நினைவி
நினைவி அல்லது நினைவிக்கருவி (Mnemonic) எனப்படுவது கற்கும் விடயங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளப் பயன்படுத்தப்படும் ஒரு கற்றல் உத்தியாகும். நினைவி என்பது நினைவாற்றலை மேம்படுத்துவதற்காக, மனனம் செய்வதை இலகுவாக்குவதற்கு நீண்ட கால நினைவுகளில் ஏற்கனவே சேகரிக்கப்பட்டிருக்கும் தகவல்களைப் பயன்படுத்த உதவும் சில சிறப்பான உத்திகளாகும்[1].
இவை வாய்மொழியாகவோ, எழுத்து வடிவிலோ, பார்க்கக்கூடிய படங்களாகவோ, கேட்கக்கூடிய ஒலி வடிவிலோ அமைந்திருக்கலாம். நினைவில் கொள்ள கடினமான சில தகவல்களை, குறிப்பாக பட்டியல்களை இலகுவில் நினைவில் நிறுத்திக் கொள்ள இந்த கற்றல் உத்தி உதவும். மனித மனமானது எழுந்தமானமான விடயங்களை நினைவில் கொள்வதைவிட அறிந்த, பழகிய, நகைச்சுவையான, தனக்குரிய, பாலியல்சார்ந்த, இடம்சார்ந்த விடயங்களையும் அர்த்தமுள்ள செய்திகளையும் மிக இலகுவாக நினைவில் கொள்ளக் கூடிய ஆற்றல் உள்ளமையால் இந்த கற்றல் உத்தி பயன்படுகின்றது.
நினைவாற்றல் எனப்படும்போது அது இரு வகைப்படும். ஒன்று இயற்கையான நினைவாற்றல், அடுத்தது செயற்கையான நினைவாற்றல். இதில் முதலாவது பிறக்கும்போதே ஒருவரிடம் இருக்கக்கூடிய நினைவாற்றல். இரண்டாவது வகையான செயற்கையான நினைவாற்றல் என்பது கற்றல், பயிற்சி செய்தல் போன்றவற்றால் சேர்த்துக் கொள்ளக்கூடிய நினைவாற்றல். எவருக்கும் இருக்கும் இயற்கையான நினைவாற்றல் மட்டும், அவரது அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளப் போதுமானதாக இருப்பதில்லை. எனவே செயற்கையான நினைவூட்டல் அவசியமாகின்றது. இத்தகைய தேவையை இலகுவாக நிறைவேற்ற 'நினைவி' பயன்படும்.
முதலெழுத்துப் புதிர் என்பது மிகவும் பொதுவாகப் பயன்படும் ஒரு நினைவியாகும். இதன்மூலம் ஒரு பட்டியலிலுள்ள விடயங்களை நினைவில் கொள்ள, அவற்றின் முதலெழுத்து அல்லது முதலெழுத்துக்கள், அல்லது முதல் சொல் பயன்படும்.
எடுத்துக்காட்டுகள்
தொகுகிட்டக் குழி தோண்டி தூரக் குவி - கிட்டப் பார்வைக்கு குழிவில்லையும் தூரப்பார்வைக்கு குவிவில்லையும் பயன்படுத்த வேண்டும்.
முருக்கு தின்றால் இன்பம் வருமே காளி - ஐவகை நிலங்களுக்குரிய கடவுளின் பெயர்கள் குறிஞ்சி - மு - முருகன் முல்லை - தி - திருமால் மருதம்- இ - இந்திரன் நெய்தல் - வ- வருணன் பாலை - காளி (அ) கொற்றவை
மேற்கோள்கள்
தொகு- ↑ Carlson, Neil and et al. "Psychology the Science of Bahaviour", p. 245. Pearson Canada, United States of America. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-205-64524-4.