கழுவு கிண்ணம்

கழுவு கிண்ணம் (Wash basin) என்பது, முகம், கை போன்றவற்றையும், பிற சிறிய பொருட்களையும் கழுவுவதற்காக கிண்ணத்தின் வடிவில் அமைந்த ஒன்றாகும். கழிப்பறைகள், சாப்பாட்டறைகள் போன்ற இடங்களில் இவை பொருத்தப்படுகின்றன. கழுவு கிண்ணங்களில் நீர்வாய்கள் பொருத்தப்பட்டிருப்பது வழக்கம். நீர்வாய்கள் பொருத்தப்பட்ட கிண்ணங்களில் குறைந்தது ஒரு குழாயாவது பொருத்தப்படும். இதில் அறை வெப்பநிலையில் உள்ள நீர் வழங்கப்படும். சுடுநீர் வசதிகள் உள்ள இடங்களில் சூடானதும், குளிர்ந்ததுமான நீரை வழங்குவதற்காக இரண்டு நீர்வாய்கள் அல்லது கலப்பானுடன் கூடிய ஒரு நீர்வாயோ இருக்கும்.

பொதுவாகக் காணும் கழுவு கிண்ணம்.

கழுவும்போது வெளியேறும் கழிவுநீரை அகற்றுவதற்கான துளை கிண்ணத்தின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும். இத்துளைகளுடன் பொருத்தப்பட்ட குழாய்கள் மூலம் கழிவுநீர் வெளியேற்றப்படுகின்றது. இக் குழாய்கள் இணைக்கப்படும் கழிவு நீர்த் தொகுதிகளில் இருந்து தீமை விளைவிக்கக்கூடிய வளிமங்கள் அல்லது, கூடா நாற்றம் கொண்ட வளிமங்கள் திரும்பவும் கழுவுகிண்ணத்தின் துளையூடாக உள்ளே வராமல் இருப்பதற்காக கிண்ணத்தின் கழிவகற்றும் துளைக்கும், கழிவகற்று குழாய்க்கும் இடையில் நீரடைப்பான் (trap) என்னும் ஓர் அமைப்பும் பொருத்தப்படுவது வழக்கம். ஏதோவொரு காரணத்தால் கழிவுநீர்க் குழாயில் அடைப்பு ஏற்படும்போது நீர் கிண்ணத்துள் நிரம்பி அறைகளுக்குள் வழியாமல் இருப்பதற்காகக் கிண்ணத்தின் உள் விளிம்பிற்குச் சற்றுக் கீழே வழிவுநீரை வெளியேற்றும் துளை இருக்கும்.

செய்பொருட்கள்

தொகு
 
கழுவு கிண்ணங்கள் பல நிறங்களில் கிடைக்கின்றன
 
ஒரே நேரத்தில் பலர் பயன்படுத்தக்கூடிய கழுவு கிண்ணம்.

கழுவு கிண்ணங்கள் பல வகையான செய்பொருட்களால் ஆக்கப்படுகின்றன. தற்காலத்தில் இவை பெரும்பாலும் வெண்களி (ceramic), துருப்பிடியா உருக்கு, பிளாஸ்டிக்கு போன்றவற்றினால் ஆக்கப்படுகின்றன. இவை தவிர, சலவைக்கல், காங்கிறீட்டு, தெராசோ, மரம், கல், செப்பு, கண்ணாடி போன்ற பொருட்களும் கழுவுகிண்ணங்கள் செய்வதற்குப் பயன்படுவது உண்டு.

வடிவமைப்பு

தொகு

கழுவு கிண்ணங்கள் அவை பயன்படும் சூழல், செயற்பாட்டுத் தேவைகள், உள்ளக அழகூட்டற் தேவைகள் என்பவற்றுக்கு இணங்கப் பல வடிவமைப்புக்களில் செய்யப்படுகின்றன. நிலத்தில் பொருத்தப்படும் வகையில் காலோடு கூடிய கிண்ணங்களும், சுவரில் பொருத்தத்தக்க கிண்ணங்களும் உள்ளன. பிற மேற்பரப்புக்களின் மேல் வத்துப் பொருத்தும்படியான விளிம்புகளுடன் கூடிய கிண்ணங்களும், அத்தகைய மேற்பரப்புகளுக்கு அடியில் பொருத்தக்கூடிய விளிம்பற்ற கிண்ணங்களும் விற்பனைக்கு உள்ளன. வேலைப்பரப்புகளுடன் சேர்த்து ஒரே செய்பொருளினால் ஆக்கப்படும் கிண்ணங்களும் உள்ளன. தற்காலத்தில் முற்றிலுமாகவே வேலை மேற்பரப்பின் மேல் பொருத்தப்படும் கிண்ணங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

முன்னர் கூறியபடி பயன்படவுள்ள நீர்வாய்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கிண்ணங்கள் அவற்றைப் பொருத்துவதற்காக அமைந்த ஒன்று, இரண்டு அல்லது மூன்று துளைகளுடன் செய்யப்படுகின்றன. சில கிண்ணங்களில் சவர்க்காரம் வைப்பதற்கான இடமும் கிண்ணத்திலேயே அமையும்படியும் வடிவமைக்கப்படுவது உண்டு.

இவற்றைவிடப் பல்வேறு நிறங்களிலும், வடிவங்களிலும் கழுவுகிண்ணங்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. புதிய பிளாஸ்டிக்குச் செய்பொருட்களின் வருகையினால் ஒளிபொருந்திய பல நிறங்களில் கழுவு கிண்ணங்களை உருவாக்குவது இயலுமானதாகி உள்ளது. அத்துடன் கழிப்பறைகளில் பொருத்தப்படுகின்ற பிற பொருத்து பொருட்களுடன் பொருத்தமாக அமையும் பொருட்டு கழுவு கிண்ணங்களும் அவற்றுடன் சேர்த்து ஒரே தொகுதியாக அமையும்படி வடிவமைக்கப்படுவதும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கழுவு_கிண்ணம்&oldid=4159479" இலிருந்து மீள்விக்கப்பட்டது