துறையில்.
தொகுஅத்துடன் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் ஹப்புத்தளை பிராந்திய நிருபராகவும் கடமை புரிந்துள்ளார்.
பெற்ற விருதுகள்.
தொகு- நஜ்முல் அதீப் (இலக்கியத் தாரகை) 1991 முஸ்லிம் சமயக் கலாசாரத் திணைக்களம்
- 'சிறுகதை செம்மணி' 2004 - சிந்தனை வட்;டம்
- கலாபூஷணம் 2005 - இலங்கை அரசு
- அவ்வப்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசு, அரசுசார்பற்ற அமைப்புக்களால் பொன்னாடை, பொற்கிழி, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "மலையகத்தின் இலக்கியத் தாரகை நயீமா சித்தீக் - நாவலப்பிட்டி கே.பொன்னுத்துரை", www.archive.geotamil.com, பார்க்கப்பட்ட நாள் 2024-05-06
- ↑ "ஆளுமை:நயீமா, சித்தீக்". நூலகம். https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D. பார்த்த நாள்: 6 May 2024.
- ↑ சித்தீக், நயீமா (2005), வாழ்க்கை வளைவுகள், மணிமேகலைப் பதிப்பகம், பார்க்கப்பட்ட நாள் 2024-05-06