நீலப் பையன்

நீலப் பையன் (The Blue Boy) என்பது, "தாமசு கெயின்சுபரோ" என்பவரால் வரையப்பட்ட, நீல உடை அணிந்த ஒரு பையனைக் காட்டும் முழு அளவு ஓவியம். இது எண்ணெய் வண்ணத்தில் வரையப்பட்டுள்ள இது தற்போது கலிபோர்னியாவின் சான் மரீனோவில் உள்ள அன்டிங்டன் (Huntington) நூலகத்தில் உள்ளது.[2] கெயின்சுபரோவின் மிகப் பிரபலமான ஆக்கமான இது, செல்வந்தரான வன்பொருள் வணிகர் ஒருவரின் மகனான யொனதன் புட்டால் (1752-1805) என்பவனின் படம் எனச் சொல்லப்பட்டாலும், இதை எவரும் ஐயத்துக்கு இடமின்றி நிறுவவில்லை. ஒரு தோற்றப் படமாக இருக்கும் அதேவேளை இது ஒரு வரலாற்று ஆடை ஆய்வும் ஆகும். 17 ஆம் நூற்றாண்டு உடையணிந்து காணப்படும் இச் சிறுவனின் படம் பெயர் பெற்ற ஓவியரான அந்தனி வான் டைக் என்பவருக்கு கெயின்சுபரோவின் அஞ்சலி எனக் கருதப்படுகிறது. இவ்வோவியம் வரையப்பட்ட துணியில் ஏற்கெனவே ஏதோ ஒன்று வரையப்பட்டிருந்து அதன் மேலேயே "நீலப் பையன்" ஓவியத்தை ஓவியர் வரைந்துள்ளார். படம் ஏறத்தாழ ஒரு முழு அளவுப் படம் ஆகும். இது 48 அங்குல (1,200 மிமீ) அகலமும், 70 அங்குல (1,800 மிமீ) உயரமும் கொண்டது. கெயின்சுபரோவின் போட்டியாளரான சர் யோசுவா ரேனால்ட்சு என்பவரின் ஆலோசனைக்குப் பதிலாகவே இந்த ஓவியத்தை அவர் வரைந்ததாகச் சொல்லப்படுகிறது.[3]

நீலப் பையன்
ஓவியர்தாமசு கெயின்சுபரோ
ஆண்டு1779
ஆக்கப் பொருள்கன்வசில் எண்ணெய் வண்ணம்
பரிமானங்கள்177.8 cm × 112.1 cm (70.0 அங் × 44.1 அங்)
இடம்அன்டிங்டன் நூலகம்[1], சான் மரீனோ, கலிபோர்னியா

வரலாறு

தொகு

1796 ஆம் ஆண்டில் தனது நொடிப்புநிலையை அறிவிக்கும் வரை இவ்வோவியம் யொனதன் புட்டாலின் உடைமையாக இருந்தது. இதை முதலில் அரசியல்வாதியான யோன் நெசுபிட் வாங்கினார். பின்னர் இதைத் தோற்றப்பட ஓவியர் யோன் ஆப்னர் (John Hoppner) வாங்கினார். 1809 ஆம் ஆண்டளவில் "நீலப் பையன்" ஓவியம் ஏர்ள் குரொசுவீனரின் சேகரிப்பில் இருந்தது. பல ஆண்டுகள் இவரது வாரிசுகளிடம் இருந்த இவ்வோவியத்தை 1921 ஆம் ஆண்டு வெஸ்ட்மின்ஸ்டர் டியூக், வணிகர் யோசேப் டுவீன் என்பவருக்கு விற்றார்.[4] பிரித்தானிய நிறுவனம், அரச அக்கடமி போன்ற பல்வேறு இடங்களில் இடம்பெற்ற கண்காட்சிகளில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஓவியத்தின் அச்சுப் படிகள் மிகவும் பிரபலமாயின.

