நீதிமொழிகள் (நூல்)
நீதிமொழிகள் (Book of Proverbs) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.[1][2][3]
நீதிமொழிகள் நூல் பெயர்
தொகுநீதிமொழிகள் என்னும் நூல் ஒழுக்கத்தையும் சமயத்தையும் சார்ந்த போதனைகளின் தொகுப்பாகும். எபிரேய மூல மொழியில் இந்நூல் מִשְלֵי = Mishlay, அதாவது "அறவுரைகள்" என அறியப்படுகிறது. கிரேக்க மொழிபெயர்ப்பில் παροιμίαι (paroimiai) என்றும், இலத்தீன் மொழிபெயர்ப்பில் "proverbia" என்றும் இந்நூல் பெயர் பெறுகிறது. பழைய தமிழ் மொழிபெயர்ப்பு "பழமொழி ஆகமம்" என்றிருந்தது.
நீதிமொழிகள் நூலின் உள்ளடக்கம்
தொகுநீதிமொழிகள் நூலில் அடங்கியுள்ள போதனைத் தொகுப்பு சொற்கோவை, பழமொழி ஆகிய வடிவங்களில் காணப்படுகின்றது. இப்போதனைகளுள் பெரும்பாலானவை அன்றாட வாழ்வையும் நடைமுறை வழக்கையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன.
இந்நூல் "ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்" (நீமொ 1:7) எனத் தொடங்கி, சமய ஒழுக்கம் பற்றியும் நல்லறிவு, நன்னடத்தை ஆகியவை பற்றியும் விளக்கிக் கூறுகின்றது.
இங்குக் காணப்படும் சொற்கோவைகள் பண்டைய இசுரயேலின் ஞானிகளுடைய அனுபவமிக்க அறிவுரைகளாக அமைந்துள்ளன. மேலும் குடும்ப உறவுகள், பொருளீட்டு முயற்சிகள், சமூக உறவுகள், நன்னடத்தை, தற்கட்டுப்பாடு ஆகிய முறைமைகள் பற்றியும், மனத்தாழ்வு, பொறுமை, ஏழையர்பால் அன்பு, மாறாத நட்பு ஆகிய பண்புகள் பற்றியும் இந்நூல் விரித்துரைக்கின்றது.
நூல் தொகுக்கப்பட்ட காலம்
தொகுநீதிமொழிகள் நூலின் ஆசிரியர் சாலமோன் அரசர் (ஆட்சிக்காலம்: கி.மு. சுமார் 962இலிருந்து 922 வரை) என்பது மரபுவழிச் செய்தி. நூலின் தொடக்கத்தில் இது குறிக்கப்படுகிறது. "தாவீதின் மகனும் இசுரயேலின் அரசனுமாகிய சாலமோனின் நீதிமொழிகள்" (நீமொ 1:1) என்றே இந்நூல் தொடங்குகிறது. சாலமோன் ஞானம் மிகுந்தவர் என்னும் செய்தி விவிலியத்தில் பல இடங்களின் உண்டு.
ஆக, சாலமோன் அரசரோ அல்லது அவரது காலத்தில் வேறு ஒருசிலரோ நீதிமொழிகள் பலவற்றை உருவாக்கியிருக்கலாம் அல்லது தொகுத்திருக்கலாம். ஆனால், பிற்கால ஆசிரியர்களின் தாக்கமும் அங்கிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
எனவே, நீதிமொழிகள் நூலின் பெரும்பகுதி சாலமோன் காலத்தில் எழுந்தது; நீதிமொழிகளின் ஒரு பகுதியாவது கி.மு 8ஆம் நூற்றாண்டளவில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். கி.மு. 5ஆம் நூற்றாண்டு வரை வாய்மொழியாக மக்களிடையே நிலவிய நீதிமொழிகள் பின்னர் கி.மு 3ஆம் நூற்றாண்டளவில் தற்போதுள்ள நூலாகத் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்பது அறிஞர் கருத்து.
