நார்வீஜிய கனநீர் நாசவேலை
நார்வீஜிய கனநீர் நாசவேலை (Norwegian heavy water sabotage) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நார்வே நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கன நீர், ஜெர்மானிய அணு ஆற்றல் திட்டத்துக்குப் பயன்படுவதைத் தடுக்க நார்வீஜிய எதிர்ப்பு படையின் நாச வேலைக்காரர்கள் மேற்கொண்ட தொடர் முயற்சிகளைக் குறிக்கிறது.
ஜூன் 9, 1940ல் நார்வே நாசி ஜெர்மனியிடம் சரணடைந்தது. 1934ல் கட்டப்பட்ட நார்வேயின் வெமோர்க் நீர்மின்நிலையம் உலகில் வர்த்தக ரீதியாக கன நீர் உற்பத்தி செய்யும் முதல் ஆலையாக இருந்தது. இங்கு உர உற்பத்தியின் பக்க விளைபொருளாக ஆண்டுக்கு 12 டன் கன நீர் தயாரிக்கப்பட்டு வந்தது. அணுகுண்டு உருவாக்கத்தில் கன நீரைப் பயன்படுத்த இயலும் என்பதை உணர்ந்த நேச நாட்டு உத்தியாளர்கள், வெமோர்க் ஆலை கன நீர் உற்பத்தி ஜெர்மானியர் கைகளில் சிக்காத வண்ணம் முயற்சிகளை மேற்கொண்டனர். ஜெர்மனி நார்வே மீது போர் தொடுக்கும் முன்பே பல ஆண்டுகளாக உற்பத்தி செய்து சேமித்து வைக்கபப்ட்டிருந்த 185 கிலோ எடையுள்ள கன நீரை, பிரெஞ்சு உளவு நிறுவனமான இரண்டாவது பிரிவு (Deuxième Bureau) வெமோர்க்கிலிருந்து அப்புறப்படுத்தியது. அப்போது நார்வே நடுநிலை நாடாக இருந்தாலும், கனநீர் ஜெர்மானியர்கள் வசம் சிக்காமல் இருக்க நேச நாடுகளுக்கு உதவியது. ஆனால் வெமோர்க் நீர்மின் நிலையத்தில் தொடர்ந்து கனநீர் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
நார்வே ஜெர்மானிய ஆக்கிரமிப்பின் கீழ் வந்த பின்னர், நேச நாட்டு அதிரடிப் படைகளும், நார்வீஜிய எதிர்ப்புப் படையினரும் வெமோர்க் கனநீர் ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்படாமல் இருக்க தொடர்ந்து நாச வேலைகளில் ஈடுபட்டனர். 1942லும் 1943லும் வான்வழியாக வான்குடை வீரர்களைத் தரையிறக்கி வேர்மோர்க் ஆலையைத் தாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குரவுசு மற்றும் ஃபிரெஷ்மென் நடவடிக்கைகள் என குறிப்பெயரிடப்பட்டிருந்த இந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. பெப்ரவரி 1943ல் மூன்றாவதாக மேற்கொள்ளபப்ட்ட கன்னர்சைட் நடவடிக்கை வெற்றியடைந்தது. இதில் அதுவரை உற்பத்தி செய்யப்பட்டிருந்த 500 கிலோ எடையுள்ள கன நீரும், கன நீர் உற்பத்திக்கு இன்றியமையாத மின்பகுப்பு கருவிகளும் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்டன. இதனால் பல மாதங்களுக்கு கன நீர் உற்பத்தி தடைபட்டது. நவம்பர் 1943ல் உற்பத்தி மீண்டும் தொடங்கிய பின்னர் பிரித்தானிய வேந்திய வான்படை வெமோர்க் ஆலையைத் தாக்கியது. 143 பி-17 ரக குண்டுவீசி வானூர்திகள் பங்குபெற்ற இத்தாக்குதலில் வெமோர்க் ஆலைக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் வெமோர்க்கைக் காலி செய்து அதுவரை உற்பத்தி செய்யப்பட்ட கன நீரையும், உற்பத்தி எந்திரங்களையும் ஜெர்மனிக்குக் கொண்டு செல்ல ஜெர்மானியர்கள் முடிவு செய்தனர். அவை டின்சுயூ (Tinnsjø) ஏரியைக் கடக்கையில், பெப்ரவரி 20, 1944 அன்று அவற்றை ஏற்றிச் சென்ற படகை நார்வீஜிய எதிர்ப்புப் படையினர் குண்டு வைத்துத் தகர்த்தனர். இதனால் ஜெர்மானிய அணு ஆற்றல் திட்டத்துக்கு நார்வீஜிய கன நீர் பயன்படாது போனது.