நிலையில்லாப் புகழ் - இந்தியாவும் அதனுடைய முரண்பாடுகளும் (நூல்)
நிலையில்லாப் புகழ் - இந்தியாவும் அதனுடைய முரண்பாடுகளும் (Uncertain Glory: India and its Contradictions) அமர்த்தியா சென், ஜீன் ட்ரஸ் ஆகிய இருவராலும் எழுதப்பட்ட 433 பக்கங்களைக் கொண்ட ஆங்கில நூல் .[1]இந்நூலில் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்தும் இந்திய அரசு கடைபிடித்து வரும் பொருளாதார கொள்கை, குறிப்பாக 1991லிருந்து அமலாக்கப்பட்டு வரும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை குறித்தும் விமர்சனப் பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.கடந்த 20 ஆண்டுகளில்(1991-2011) இந்தியாவை விட பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ள பல நாடுகளை இந்திய வளர்ச்சியுடன் ஒப்பிட்டு ஏன் சமூக நல குறியீடுகளில் இந்தியாவில் வளர்ச்சியில்லை என்பதை ஆய்வு செய்திருக்கிறார்கள்.[2]
கல்வி
தொகு"வறுமை என்ற துயரத்தின் கோபுரம் இந்தியாவின் இருதயத்தை அழுத்திக் கொண்டிருப்பதற்கு அடிப்படைக் காரணம் கல்லாமை என்றே நான் கருதுகிறேன்" என சோவியத் யூனியனுக்கு சென்று வந்த பிறகு மகாகவி தாகூர் கல்வி பற்றி மேற்கண்டவாறு கூறியுள்ளதை நூலாசிரியர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.12 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் உயர்கல்வியிலும் பள்ளிக் கல்வியிலும் அரசு மற்றும் தனியார் கூட்டுமுயற்சி தேவை என்ற கொள்கையை மத்திய அரசு முன்வைத்துள்ளது. நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அமலாக்கம் தொடங்கிய பிறகு உயர்கல்வியில் நாடு முழுவதும் சுயநிதி கல்வி நிலையங்களும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் உருவாகியுள்ளன. இத்தகைய கல்வி நிலையங்களில் நகர்ப்புற, கிராமப்புற ஏழை குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் சேர இயலாது. நடுத்தர மக்கள் பகுதியில் கூட உயர் நடுத்தர பகுதியினரே லட்சக் கணக்கில் செலவு செய்து தங்கள் பிள்ளைகளை சுயநிதி கல்வி நிலையங்களில் சேர்க்க முடியும்.இந்தியாவில் சாதிய ரீதியிலும், மத ரீதியிலும், பாலின ரீதியிலும் உயர்கல்வி பெறும் வாய்ப்பில் பெரும் ஏற்றத் தாழ்வு நீடிக்கிறது. பழங்குடி மக்களும் பின்தங்கியுள்ளனர், இத்தகைய ஏற்றத்தாழ்வை போக்காத வரையில், ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு அவர்கள் படிக்க விரும்புகிற வேலைவாய்ப்புள்ள உயர் கல்வி கிடைக்காது. இதன் விளைவாக சமூகவள மேம்பாட்டில் இந்தியா மற்ற ஏழை நாடுகளை விடவும் பின்தங்கியே இருக்கும்.கல்வி அளிக்கும் பொறுப்பை (பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி) அரசு தனியாருக்கு விடுவது கல்வித்துறையில் மேம்பாடு அடைய உதவாது என்பதை நூலாசிரியர்கள் அழுத்தமாக வலியுறுத்துகிறார்கள். [2]
சுகாதாரம்
தொகுசுகாதார வசதி இந்தியாவில் பெருமளவிற்கு தனியார்மயமாக்கப்பட்டுவிட்டது என நூலாசிரி யர்கள் ஆதாரத்துடன் விளக்குகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் சுகாதாரத்திற்கு ஆகும் செலவில் அரசின் பங்கு 70-85 சதவிகிதம், அமெரிக்காவில் 50 சதவிகிதம், உலக சராசரி 63 சதவிகிதம். ஆனால் இந்தியாவில் அரசின் பங்கு 29 சதவிகிதம் மட்டுமே. [2]
நாடுகள் | சுகாதாரத்திற்கு அரசின் மொத்த பங்கு |
---|---|
இந்தியா | 29 |
தெற்காசியா | 30 |
சகாரா பாலைவனத்திற்கு தெற்கே உள்ள நாடுகள் | 45 |
கிழக்காசியா பசிபிக் | 53 |
மத்திய கிழக்கு வட ஆப்பிரிக்கா | 50 |
லத்தீன் அமெரிக்கா கரீபியன் | 50 |
ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா | 65 |
உலக சராசரி | 63 |
ஐரோப்பிய யூனியன் | 77 |
வறுமை ஒழிப்பு
தொகுஅத்தியாயம் 7 வறுமை ஒழிப்பு பற்றி விளக்குகிறது. இந்தியாவில் அமலாக்கப்பட்டு வரும் பொதுவிநியோகமுறைத் திட்டத்தை மேலும் பலப்படுத்திட வேண்டுமென்று நூலாசிரியர்கள் வாதிடுகின்றனர். வறுமைக்கோட்டு எல்லைக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதிலும் சரியான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டுமெனக் குறிப்பிடுகிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைப் (நூல் வெளியாகிற போது மசோதா வடிவத்தில் இருந்தது) பற்றியும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.பொதுவிநியோக முறையில் நேரடி பணப்பட்டுவாடா முறை கூடாது என்றும் இதற்கு மாறாக, ஏற்கனவே அமலில் உள்ள பொது விநியோக முறையை பலப்படுத்திட வேண்டும் என்கிறார்கள். [2]
மையப் பொருள்
தொகுமலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் போல் இந்தியாவில் பொருளாதார ஏற்றத் தாழ்வு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி இத்தகைய ஏற்றத்தாழ்வே, ஏற்றத்தாழ்வு தொடர்ந்து நீடிப்பதற்கு காரணமாகிவிடும் என சுட்டிக் காட்டுகிறார்கள். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "An Uncertain Glory: India and its Contradictions, by Jean Drèze and Amartya Sen, review". Telegraph. 01 Aug 2013. பார்க்கப்பட்ட நாள் 19 அக்டோபர் 2013.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "நிலையில்லா புகழ் - இந்தியாவும் அதனுடைய முரண்பாடுகளும்". மார்க்சிஸ்ட். 10 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 அக்டோபர் 2013.[தொடர்பிழந்த இணைப்பு]