நீதிமொழிகள் நூலின் சிந்தனைப் பாணி
தொகுநூல் முழுவதிலும் ஞானமுள்ளோருக்கும் அறிவிலிகளுக்கும் ("மூடர்") இடையே உள்ள வேறுபாடு சுட்டிக்காட்டப்படுகிறது. ஞானமுள்ளோர் நேர்மையானவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இந்நூலின் முதல் ஒன்பது அதிகாரங்கள் தீமையினின்றும் குறிப்பாகக் காமத்தினின்றும் விலகும்படி எச்சரிக்கின்றன. அவை பிறரைக் கொன்று பொருளைக் கவரும் திருடர் கூட்டத்தில் சேராமலும் விலைமகளிரை நாடி செல்வத்தையும் பிறரின் நன்மதிப்பையும் இழக்காமலும், தீமையைவிட்டு விலகித் தீயோரின் உறவை விட்டு நன்னெறியில் செல்லுமாறும் கற்பிக்கின்றன. பெற்றோரின் அறிவுரைக்குச் செவிமடுத்து வாழ்தல், சோம்பலை விலக்குதல், எறும்பு போல ஊக்கத்தோடு உழைத்து உண்ணுதல் போன்ற அறிவுரைகள் இப்பகுதியில் உள்ளன. ஞானம் இங்கே ஒரு பெண்ணாக உருவகிக்கப்படுகிறது.
பத்தாம் அதிகாரத்திலிருந்து 29ஆம் அதிகாரம் முடிய உள்ள பகுதி "சாலமோனின் நீதிமொழிகள்" என்னும் தலைப்பின் கீழ் உள்ளது. இங்கே ஞானமுள்ளோர் (மெய்யறிவு உள்ளோர், நேர்மையானவர்கள், நல்லார்) எத்தகைய நற்பண்புகளைக் கொண்டிருப்பர் என்றும் அறிவிலிகள் (பொல்லார், மூடர், மதிகெட்டவர், மடையர், பேதையர்) எத்தகைய தீயகுணமுடையவராயிருப்பர் என்றும் பழமொழிப் பாணியில் அரிய அறிவுரைகள் உள்ளன.
வள்ளுவர் கூறும் சான்றோர் என்னும் கருத்து விவிலிய நூலில் வரும் ஞானமுள்ளோருக்கு (நேர்மையானவர்களுக்கு) ஒத்திருப்பதை இவண் சுட்டிக்காட்டலாம்.
நூலின் இறுதி இரண்டு அதிகாரங்களிலும் ஆகூர், இலமுவேல் ஆகியோர் தந்த அறிவுரைத் தொகுப்பு உள்ளது.
திருக்குறளும் நீதிமொழிகள் நூலும்: ஓர் ஒப்பீடு
தொகுதிருக்குறளுக்கும் நீதிமொழிகள் நூலுக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஞானம் என்பது நீதிமொழிகள் நூலில் மைய இடம் பெறுகிறது. வள்ளுவர் அதனை அறிவு என்பார். அறிவுடைமை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் அமைத்துள்ள பத்து குறள்களும் அறிவு என்றால் என்னவென்பதை விளக்குகின்றன. சில எடுத்துக்காட்டுகள்:
- 1) எவ்வ(து) உறைவ(து) உலகம் உலகத்தோ(டு)
- அவ்வ(து) உறைவ தறிவு (குறள் 426)
(பொருள்: உலகில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை எவ்வகையில் உள்ளதோ, அவ்வகையில் மக்களோடு இணைந்து ஒன்றுபட வாழ்வதே உண்மை அறிவாகும்).
மேலும்,
- 2) சென்ற இடத்தால் செலவிடா தீதொரீ
- நன்றின்பால் உய்ப்ப(து) அறிவு (குறள் 422)
(பொருள்: மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே உண்மை அறிவாகும்).
