நாவேந்தன்

நாவேந்தன் (திசம்பர் 14, 1932 - சூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது.[1]

நாவேந்தன்
Navethan.jpg
பிறப்புதிசம்பர் 14, 1932(1932-12-14)
புங்குடுதீவு
இறப்புசூலை 10, 2000(2000-07-10) (அகவை 67)
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

வாழ்க்கைக் குறிப்புதொகு

நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில் உயர்ந்தவர். அரசியல் அரங்கிலும் இலக்கிய உலகிலும் தனக்கெனத் தனியான தமிழ் நடையைக் கொண்டிருந்தார்.

எழுத்துத் துறையில்தொகு

தமது பதினைந்தாவது வயதில் இந்து சாதனம் மூலம் எழுத்துத்துறையில் புகுந்த நாவேந்தன் தமிழ்க் குரல், சங்கப்பலகை, நாவேந்தன், நம்நாடு ஆகிய இதழ்களை நடத்தினார். ஆம்பலூர் அருணகிரிதாசர், பண்டிதர் பரசுராமமூர்த்தி, காண்டீபன், நக்கீரன், தீப்பொறி, ததீஜி ஆகிய பல புனைப்பெயர்களில் விமர்சனங்களை எழுதியுள்ளார்.[1]

தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, விவேகி, கலைச் செல்வி, உதயன், உதயதாரகை ஆகிய இதழ்களில் இவரது சிறுகதைகள் பல வெளிவந்தன. எனினும் சுதந்திரனிலேயே அதிகமான சிறுகதைகளையும் நாடகங்களையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். தமிழகத்திலிருந்து வெளியான தென்றல், உமா, கலைமன்றம், அறப்போர், தென்றல்திரை, சாட்டை, மணிமொழி ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியிட்டுள்ளன. தமது இறுதிக்காலத்தில் இவர் எழுதிய "மரியாள் மகதலேனா" என்னும் குறுங்காவியத்தை தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாணம் அத்தியட்சாதீனம் வெளியிட்டது.

சமுதாய அவலங்களை சாதாரண மக்களின் பிரச்சினைகளை மூடத்தனங்களை தீண்டாமையைக் கருப்பொருளாகக் கொண்டு சிறுகதைகள் படைத்தார். இவர் அநேக கட்டுரை நூல்களையும் நாடகங்களையும் எழுதியுள்ளார்.

அரசியல் பணிதொகு

யாழ்ப்பாணம் மாநகரசபையின் பிரதி மேயராகவும் பதவிவகித்தவர் நாவேந்தன். இலங்கை தமிழரசுக் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றியவர். சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்திலீடுபட்டு ஒருவார காலச் சிறைத் தண்டனையையும் அனுபவித்தவர். சிறையிலிருந்து வெளிவந்ததும் அவர் எழுதி வெளியிட்ட "சிறீ அளித்த சிறை" என்னும் நூல் அரசியல் தலைவர்கள் பலரதும் பாராட்டுக்குள்ளானது.[1]

நினைவு விருதுதொகு

யாழ். இலக்கிய வட்டம் நாவேந்தன் நினைவாக ஆண்டு தோறும் ஈழத்தில் வெளியாகும் சிறுகதைத் தொகுதிகளுக்குள் சிறந்ததெனத் தெரிவு செய்யப்படும் சிறுகதைத் தொகுதிக்கு நாவேந்தன் விருதினை வழங்கிவருகிறது.

வெளிவந்த நூல்கள்தொகு

சிறுகதைத் தொகுதிகள்தொகு

 • வாழ்வு
 • தெய்வ மகன்

வாழ்வு சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினையும் (1964) பெற்றது.

குறுங்காவியம்தொகு

 • மரியாள் மகதலேனா

கட்டுரை நூல்கள்தொகு

 • மானவீரன் கும்பகர்ணன்
 • சிலப்பதிகாரச் செந்நெறி
 • நான் ஒரு பிச்சைக்காரன்
 • தலைவர் வன்னியசிங்கம்
 • ஜோண் கஸ்டர்

நாடகங்கள்தொகு

 • பெருநெருப்பு
 • மண்டோதரி
 • தாரை

வேறுதொகு

 • சிறீ அளித்த சிறை

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாவேந்தன்&oldid=2997717" இருந்து மீள்விக்கப்பட்டது