நீலநாக்கு நோய்
நீல நாக்கு நச்சுயிரி | |
---|---|
தீநுண்ம வகைப்பாடு | |
குழு: | Group III (dsRNA)
|
குடும்பம்: | |
பேரினம்: | ஓர்போவைரஸ்
|
இனம்: | நீல நாக்கு நச்சுயிரி (பி.டி வைரஸ்)
|
செம்மறி ஆடுகளைத் தாக்கும் முக்கியமான நோய்களில் ஒன்று நீல நாக்கு நோய் (Bluetongue disease). தமிழ்நாட்டில் மழைக் காலத்திலும் அதன் தொடர்ச்சியாகவும் இந்நோய் செம்மறி ஆடுகளை அதிக அளவில் தாக்கி பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. இது ஆடுகளைத் தவிர எருமை, மான் போன்ற விலங்குகளையும் தாக்கும்.
காரணம்
தொகுஇந்நோய் ரியோவிரிடே எனும் குடும்பத்தைச் சேர்ந்த பி.டி வைரசினால் ஏற்படுகிறது. இந்நோய் கியூலிகாய்டஸ் எனும் ஈ , நோயுள்ள ஆட்டை கடித்தபின் மற்ற ஆடுகளை கடிக்கும் போது பரவுகிறது. இந்த ஈக்கள் மழைக்காலத்தில் வெகுவாக இனப்பெருக்கம் செய்வதால் நீல நாக்கு நோய், இக்காலத்தில் எளிதில் பரவுகிறது. இந்நோய் மழைக்காலங்களில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் காணப்படுகிறது.
அறிகுறிகள்
தொகுநோய் பாதித்த ஆடுகள் அதிக காய்ச்சலுடன் மேய்ச்சலுக்குச் செல்லாமல் சோர்வாகக் காணப்படும். மூக்கு மற்றும் வாயின் உட்பகுதிகள் சிவந்து, மூக்குச்சளி மற்றும் உமிழ்நீர் அதிகம் ஒழுகிக் கொண்டிருக்கும். மூக்கிலிருந்து இரத்தத்துடன் கூடிய சளி வரும். உதடுகள்,ஈறுகள், நாக்கு, மூக்கு மற்றும் காதுகளில் வீக்கம் ஏற்பட்டு புண் உண்டாகும். நாக்கு சில சமயம் தடித்து நீல நீறமாக மாறும். கால் குளம்புகளின் மேல் பகுதி சிவந்து வலியுடன் இருக்கும். கம்பளி இன ஆடுகளில் உரோமம் உடைந்தும், பொலிவிழந்தும் காணப்படுவதால் உரோமங்களின் தரம் மிகவும் குறைந்து விடும். வாயில் கொப்புளங்களும், புண்களும் ஏற்படும். இதனால் ஆடுகளால் மேய முடிவதில்லை. ஆடு உணவு உண்ண முடியாமல் பட்டினியால் இறந்து விடும்.
சிகிச்சை முறை
தொகுஇந்நோய்க்கான சிகிச்சைமுறை எதுவும் இல்லை. பின்வரும் தடுப்பு முறைகளை பின்பற்றலாம்:
- மழைக்காலங்களில் கியூலிகாய்டஸ் ஈயின் இனப்பெருக்கத்தைத் தடுக்க புடாக்ஸ் [டெல்டாமேத்ரின் ] மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் 5 மி.லி. வீதம் கலந்து விசைத் தெளிப்பான் மூலம் ஆடுகளை வெளியேற்றிய பின் ஆட்டுக் கொட்டகையின் தரை, உட்புறச்சுவர்கள், மூலை முடுக்குகள், கொட்டகையைச் சுற்றி உள்ள பகுதிகளில் தெளிக்க வேண்டும்.
- ஆட்டுக் கொட்டகையைச் சுற்றிலும் தண்ணீர் தேங்க விடக்கூடாது.
- ஆட்டுக் கொட்டகையைச் சுற்றி உள்ள புதர்களை நீக்கி விட வேண்டும்.
- கியூலிகாய்டஸ் ஈக்கள் இருட்டும் நேரத்திலும், விடியற்காலை நேரத்திலும் மட்டுமே வந்து ஆடுகளைக் கடிப்பதால், இந்நேரங்களில் ஆடுகளை வெளியே விடாமல் வலை போட்ட கொட்டகையில் அடைத்து வைக்க வேண்டும்.
- கொட்டகையினுள் கியூலிகாய்டஸ் ஈக்களைத் தவிர்க்க விளக்குப் பொறி வைக்கலாம்.
- .கியூலிகாய்டஸ் ஈக்களை அழிக்க கொட்டகையில் வேப்பம் புண்ணாக்கு புகை போடலாம்.
- ஆடுகளை புடாக்ஸ் மருந்து கலந்த தண்ணீரில் [1 லிட்டருக்கு 2 மி.லி] மருந்து குளியல் கொடுக்க வேண்டும்.
- நோய்க் கண்ட ஆடுகள், வாய்ப்புண்கள் மற்றும் கால் பாதிப்பினால் மேய்ச்ச்சலுக்குச் செல்ல முடியாமலும், தீவனம் உட்கொள்ள முடியாமலும் அவதிப்படும். எனவே நோய் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்குத் தனி கவனம் செலுத்தி அரிசி அல்லது கேழ்வரகு அல்லது கம்பு கஞ்சி கொடுத்து கவனிப்பதன் மூலம் இறப்பைத் தவிர்க்கலாம்.
- இந்த நோயை தடுக்க வருடம் ஒருமுறை மழைக்காலத்திற்கு முன்பு நீல நாக்கு நோய் தடுப்பூசி போட வேண்டும். இந்த தடுப்பூசி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் கிடைக்கிறது.