நாகப்பாம்பு விளைவு
ஒரு சிக்கலுக்கு வழங்கப்படும் தீர்வு அச்சிக்கலைத் தீர்ப்பதற்குப் பதில் அதனைத் தீவிரமடையச் செய்யுமெனில் அந்த விளைவு நாகப்பாம்பு விளைவு (Cobra effect) என அழைக்கப்படுகிறது. இது எதிர்பாராத விளைவு வகைகளுள் ஒன்றாகும். அரசியலிலும் பொருளியலிலும் தவறான தூண்டுகாரணங்களை சித்தரிக்க இப்பெயர் பயன்படுகிறது.[1][2]
இந்தியாவின் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்வே இப்பெயர் ஏற்படக் காரணமாகும். தலைநகர் தில்லியில் நச்சுள்ள நாகப்பாம்புகளின் எண்ணிக்கை கூடியதால் கவலை கொண்டது பிரித்தானிய அரசு. பாம்புகளைக் கொல்ல பொது மக்களை ஊக்குவித்தது. அப்படிக் கொல்லப்படும் பாம்புகளுக்காக அவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்றும் அறிவித்தது (எண்ணிக்கை அடிப்படையில்). முதலில் இந்தத் திட்டம் நல்ல பலனைத் தந்தது - வெகுமதிக்காக மக்கள் நிறைய நாகப்பாம்புகளைக் கொன்றனர். ஆனால் சில காலத்துக்குப்பின் குறைந்த உழைப்பில் நிறைய வெகுமதி பெறுவதற்காக சிலர் நாகப்பாம்புகளை வளர்க்கத் தொடங்கினர். இது அரசுக்குத் தெரியவந்தவுடன் தன் வெகுமதித் திட்டத்தை நிறுத்திக் கொண்டது. வெகுமதி கிடைக்காததால் பாம்புகளை வளர்த்தவர்களே அவற்றைத் தப்பிக்க விட்டனர். இவ்வாறு பாம்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க அரசு கையெடுத்த தீர்வினால் அவற்றின் எண்ணிக்கை கூடியது. இத்தகைய பிற தீர்வுகளுக்கும் “நாகப்பாம்பு விளைவு” என்ற பெயர் ஏற்பட்டது.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Brickman, Leslie H. (2002-11-01). Preparing the 21st Century Church. பக். 326. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59160-167-8. http://books.google.com/?id=R6ocCjZIrrUC.
- ↑ Siebert, Horst (2001). Der Kobra-Effekt. Wie man Irrwege der Wirtschaftspolitik vermeidet. Munich: Deutsche Verlags-Anstalt. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-421-05562-9. (செருமன் மொழி)
- ↑ Dubner, Stephen J. (10 October 2012), "The Cobra Effect", Freakonomics Radio, American Public Media
- ↑ Schwarz, Christian A. (1996). NCD Implementation Guide. Carol Stream Church Smart Resources. p. 126. Cited in Brickman, p. 326.