நீராவிக் கப்பல்

நீராவிக் கப்பல் என்பது, செலுத்துவதற்கான முதன்மை முறையாக நீராவி ஆற்றலைப் பயன்படுத்தும் கப்பல் ஆகும். இங்கே நீராவி ஆற்றல், சுழலுந்திகளை அல்லது துடுப்புச்சில்லுகளை இயக்குவதன் மூலம் கப்பல் செலுத்தப்படுகிறது.

பின்லாந்தைச் சேர்ந்த எசு/எசு உக்கோபெக்கா என்னும் நீராவிக் கப்பல்.


நீராவிக் கப்பல் என்பது பொதுவாகப் பெருங் கடல்களில் செல்லும் பெரிய கப்பல்களையே குறிக்கும். ஏரிகளிலும், ஆறுகளிலும் செல்லும் சிறிய படகுகள் நீராவிப் படகுகள் என்று அழைக்கப்படுகின்றன. கப்பல்களில் பயன்படுத்துவதற்கான நீராவி எந்திரங்கள் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாயின. எனினும், 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே இவை பரவலான பயன்பாட்டுக்கு வந்தன. ஐக்கிய அமெரிக்காவின் ஆறுகளில் இவற்றின் பயன்பாடு வேகமாக வளர்ந்தது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கடலில் செல்லும் வணிகக் கப்பல்கள், பாய்க் கப்பல்களில் இருந்து, நீராவிக் கப்பல்களாகப் படிப்படியாக மாற்றம் பெற்றன. அக் காலத்தில் மிகவும் பெரிய நீராவிக் கப்பல்களில் கூடத் துணைப் பாய்கள் இருந்தன. அத்திலாந்திக் கடலில் போகுவரத்துச் செய்த பிரெஞ்சுக் கப்பலான "லா டூரீன்" என்பதே பாய்கள் பொருத்தப்பட்டு இருந்த இறுதி நீராவிக் கப்பலாக இருக்கலாம். எனினும் இக் கப்பல் ஒருபோதும் பாய்களைப் பயன்படுத்தியது இல்லை. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அரை நூற்றாண்டுக் காலத்தில் நீராவிக் கப்பல்களுக்குப் பதிலாக டீசலினால் இயங்கும் கப்பல்கள் பயன்பாட்டுக்கு வந்தன. 1860 ஆம் ஆண்டுகளில் இருந்து, 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வளிமச் சுழலிகள் அறிமுகமாகும் வரை பெரும்பாலான போர்க் கப்பல்களில் நீராவி எந்திரங்களே பயன்பட்டன.

சொல்லாட்சி

தொகு

இன்று, அணுவாற்றலால் இயங்கும் போர்க் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும், நீராவியால் இயங்கும் சுழலிகளைப் பயன்படுத்துகின்ற போதும், அவற்றை நீராவிக் கப்பல்கள் என அழைப்பதில்லை. 1870களிலும், 1880களிலும் திருகாணிமுறையில் இயங்கிய நீராவிக் கப்பல்கள், அவற்றின் பெயருடன் "SS" என்னும் முன்னொட்டைக் கொண்டிருந்தன. இது "Screw Steamer" அல்லது "Steam Ship" என்பதன் சுருக்கம் ஆகும். பின்னர் அறிமுகமான துடுப்புச்சில்லுகளைக் கொண்ட நீராவிக் கப்பல்கள் "Paddle Steamers" என்பதன் சுருக்கமான "PS" என்னும் முன்னொட்டைக் கொண்டிருந்தன. இவ்வாறே நீராவிச் சுழலிகளால் இயங்கிய கப்பல்கள் (Turbine Ship) "TS" என்னும் முன்னொட்டைப் பயன்படுத்தின. தற்காலத்தில் டீசல் மோட்டார்களினால் இயங்கும் கப்பல்களின் (Motor-driven Vessels) பெயர்களுடன் "MV" என்னும் முன்னொடுப் பயன்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீராவிக்_கப்பல்&oldid=1361757" இலிருந்து மீள்விக்கப்பட்டது