நீர்ப்பெயற்று

நீர்ப்பெயற்று சங்ககாலத் துறைமுகங்களில் ஒன்று.
சங்க இலக்கியங்களில் வங்கக்கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும்.

கொற்கை – பாண்டிநாட்டுத் துறைமுகம்.
புகார் என்னும் காவிரிப்பூம் பட்டினம் – சோழநாட்டுத் துறைமுகம் பட்டினப்பாலை
எயிற்பட்டினம் – ஓய்மானாட்டுத் துறைமுகம் சிறுபாணாற்றுப்படை [1]
நீர்ப்பெயற்று – தொண்டைநாட்டுத் துறைமுகம் பெரும்பாணாற்றுப்படை [2]
மாமல்லபுரம்
இக்காலக் கடன்மல்லை (மாமல்லபுரம்) நீர்ப்பெயற்று என்னும் துறைமுகம் என அறிஞர்கள் கருதுகின்றனர். அக்காலத்தில் கடல்நீர் வளம் மிக்க ஊர் கடல்-மல்லை. நீர்வளம் மிக்க ஊர் நீர்ப்பெயற்று.
செல்வ வளம்
நீர்ப்பெயற்று ஊரில் உண்ணீர் பாய்ந்தோடும் துறைகளில் நீராடும் மகளிர் தம் அணிகலன்களைக் கழற்றிக் கரையில் கழற்றி வைத்திருப்பார்களாம். அங்கு மேயும் மணிச்சிரல் பறவைகள் அவற்றை இரை எனக் கருதி உண்ண அருகில் செல்லுமாம். அவை இரை அல்லாமை கண்டு கொத்தி எறிந்துவிட்டு அருகிலுள்ள பெண்ணை மரத்தில் உட்காராமல் அந்தணர் வேள்வி செய்ய நட்டிருந்த தூணில் அமருமாம். மணிச்சிரல் வேள்வித்தூணில் அமர்ந்திருக்கும் காட்சி யவனர் விற்ற ஓதிம விளக்கு போல இருக்குமாம்.
நாவாய்
அங்குள்ள கடலில் நாவாய்க் கப்பல்கள் சூழ்ந்திருக்குமாம். வெண்ணிறக் குதிரைகளும் வடநாட்டுச் செல்வங்களும் நாவாயிலிருந்து இறக்குமதி செய்யப்படுமாம். மாடம் மணல் பரப்பில் இருக்கும் மாடி வீடுகளில் அவ்வூர்ப் பரதர் மக்கள் வாழ்ந்தனராம். அந்த மாடி வீடுகளைச் சிலதர் என்று குறிப்பிடப்படும் மக்கள் காவல் புரிந்தனராம். வளர்ப்பினம் உழும் எருதுகள், கறவை மாடுகள், சண்டையிடும் ஆட்டுக்கடாக்கள், அன்னப்பறவைகள் போன்றவை அங்கு விளையாடுமாம். அங்குள்ள மகளிர் பனிக்காலத்தில் கொன்றை பூத்திருப்பது போல் பொன்னணிகள் அணிந்துகொண்டு சிலம்பிலுள்ள முத்துப் பரல்கள் ஒலிக்க வானளாவிய மாடங்களில் வரிப்பந்து விளையாடுவார்களாம். அந்த வளையாட்டில் சலிப்புத் தோன்றினால் முத்துப்போல் வெளுத்திருக்கும் மணல் வெளிக்கு வந்து கழங்கு ஆடுவார்களாம். அவர்கள் விளையாடும் கழங்கு பொன்னால் ஆனதாம். அங்குச் சென்றால் பாணர்கள் ஆமைக் கறியுடன் அரிசி உணவு பெறலாமாம்.
கலங்கரை விளக்கம்
ஏணிப்படியுடன் கூடிய வேயா மாடத்துத் தொங்கவிடப்பட்ட எரியும் ஞெகிழி (தீப்பந்தம்) கப்பல்களுக்கு வழிகாட்டுமாம். [3]
உழவர் விருந்து
இவ்வுரிலுள்ள உழவர்கள் தென்னங்கீற்றுகளால் வேயப்பட்ட குடில்களில் வாழ்ந்தனராம். மஞ்சள் காயும் அவர்களது முற்றங்களில் பலாவும் வாழையும் பழுத்திருக்குமாம். அவற்றைத் தின்று திவட்டிவிட்டால் பாணர்கள் சேப்பங்கிழங்குக் குளம்புடன் உணவு பெறலாமாம்.

அடிக்குறிப்பு

தொகு
  1. அடி 146-163
  2. அடி 311-345
  3. உரவுநீர் வையத்து ஓடுகலம் கரையும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்ப்பெயற்று&oldid=1291386" இலிருந்து மீள்விக்கப்பட்டது