நீரடைப்பான்
குழாய் பொருத்துதலில், நீரடைப்பான் (trap) என்பது, கழுவு கிண்ணம், கழிப்பறைக் கிண்ணம், குளியல் தொட்டி போன்றவற்றுக்கும் கழிவுநீர்க் குழாய்களுக்கும் இடையில் பொருத்தப்படும் ஒன்றாகும். இது கழிவகற்றும் தொகுதிகளில் உருவாகும் கூடா வளிமங்கள் கழிவுக் குளாய்களினூடாகக் கட்டிடங்களுக்குள் வருவதைத் தடுக்கிறது.
நீரடைப்பானின் வடிவங்கள்
தொகுஇது பொதுவாக "S", "U" அல்லது "J" வடிவில் வளைக்கப்பட்ட ஒரு குழாய் வடிவில் இருக்கும். "S" நீரடைப்பான் 1775 ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் கம்மிங்சு என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 1880 ஆம் ஆண்டில் தாமசு கிரேப்பர் என்பவர் "U" நீரடைப்பானைக் கண்டுபிடித்தார். பொதுவாக "U" நீரடைப்பான் "S" நீரடைப்பானைப்போல் அடைத்துக்கொள்ளாது. இதனால் முன்னையதற்குத் தேவைப்பட்டது போல் "U" நீரடைப்பானுக்கு நீர்வழிவுவழி தேவைப்படுவதில்லை.
அடைப்பு ஏற்படுத்துவதைத் தடுப்பதற்கு
தொகுஇவற்றின் வடிவ அமைப்பினால், இவை பயன்படுத்தப்பட்ட பின்னர் ஓரளவு நீரை வடியவிடாமல் பிடித்து வைத்துக் கொள்கின்றன. இந்த நீர் குழாய் வழியை மூடி இருப்பதனால், கழிவுத் தொகுதியிலிருந்து வளிமங்கள் குளாயினூடாக வருவது தடுக்கப்படுகிறது. அத்துடன் கழிவுநீர்த் துளைகளினூடாக விழுந்து விடக்கூடிய சிறிய பாரமான பொருட்கள் (மோதிரம் போன்றவை), தலைமுடி, மணல் போன்ற பொருட்கள் கழிவு நீர்த் தொகுதிக்குள் செல்லாமல் நீரடைப்பானின் அடிப்பகுதிக்குள் தங்கி விடுகின்றன. இவ்வாறு விழுந்துவிடும் பெறுமதியான பொருட்களை எடுப்பதற்கும், முக்கியமாக விழும் பிற பொருட்கள் சேர்ந்து நாளடைவில் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்துவதைத் தடுப்பதற்கும், நீரடைப்பான்களின் அடிப்பாகத்தில் திறக்கக்கூடிய ஒரு துளை இருக்கும். இதைத் திறந்து நீரடைப்பானுள் அடைந்து கிடக்கும் பொருள்களை அகற்றி அதனைத் துப்புரவு செய்யலாம்.