நவோய் பிராந்தியம்
நவோய் பிராந்தியம் (Navoiy Region, உஸ்பெக் மொழி : Navoiy viloyati) என்பது உஸ்பெகிஸ்தானின் பிராந்தியங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மத்திய வடக்கு / வடமேற்கில் அமைந்துள்ளது. கிசில்கும் பாலைவனமானது இந்த பிரதேசத்தின் பெரும்பகுதியில் பரவியுள்ளது. இந்த பிராந்தியமானது உஸ்பெகிஸ்தான் பிராந்தியங்களில் மிகப்பெரியது (தன்னாட்சி கரகல்பகஸ்தான் குடியரசு இன்னும் பெரியதான 160,000 கிமீ 2 பரப்பளவு கொண்டது). நவோய் பிராந்தியத்தின் எல்லைகளைப் பகுதிகளாக கசக்கஸ்தான், சமர்காண்ட் பிராந்தியம், பக்சோரோ பிராந்தியம், ஜிசாக் பிராந்தியம், மற்றும் கரகல்பாக்ஸ்தான் குடியரசு போன்றவற்றைக் கொண்டுள்ளது. இந்த பிராந்தியமானது 110,800 கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது. மக்கள் தொகை சுமார் 932,793 (2008) என மதிப்பிடப்பட்டுள்ளது. பிராந்தியத்தி மக்களில் சுமார் 60% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இப்பிராந்தியத்துக்கு அலி-ஷிர் நவாய் என்பவரின் நினைவாக பெயரிடப்பட்டது.
நவோய் பகுதி எட்டு நிர்வாக மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன் தலைநகராக நவோய் (மக்கள் தொகை தோராயமாக 128,000) உள்ளது. பிராந்தியத்தில் உள்ள மற்ற நகரங்கள் கைசில்டெபா, நூராட்டா, உச்ச்குடுக், ஜராஃப்ஷன் மற்றும் யாங்கிராபாத் ஆகியவை ஆகும்.
இங்கு நிலவும் காலநிலை என்பது பொதுவாக அரை பாலைவன ஐரோப்பிய காலநிலை ஆகும் .
நவோய் பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க இயற்கை வளங்கள் உள்ளன. குறிப்பாக இயற்கை எரிவளி, பெட்ரோலியம் மற்றும் அரிய உலோகங்கள் மற்றும் கட்டுமானத்திற்கான மூலப்பொருட்கள் போன்றவை உள்ளன. பிராந்தியத்தின் பொருளாதாரம் பெருமளவில் சுரங்கத் தொழில், உலோகவியல் மற்றும் இரசாயன உற்பத்தி தொழிற்சாலைகளை பெரிதும் சார்ந்துள்ளது. நவோய் மற்றும் ஜராஃப்ஷன் சுரங்கங்கள் உலகின் தூய்மையான தங்கத்தை உற்பத்தி செய்கின்றன.
இங்கு விளையும் முதன்மை வேளாண் பொருட்களாக பருத்தி மற்றும் கரகுல் ஆடுகள் போன்றவை ஆகும். இப்பிராந்தியமானது போதுமான நீர்ப்பாசன வசதியைக் கொண்டுள்ளதால், முழுப் பகுதியில் சுமார் 90% நல்ல விவசாய நிலமாகக் கருதப்படுகிறது.
நிர்வாக பிரிவுகள்
தொகுவ.எண் | மாவட்ட பெயர் | மாவட்ட தலைநகரம் |
---|---|---|
1 | கனிமேக் மாவட்டம் | கனிமேக் |
2 | கிசில்டெபா மாவட்டம் | கிசில்டெபா |
3 | காதிர்ச்சி மாவட்டம் | யாங்கிராபாத் |
4 | நவ்பகோர் மாவட்டம் | பிஷ்ராபாத் |
5 | நவோய் மாவட்டம் | நவோய் |
6 | நூரட்டா மாவட்டம் | நூரட்டா |
7 | டாமி மாவட்டம் | Tடாமிபள்க் |
8 | உச்ச்குடுக் மாவட்டம் | உச்ச்குடுக் |
பொருளாதாரம்
தொகுநவோய் பிராந்தியம் உஸ்பெகிஸ்தானின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது, இது நாட்டின் மிகப்பெரிய தொழில்துறை மையங்களில் ஒன்றாகும். இப்பகுதியில் மதிப்புமிக்க தாதுக்கள் மற்றும் மூலப்பொருள் வளங்கள் உள்ளன - முருண்டவு தங்க வயல், சிலிக்கா மணல் வயல்கள் (1.5 பில்லியன் டன்களுக்கும் அதிகமானவை), கிரானைட் கற்கள் (1.9 பில்லியன் கன மீட்டர்), பளிங்கு (420 மில்லியன் கன மீட்டர்), பாஸ்போரைட்டுகள் (1.5 பில்லியன் டன்) மற்றும் பல உள்ளன.
நவோய் சுரங்க மற்றும் உலோகவியல் நிறுவனமானது - இப்பகுதியின் மிகப்பெரிய நிறுவனமாகும். இது யுரேனியம் மற்றும் தங்கத்தின் (9999 தரநிலை) முதல் பத்து பெரிய உலக உற்பத்தியாளர்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தயாரிக்கும் தங்கக் கம்பிகளுக்கு லண்டன் அரிய உலோக சந்தை மற்றும் டோக்கியோ பொருட்கள் பரிவர்த்தனையகம் ஆகியவற்றால் “உகந்த தங்க விநியோகர்” என்ற அந்தஸ்து வழங்கப்படுகிறது. சுரங்கத்துடன், பிராந்தியத்தின் பொருளாதாரம் கட்டுமான பொருட்கள், ரசாயன பொருட்கள், ஜவுளி மற்றும் உணவுத் தொழில்களின் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது.
நவோய் பிராந்தியத்தில் 40 வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் நிறுவப்பட்டுள்ளன - உஸ்பெக்-பிரித்தானிய கூட்டு முயற்சி “அமன்டாய்டவு-கோல்ட்ஃபீல்ட்ஸ்” இப்பகுதியில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.[1][2]