நற்செய்தியின் மகிழ்ச்சி (மடல்)
நற்செய்தியின் மகிழ்ச்சி (இலத்தீன்: Evangelii Gaudium) (ஆங்கிலம்: The Joy of the Gospel) என்பது கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான திருத்தந்தை பிரான்சிசு அச்சபையைச் சார்ந்தவர்களுக்கு 2013, நவம்பர் 24ஆம் நாள் எழுதிய ஒரு திருத்தூது மடல் ஆகும். இது திருச்சபை இன்றைய உலகில் நற்செய்தியை அறிவிக்கும் பணியில் முழு ஆர்வத்தோடு ஈடுபட வேண்டியதன் தேவையை வலியுறுத்துகிறது.[1]
இந்த போதனை ஏடு கிறித்தவர்கள் தம் கடமையைச் சரிவர ஆற்றுவதற்கு சவால் விடுப்பதோடு, திருத்தந்தை பிரான்சிசின் கொள்கை விளக்க ஏடு என்னும் வகையிலும் அமைந்துள்ளது.[1][2] மேலும், கிறித்தவ திருச்சபை இனி வரும் நாள்களில் எவ்வாறு தன்னைச் சீர்திருத்தி அமைக்க வேண்டும் என்பதையும் இந்த ஏடு விளக்கிக் கூறுகிறது.[2]
திருத்தந்தை பிரான்சிசின் இறையியல் பார்வை
தொகுதிருத்தந்தை பிரான்சிசு வெளியிடுகின்ற இரண்டாவது போதனை ஏடு இது. 2013ஆம் ஆண்டு சூன் 29ஆம் நாள் அவர் நம்பிக்கை ஒளி என்ற தலைப்பில் ஒரு சுற்றுமடலை வெளியிட்டார். (காண்க: திருத்தந்தை பிரான்சிசு வெளியிட்ட முதல் சுற்றுமடல்). அந்தச் சுற்றுமடலை எழுத ஆரம்பித்தவர் திருத்தந்தை பிரான்சிசுக்கு முன் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் ஆவார்.
முழுவதுமாக திருத்தந்தை பிரான்சிசின் இறையியல் பார்வையை எதிரொலிக்கின்ற போதனை ஏடு நற்செய்தியின் மகிழ்ச்சி என்னும் இந்த திருத்தூது மடலே ஆகும்.
முக்கிய கருப்பொருள்கள்
தொகு2013ஆம் ஆண்டு மார்ச்சு 13ஆம் நாள் பணிப்பொறுப்பு ஏற்று கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக விளங்குகின்ற திருத்தந்தை பிரான்சிசு, தமது ஆட்சியின் தொடக்கத்திலிருந்தே ஒருசில கருப்பொருள்களை வலியுறுத்தி வந்துள்ளார். அப்பொருள்கள் இந்த அவருடைய போதனை ஏட்டிலும் காணக்கிடக்கின்றன. அவற்றுள் சில:
- கிறித்தவர்கள் தமது சமய நம்பிக்கையின் அடிப்படையில் ஏழை எளியோர் மட்டில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
- உலக நாடுகளில் நீதியும் நேர்மையுமான சமூக, அரசியல், சட்ட அமைப்புகள் நிறுவப்படுமாறு அவர்கள் உழைக்கவேண்டும்.
- "சந்தைப் பொருளாதரம் உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும் என்பது தவறான கண்ணோட்டம். ஏதோ ஒரு சக்தி அப்பொருளாதரத்தை நீதியுள்ளதாக மாற்றும் என்பது வெறும் கனவே. மேலும், நாடுகள் தம் குடிமக்களுக்கு ஏதோ ஒரு சில திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் நீதியைக் கொண்டுவந்துவிட முடியும் என்று நம்புவது தவறான பார்வை."[3][4]
- மேலும் பிரான்சிசு, "பங்கு சந்தையில் இரு புள்ளி குறைந்துவிட்டது என்றதுமே அது கவனிக்க வேண்டிய செய்தி என்றால், முதியோர் ஒருவர் தங்க வீடின்றி குளிரில் வாடி இறந்தால் அது கவனிக்க வேண்டிய செய்தி ஆகாதா?" என்று கேட்கின்றார்.[5]
திருச்சபையில் சீர்திருத்தம்
தொகுதிருச்சபையின் உள்வாழ்வில் சீர்திருத்தம் நிகழ வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிசு கேட்கின்றார் [6].
- திருச்சபையில் அனைத்து நிர்வாகத்தையும் மையத்திலிருந்தே நிகழ்த்துவது சரியாகாது என்றும் அவர் கூறுகின்றார்.
- மறையுரை ஆற்றுவதன்வழியாக மக்களுக்கு கிறித்தவக் கொள்கைகளை நன்கு விளக்கி உரைக்க வேண்டும்.
- கொள்கையை மட்டுமே வலியுறுத்துவதற்கு மாறாக, நடைமுறையில் அக்கொள்கையைச் செயலாக்குவது பற்றி அதிக கவனம் செலுத்த வேண்டும்.
