நல்லச்சுதனார்

சங்க கால புலவர்

நல்லச்சுதனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது.[1] இந்தப் பாடல் திருப்பரங் குன்றத்து முருகப் பெருமானை வாழ்த்தி மகிழ்கிறது. இந்தப் பாடலுக்கு அக்காலத்தில் கண்ணகனார் என்பவர் இசையமைத்துக் காந்தாரப் பண்ணில் பாடி மகிழ்ந்துள்ளார்.

இசைவாணர்
மேலும் பிறர் பாடிய நான்கு பாடல்களுக்கு இவர் இசையமைத்துப் பாடியுள்ளார். நல்லழிசியார் வையையைப் பாடிய பாடலுக்கும்,[2] செவ்வேளைப் பாடிய பாடலுக்கும்,[3] நோதிறம் என்னும் பண்ணும், குன்றம் பூதனார் செவ்வேளைப் பாடிய பாடலுக்கும் [4] நல்லந்துவனார் வையைப் பாடிய பாடலுக்கும் [5] காந்தாரம் என்னும் பண்ணும் அமைத்துப் பாடியுள்ளார்.

இவர் காட்டும் முருகன்

தொகு

வென்றிக் கொடியணிசெல்வ! உன் குன்றத்துக் காலடியில் கிடக்க வேண்டும் என்று தொழுகின்றோம். ஊர்ந்ததை

முருகனின் ஊர்தி நெற்றியில் சிவந்த ஓடை பூண்ட புகழ்சால் வேழம்.[6]

தொட்டதை

முருகனின் சருமம் தாளியை என்னும் பயிர் போன்றது. தாள் தாமரை போன்றது. வெரிநம் என்னும் உடும்பின் முதுகுத் தோல் போல் சிவந்து பாயும் புதுவெள்ளம் போன்றது. உடுத்தியிருக்கும் ஆடை பாம்புத்தோல் போன்றது. அடையல் என்னும் மிதியடி முருகனுக்கு மயில்.[7]

கையதை

முருகன் கையில் இருப்பது சூரபன்மாவைத் தடிந்த வேல். அந்த வேலுக்கு 'அன்றில்' என்னும் புள்ளின் பெயர் உண்டு.

பூண்டதை

முருகன் பூண்டிருப்பது சுருண்டிருக்கும் கடப்பம் பூ மாலை.

அமர்ந்ததை

உயர்ந்தோர் நாவால் உரைத்துச் சுவைக்கும் தண்பரங்குன்றம் என்னும் திருப்பரங்குன்றம்.

முருகனைத் தொழும் மகளிர்

தொகு

முருகனைத் தொழச் செல்லும் மகளிர் தம்மை ஓவியம் போல அழகுபடுத்திக்கொண்டனர். ஆடுவாள்

பொற்சிலம்பின் முத்து ஒலிக்க, துடி என்னும் உடுக்கின் ஓசைக்கு ஏற்ப நறா உண்ட மகிழ்வில் சில மகளிர் ஆடினர்.

ஊடுவாள்

சிலர் தன்னுடன் படுக்கையில் கிடக்கும் கணவனோடு கண் சிவக்க ஊடினர். (அவள் நினைவு முருகன்)

அணிவாள்

முருகனுக்குத் தன் அழகைக் காட்டச் சிலர் தன் அணிகலன்களைக் கண்ணாடியின் முன்னே நின்று திருத்திக்கொண்டனர்.

பூசுவாள்

சிலர் தன் முலையின்மேல் சந்தனம் பூசிக் குங்குமம் உதிர்த்து ஒப்பனை செய்துகொண்டனர்.

பரங்குன்றின் சிறப்பு

தொகு
  • விசிறி போல மேகம் ஆடியது.
  • அதுபோல மயிலும் ஆடிற்று.
  • குழல் போல வண்டுகள் ஊதின.
  • முழவு போல் அருவி முழங்கிற்று.

புனல் விளையாட்டு

தொகு
அவள் தாழ்நீரில் குளித்தாள். அவளது கேள்வன் மேல்நீரில் குளித்தான். அவன் தன் கையிலுள்ள மூங்கில் பீச்சனாங் குழாயின் வழியே அவள் மேல் நீரை விசிறினான். அவளது கையைப் பிடித்து இழுத்தான். அவள் தன் கையிலுள்ள நீர்பெய் வட்டத்தால் நீரை விசிறி நழுவினாள். அப்போது நீரின் போக்கில் இழுத்துச் செல்லப்பட்டாள். உடனே அவளது கணவனாகிய கேள்வன் தண்ணீரில் பாய்ந்து அவளைத் தழுவித் தூக்கிக்கொண்டு வந்தான்.

காற்று மணம்

தொகு
மைந்தர் அணிந்திருந்த மாலையிலும் சந்தனத்திலும் மோதி வளி மணந்தது. மகளிர் கமழும் புகையால் கூந்தலைப் புலர்த்திய வளி மணந்தது. முருகனுக்காகத் தொடுத்த கடம்ப மாலையின் வளிமணம் கமழ்ந்தது.

அசைந்தாடியவை

தொகு
கண் மின்னல் பாய்ந்தாடிற்று. புன்னகை பூத்தாடிற்று. தலையில் சூடிய கோதை சாய்ந்தாடிற்று. எங்கும் குளுமை. அனைவரும் சிவப்பு நிற ஆடை அணிந்திருந்தனர். துடியின் இசைக்கேற்ப ஆடும்போது அந்த ஆடை ஆடிற்று. இவை வாடைக்காற்றில் அசைந்தாடும் பூங்கொம்பு போல் ஆடின. துடி இசைக்கு ஏற்ப ஆடுபவளின் கண்ணானது அம்பைத் திருப்பித் திருப்பிப் புரட்டுவது போல ஆடிற்று.

அடியுறை

தொகு
12 தோள், 6 முகம் கொண்ட முருகனுக்கு இன்றுபோல் என்றும் அடியுறையாக [8] வாழ்வோமாக.

பழந்தமிழ்

தொகு

அடியுறை = காலணி
அடையல் = மாலணி, செருப்பு
ஓவம் = ஓவியம்
ஞெகிழம் = சிலம்பு
நிழல்காண் மண்டிலம் = கண்ணாடி
பூ பெய் வட்டம் = பூக்கூடை
விரல் செறி தூம்பு = புல்லாங்குழல்
வெரிநம் தோல் = உடும்புத் தோல்

அடிக்குறிப்பு

தொகு
  1. பரிபாடல் 21
  2. பரிபாடல் 16
  3. பரிபாடல் 17,
  4. பரிபாடல் 18,
  5. பரிபாடல் 20
  6. எண்ணுவோம் - இந்த வேழ(யானை) தெவ்வானை. இதனைத் தெய்வயானை என ஆக்கிப் பிற்காலத்தில் கதை எழுதியுள்ளனர்.
  7. தொட்டது என்பதை இது இதனை உவமையால் தொட்டது என்று விளங்கிக்கொள்ள வேண்டும்.
  8. அடியுறை என்பது காலணி
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லச்சுதனார்&oldid=2715308" இலிருந்து மீள்விக்கப்பட்டது