இந்த ஓவியத்தால் தூண்டப்பட்ட செருமன் திரைப்படத் தயாரிப்பாளர் பிரெட்ரிக் வில்லியம் முர்னோ (Friedrich Wilhelm Murnau) தனது முதல் படத்தை Knabe in Blau (நீல உடைப் பையன்) என்ற பெயரில் தயாரித்தார்.[5] இது பின்னர் அமெரிக்கத் தொடர்வண்டிப்பாதை முன்னோடியான என்றி எட்வார்ட்சு அன்டிங்டன் என்பவருக்கு $728,800 (£182,200) விலைக்கு விற்கப்பட்டது.[6] இது பிரித்தானியாவில் எதிப்பலையை உருவாக்கியது. இதுவே அக்காலத்தில் ஓவியம் ஒன்றுக்குக் கிடைத்த ஆகக் கூடிய விலை எனச் சொல்லப்படுகிறது. ஆனால், 1921 நவம்பர் 11 ஆம் தேதியிட்ட "நியூயார்க் டைம்சு" செய்தித் தாளின்படி வாங்கிய விலை $640,000 ஆகும் இது, 2014 ஆம் ஆண்டு மதிப்பில் 8.5 மில்லியன் அமெரிக்க டாலருக்குச் சமம்.[7] 1922 இல் இது கலிபோர்னியாவுக்குச் செல்லுமுன், இவ்வோவியம் தேசியக் காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தபோது 90,000 பேர்கள் இதனைப் பார்வையிட்டனர். காட்சிக் கூடத்தின் பணிப்பாளர் சார்லசு ஓம்சு (Charles Holmes) இவ்வோவியத்துக்குப் பிரியாவிடை அளிக்கும் வகையில் அதன் பின் பக்கத்தில் "Au Revoir" (மீண்டும் சந்திப்போம்) என எழுதி, "C.H." எனக் கையொப்பம் இட்டுள்ளார்.[8]

இந்த ஓவியத்தால் "பாப்" இசைக் கலைஞர் ராபர்ட் ரவுசன்பர்க் ஓவியத்தின்பால் கவரப்பட்டார்.[9] "நீலப் பையன்" ஓவியம் பெரும்பாலும், அன்டிங்டன் நூலகத்தில் அதற்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள தாமசு லாரன்சின் "பிங்கி" என்னும் ஓவியத்துடன் இணையாகப் பார்க்கப்படுகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. Children's Encyclopædia Britannica, (London 1969) vol.8, p.12 plate
  2. "Jonathan Buttal: The Blue Boy (c 1770)". The Huntington Library. Archived from the original on 19 சூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 7 திசம்பர் 2009.
  3. Gower, Ronald Sutherland. Thomas Gainsborough. 1903, page 77-78 (the original might be available in Google Books at [1], last accessed 2 October 2012).
  4. "Duveens offer a Reynolds to Louvre," New York Times, 19 October 1921
  5. Bock, Hans-Michael (2009). Hans-Michael Bock, Tim Bergfelder (ed.). The concise Cinegraph: encyclopaedia of German cinema. Berghahn Books. p. 334. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57181-655-9.
  6. Thorpe, James Ernest, Henry Edwards Huntington, A Biography, Berkeley: University of California Press, 1994, p. 438.
  7. "WolframAlpha conversion".
  8. ""Blue Boy's" Transfer Begins in Secrecy" (PDF). The New York Times. 26 January 1922. http://query.nytimes.com/mem/archive-free/pdf?_r=1&res=9E00E6DC1531EF33A25755C2A9679C946395D6CF. பார்த்த நாள்: 7 December 2009. 
  9. Tuchman, Phyllis (16 May 2008). "The Invincible Robert Rauschenberg". Obit Magazine. Archived from the original on 22 ஜூலை 2009. பார்க்கப்பட்ட நாள் 6 December 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலப்_பையன்&oldid=3587370" இலிருந்து மீள்விக்கப்பட்டது