போதனை ஏட்டின் நடை
தொகுஇந்தப் போதனை ஏடு உயர்ந்த நடையில் இல்லாமல், சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக்கூடுமான எளிய நடையில் அமைந்துள்ளது.[1]
இந்த ஏட்டில் வலியுறுத்தப்படுகின்ற கருத்துகளை அடையாளம் காண, அந்த ஏடு அதிகமாகப் பயன்படுத்தியுள்ள ஒரு சில சொற்களைக் கவனிக்கலாம்:
- அன்பு (154 தடவை)
- மகிழ்ச்சி (109 தடவை)
- ஏழைகள் (91 தடவை)
- அமைதி (58 தடவை)
- நீதி (37 தடவை)
- பொது நன்மை (15 தடவை)[7]
போதனை ஏட்டின் அமைப்பு
தொகுஇப்போதனை ஏட்டின் முகவுரை தவிர ஐந்து அதிகாரங்கள் உள்ளன. அவை
- திருச்சபை மறை அறிவிப்பில் ஈடுபடும் ஒன்றாக மாற்றம் பெற வேண்டும்
- குழுவாக நற்செய்தி அறிவிப்பில் ஈடுபடுதல்
- நற்செய்தியை அறிவிக்கும் பணி
- நற்செய்தி அறிவிப்பின் சமூகக் கூறுகள்
- ஆவியால் நிரம்பிய நற்செய்தி அறிவிப்பாளர்கள்
இந்த மடல் எழுதப்பட்ட பின்னணி
தொகுதிருத்தந்தை பிரான்சிசு எழுதிய இந்த போதனை மடலின் மையப் பொருள்: "இன்றைய உலகில் நற்செய்தி அறிவித்தல்" என்பதாகும். 2012ஆம் ஆண்டினை "நம்பிக்கை ஆண்டு" (Year of Faith) எனக் கொண்டாட வேண்டும் என்று திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அறிவித்திருந்தார். உலகின் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற பல்வேறு மாற்றங்களுக்கு நடுவே கிறித்தவ நம்பிக்கை பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.[8].
அதன் பின், 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உரோமையில் கூடிய 13ஆம் பொது ஆயர் மன்றம் "கிறித்தவ நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளத் தேவையான புதிய நற்செய்தி அறிவிப்பு" என்னும் பொருள்பற்றி ஆலோசனை நடத்தியது.
"நம்பிக்கை ஆண்டு" கொண்டாட்டம் 2013ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் நாள் நிறைவுற்றது. அந்த நிகழ்வைச் சிறப்பிக்கும் வகையில் திருத்தந்தை பிரான்சிசு "நற்செய்தியின் மகிழ்ச்சி" என்ற தலைப்பில் தமது திருத்தூது மடலை வெளியிட்டார்.
இந்த மடலின் அணுகுமுறை
தொகுஇந்த மடலை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிசு, உலகமெங்கும் பரவியிருக்கின்ற திருச்சபை கிறித்துவின் நற்செய்தியை இன்னும் அதிக ஊக்கத்தோடு தொடர்ந்து அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வெவ்வேறு நாடுகளில் திருச்சபை வெவ்வேறு பின்னணிகளில் வாழ்ந்து செயல்படுவதால் அந்தந்த தலத்திருச்சபை நற்செய்தி அறிவிப்பதில் வேறுபட்ட வழிமுறைகளைக் கையாளக்கூடும். ஆனால் நற்செய்தி என்பது மகிழ்ச்சி கொணர்கின்ற செய்தி மட்டுமல்ல, அதை அறிவிப்பவர்களும் மகிழ்ச்சியால் நிரம்பியிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகின்றார்.
மேலும், மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி கொணர்கின்ற செய்தியானது மனிதர்களைத் துன்பத்திலிருந்தும் சோகத்திலிருந்தும் விடுவிக்கின்ற சக்தியாக மாற வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார்.
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Thavis, John (26 நவம்பர் 2013). "Pope Francis' document delivers wake-up call on evangelization". பார்க்கப்பட்ட நாள் 26 நவம்பர் 2013.
- ↑ 2.0 2.1 O'Leary, Naomi (26 November 2013). "Pope attacks 'tyranny' of markets in manifesto for papacy". Reuters இம் மூலத்தில் இருந்து 21 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140821090534/http://www.reuters.com/article/2013/11/26/us-pope-document-idUSBRE9AP0EQ20131126. பார்த்த நாள்: 2013-26-2013.
- ↑ Francis & 2013 204.
- ↑ Francis & 2013 202.
- ↑ Francis & 2013 53.
- ↑ Francis & 2013 27.
- ↑ Lasky, Mike Jordan (26 நவம்பர் 2013). "Pope Francis' Evangelii Gaudium: Work for justice at the heart of discipleship". Millennial. பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2013.
- ↑ நம்பிக்கை ஆண்டுக் கொண்டாட்டம்