திருக்குறளுக்கு உரைவகுத்த பரிமேலழகர் அறத்துப்பாலின் இறுதியில் வருகின்ற "நிலையாமை", "துறவு", "மெய்யுணர்தல்", "அவாவறுத்தல்" என்னும் நான்கு அதிகாரங்களின் உள்ளடக்கத்தையும் ஞானம் என்று குறிப்பிட்டார். "ஞானமாவது வீடு பயக்கும் உணர்வு" என்பது பரிமேலழகர் கூற்று. நீதிமொழிகள் நூலும் திருக்குறளும் ஞானம் (அறிவு, மெய்யறிவு, மெய்யுணர்வு) பற்றிக் கூறுவனவற்றில் பல ஒற்றுமைகள் இருப்பதைக் கீழ்வரும் அடைவு தெளிவாகக் காட்டுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ de Almeida, João Ferreira, ed. (1974), "Os provérbios", A Bíblia sagrada (Versão revisada de acordo com os melhores textos em hebraico e grego ed.), Rio de Janeiro: Imprensa bíblica brasileira, Junta de educação religiosa, Convenção batista brasileira, xxii:17,
Breves discursos morais do sábio acerca de vários assuntos
. - ↑ Proverbs 24:23: New King James Version
- ↑ See Proverbs 31:1, various translations, Biblehub.com
விவிலியம்: நீதிமொழிகள் நூல் பாடம் | இணையான திருக்குறள் எடுத்துக்காட்டு |
---|---|
"தீய வழியில் ஈட்டிய செல்வம் பயன் தராது" (10:2அ) | சலத்தால் பொருள்செய்துஏம் ஆர்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்துஇரீயி யற்று (660) |
"வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும்;
விடாமுயற்சியுடையோரின் கையோ செல்வத்தை உண்டாக்கும்" (10:4) |
மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள் (617) |
"ஈகைக் குணமுள்ளோர் வளம்பட வாழ்வர்;
குடிநீர் கொடுப்போர் குடிநீர் பெறுவர்" (11:25) |
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள (527) |
"ஊக்கமுடையோரின் கை ஆட்சி செய்யும்;
சோம்பேறிகளோ அடிமை வேலை செய்வர்" (12:24) |
மடிமை குடிமைக்கண் தங்கின் தன்ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும் (608) |
"ஞானமுள்ளவர்களோடு உறவாடுகிறவர் ஞானமுள்ளவராவார்;
மூடரோடு நட்புக்கொள்கிறவர் துன்புறுவார்" (13:20) |
நிலத்தியல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பது ஆகும் அறிவு (452) |
"ஓர் ஏழையை அடுத்திருப்போர் அவரை அருவருப்பானவர் எனக் கருதுவர்;
செல்வருக்கோ நண்பர் பலர் இருப்பர்" (14:20) |
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு (752) |
"மேன்மை அடையத் தாழ்மையே வழி" (14:33ஆ) | பணியுமாம் என்றும் பெருமை... (978) |
"பொன்னைவிட ஞானத்தைப் பெறுவதே மேல்;
வெள்ளியைவிட உணர்வைப் பெறுவதே மேல் (16:16) |
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்ற பிற (400) |
"வஞ்சக நாவுள்ளவர் தீமையில் சிக்குவார்" (17:20ஆ) | யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127) |
"கேடு வருவிக்கும் நண்பர்களுமுண்டு;
உடன் பிறந்தாரைவிட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமுண்டு" (18:24) |
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு (786) |
"நேர்மையான பிள்ளையின் தந்தை மிகவும் களிகூர்வார்;
ஞானமுள்ள பிள்ளையைப் பெற்ற தகப்பன் |
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன்எனக் கேட்ட தாய் (69) |
"முறைகேடாய் நடக்கும் செல்வரைவிட,
மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்" (28:6) |
நல்லார்கண் பட்ட வறுமையும் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு (408) |
நீதிமொழிகள் நூலின் உட்பிரிவுகள்
தொகுபொருளடக்கம் | அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1) ஞானம் பற்றிய புகழுரை | 1:1 - 9:18 | 941 - 950 |
2) சாலமோனின் நீதிமொழிகள் | 10:1 - 29:27 | 950 - 974 |
3) ஆகூரின் மொழிகள் | 30:1-33 | 974 - 976 |
4) பல்வேறு சொற்கோவைகள் | 31:1-31 | 976 -977 |